“A PRIVATE WAR” OFFICIAL TRAILER Marie Colvin Biopic

“A PRIVATE WAR” OFFICIAL TRAILER Marie Colvin Biopic
நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது.
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் திரைப்படம் இது.

ஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.

அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.

“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர்.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இடையேயான தகவல் பரிமாற்றப்பணியை இறுதி நேரத்தில் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது முயற்சியால் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் “வெள்ளைக்கொடியுடன் ” சென்றனர் பின்னர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் சர்ச்சைக்குரிய விடயமாகியிருந்தன.
தற்போது இலங்கையரசுக்கு எதிரான போர் குற்றசாட்டில் இவர் ஒரு முக்கியமான சாட்சியாகக் கருதப்பட்டார்.மிகச்சர்ச்சைக்குரியதான சனல்4 தொலைக்காட்சியின் ;இலங்கையின் கொலைக்களம்;’ ஆவணப்படத்தில் இவரது தகவல்களும் பதிவாக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.

கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்..

மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே!
எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.