அடுத்த அவைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம்?

வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவர்பதவியை இராஜினாமாச் செய்யவேண்டுமென மாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இவர்கள் இருவரும் கூட்டாக நடாத்திய செய்தியாளர்சந்திப்பிலேயே தெரிவித்துள்ளனர்.

அவையின் ஜனநாயக மாண்பினை மீறி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் கையளித்தமை அனைத்துத் தரப்பினராலும் அருவருக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது.

வழமையாக முதலமைச்சர்மீதோ, அமைச்சர்கள்மீதோ நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாக இருந்தால், முதலில் அதனை அவைத் தலைவரிடமே கையளிக்கவேண்டும். ஆனால் அவர் அதனை சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி விவாதத்திற்கு விடுக்கவேண்டும். அதுவே நடைமுறையாகும். ஆனால் அதையெல்லாம் தாண்டி பதவியாசையினில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களை தலைமை தாங்கி அழைத்துச்சென்று முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கையளித்துள்ளமை மன்னிக்கமுடியாததொன்றாகும். அதே பிரேரணையில் பிரதி அவைத்தலைவரும் ஒப்பமிட்டிருப்பதால் அவரும் பதவியினை துறப்பதே பொருத்தமானதாகும்.

இது தொடர்பில் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசிக்கவுள்ளோம். அத்துடன் பங்காளிக் கட்சிகளையும் தாண்டி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனும் பேசவுள்ளோம். அவர்களில் பலரும் தற்போது சி.வி.கே.சிவஞானத்தின் நடவடிக்கையினால் அதிருப்தியுற்றுள்ளனர்.

இந்நிலையில் புதிய அவைத் தலைவராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.