4ம் மாடியில் நான்….!!!

நள்ளிரவில் நான் 4ம் மாடியை நெருங்கிட அந்த இருள் மண்டிய சூழல், நிசப்தம் எல்லாம் என்னை ஒரு மரண வாசலுக்கு அழைத்து செல்வதுபோல் இருந்தது. அச்சம், மரணபயம், வலி , வெறுப்பு, விரக்தி எல்லாமே கலந்த ஒரு மன நிலை. என்னுடைய பெயர் விபரங்களை ஒரு புத்தகத்தில் பதிந்த பின் நான் ஒரு கம்பிக் கூட்டுக்குள் அடைக்கப்பட்டேன். எனது கையின் காயமும் , நெஞ்சின் வலியும் என்னை மிகவும் வருத்தியது. நிந்திரை கூட கொள்ள முடியாமல் இருந்தது.

எனது இடப்பக்கத்தில் இருந்த கூண்டில் 7-8 பேர் அடைக்கபட்டு இருந்தார்கள். அதற்குள் டாக்டர். சத்தியமூர்த்தியும், எனக்கு முன்னால் இருந்த கூண்டில் சுமார் 20 பேர் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதற்குள் டாக்டர் . சண்முகரசாவும், டாக்டர். செழியனும் இருந்தார்கள். அவர்களுடன் கதைக்க அனுமதி இருக்கவில்லை. எனக்கு காயம் ஏற்பட்டதால் நான் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று நலமாக இருப்பேன் என அவர்கள் நினைத்திருந்தார்கள்.ஆனால் எனக்கு ஒரு கிழமை ஆகியும் சிகிற்சை அளிக்க வில்லை என்று அறிந்ததும் அவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். அதுமட்டுமல்ல எங்களுடை சிறை வாழ்கையும் எங்கள் விடுதலையும் முகவும் சிக்கல் ஆகப்போகிறது என்பதையும் ஊகித்துகொண்டார்கள்.

எங்கள் சிறை வாழ்கையை பற்றி எழுதவே என்னால் முடியவில்லை . எனது இந்த சிறை அனுபவம் எல்லாம், தற்பொழுது இலங்கை சிறையில் பல ஆண்டுகளாக வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எண்ணி கவலை கொள்கிறது. சிறையில் படும் வேதனைகள்,கொடுமைகளுக்கப்பால், தமது மனைவி,பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்களை பாராது, தங்கள் இளமை காலங்களை சிறையிலேயே கழித்து, படும் வேதனையை என்னவென்று சொல்வது. இலங்கையில் கப்பம் வாங்கியவர்கள், ஆட்களை கடத்தியவர்கள், கொலைகளை புரிந்தவர்கள் எல்லோரும் சுதந்த்திரமாகவும் உல்லாசமாகவும் வாழ, அப்பாவி இளைஞர்கள் மட்டும் சிறையில் வாடுவதா…!.

அவர்களின் விடுதலை வேண்டி நாமும் குரல் கொடுப்போம்.

Dr.துரைராஜா வரதராஜா.

(www.eelamalar.com)