அன்னம்மாவின் உண்ணாவிரதமும், இந்தியப் படையின் தந்திரமும்!!: அறப்போரில் குதித்த அன்னை பூபதி!!

அன்னம்மாவின் உண்ணாவிரதமும் இந்தியப் படையின் தந்திரமும்!!: அறப்போரில் குதித்த அன்னை பூபதி!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 122)

• அறப்போரில் குதித்த அன்னை பூபதி.

அன்னையர் முன்னனி.

1988ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அன்னை பூபதியின் உண்ணா நோன்பு.

மட்டக்களப்பிலும் இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப் புகுந்து அத்துமீறல்களில் ஈடுபட்டனர். புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மட்டக்களப்பு மாமாங்கேசுவர் ஆலயத்துக்குள் ஒருநாள் இந்தியப் படையினர் தடதடவென்று புகுந்தனர். பூட்ஸ்களைக் கூட கழற்றவில்லை. உள்ளே இருந்த அர்ச்சகர் பயந்து போனார்.

இந்தியப் படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்த படி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அர்ச்சகரும், கோயில் ஊழியர்களும் துப்பாக்கயின் பின்புறத்தால் தாக்கப்பட்டனர்.

புலிகள் ஆயுதங்களுடன் கோவிலுக்குள் புகுந்துவிட்டனர் என்று கருதியே தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் புலிகள் யாரும் அங்கே மாட்டவில்லை. “புலிகள் வந்தால் தகவல் தாருங்கள்” என்று எச்சரித்து விட்டுப் போய் விட்டனர்.

கைதுகள், பாலியல் பலாத்காரங்கள், படுகொலைகள் போன்றவற்றால் மட்டக்களப்பு மக்கள் கொதித்துப் போயிருந்தனர்.

அன்னையர் முன்னணியினர் இந்தியப் படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ஆயினும் அத்துமீறல்கள் தொடர்ந்தன.

மட்டக்களப்பு நகரில் வெள்ளைப் பாலத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்கள் இருவரை இந்தியப் படையினர் கைது செய்தனர்.

அருகில் உள்ள கடையொன்றுக்குள் அவர்களைக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள்.

அதன் பின்னர்தான் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தனர் மட்டக்களப்பு அன்னையர் முன்னணியினர்.

மக்கள் ஆதரவு

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோவிலின் முன்பாக அன்னையர் முன்னணியினர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மக்களும், மாணவ, மாணவிகளும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தினர் மட்டக்களப்பு சந்தையில் மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

மக்கள் பயந்த போய் சிதறி ஓடிய போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய போது இந்தியப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இச் சம்பவத்தின் காரணமாக தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றிக் கொண்டது அன்னையர் முன்னணி.

“போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”

“விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்”

என்னும் இரு கோரிக்கைகளை முன்வைத்தே உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு உட்பட வெளிநாடுகள் பலவற்றில் இந்த உண்ணாவிரத போராட்ட செய்தியை எட்டச் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.

ஆரம்பத்தில் இந்தியப் படையினர் அலட்சியமாக இருந்தபோதும், உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்தமையினாலும், வெளியுலகக் கவனத்தை திருப்பத் தொடங்கியமையாலும் அச்சம் அடைந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதுடில்லியில் இருந்து இந்திய அமைதிப் படைத் தலைமைக்கு உத்தரவு பறந்து வந்தது.

1988 ஜனவரி 7ம் திகதி அன்னையர் முன்னனியுடன் திருக்கோணமலையில் இந்தியப் படை அதிகாரி பிரிகேடியர் சண்டேஸ் பேச்சு நடத்தினார்.

“புலிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லுங்கள். அதன் பின்னர் போர் நிறுத்தம் செய்யலாம், பேச்சும் நடத்தலாம்” என்று கூறினார் பிரிகேடியர் சண்டேஸ்.

தூதருடன் பேச்சு

பேச்சுவார்த்தை முறிந்தது. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

இந்தியத் தூதுவர் திக்ஷித் அன்னையர் முன்னணியினரை பேச்சு நடத்த அழைத்தார்.

பெப்ரவரி 10ம் திகதி கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயுத ஒப்படைப்புப் பற்றியே திக்ஷித்தும் வலியுறுத்தினார். அதனால் பேச்சுப் பயனளிக்கவில்லை. பேச்சுக்கள் பயனளிக்காமையால் மிரட்டலில் ஈடுபட்டனர் இந்தியப் படையினர்.

“புலிகள் தூண்டி விட்டுத்தான் இவர்கள் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். மிரட்டினால் பயந்து விடுவார்கள்” என்று நினைத்து விட்டனர்.

பெப்ரவரி 12,13,14 ம் திகதிகளில் மட்டக்களப்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாமாங்கப் பிள்ளையார் கோவில் பகுதியில் இந்தியப் படையினர் குவிந்தனர்.

உண்ணாவிரதம் இருந்த பெண்களை எழுந்து செல்லுமாறு கூறினார்கள். மிரட்டலுக்குப் பணியாமல் உண்ணாவிதம் தொடர்ந்தது.

அன்னையர் முன்னணியின் ஆலோசகராக கிங்ஸ்லி இராசநாயகத்தின் வீட்டை முற்றுகையிட்டு அவரைக் கைது செய்தனர்.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சற்றும் மனம் தளராமல் செயற்பட்டனர் அன்னையர் முன்னணியினர்.

சாகும்வரை உண்ணாவிரதம்

உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அறிவித்தனர்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க பூபதி கணபதிப்பிள்ளை, அன்னம்மா டேவிட் இருவரும் போட்டி போட்டு;க் கொண்டு வந்தனர்.

இருவருமே இணைபிரியாத தோழிகளாக அன்னையர் முன்னணியின் போராட்டங்களில் ஈடுபட்டனர். அன்னனையர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

“நான் முதலில்” என்று விடாப்பிடியாக நின்றமையால் சீட்டுக் குலுக்கிப் போட்டு தெரிவு செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

அன்னம்மா டேவிட்டின் பெயர்தான் வந்தது. அன்னை பூபதிக்கு கவலை.

பெப்ரவரி மாதம் 19ம் திகதி மாமாங்க ஆலயம் முன்பாக அன்னம்மா டேவிட் சாகும் வரை உண்ணாவிரத்தை ஆரம்பித்தார்.

அன்னம்மாவுக்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதங்கள் பல இடங்களில் நடைபெற்றன.

தமிழ் பெண்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் பெண்களும் அன்னம்மாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அன்னம்மா டேவிட் உயிரிழந்தல் அன்னையர் முன்னணியினரே அவரது மரணத்திற்கு காரணம் என்று கைது செய்வோம். சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியது இந்தியப் படை.

எந்த மிரட்டலும் பயனில்லாமல் போனதால் தந்திரமான ஒரு திட்டத்தைப் போட்டனர் இந்தியப் படையினர்.

அன்னம்மாவின் பிள்ளைகளை நைசாக பேசி, ஆசை காட்டியும், தாயார் மீதுள்ள பாசத்தை பயன்படுத்தியும் அவர்கள் மூலமாக கடிதம் ஒன்று எழுதுவித்தனர்.

“எங்கள் தாயாரை கட்டாயப்படுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். தயவு செய்து எங்கள் தாயாரை மீட்டுத் தாருங்கள்” என்று கடிதம் பெறப்பட்டது.

அக்கடித்ததுடன் வந்த இந்திய் படையினர் அன்னம்மாவைக் கொண்டு சென்று விட்டனர்.

தங்கள் திட்டம் பலித்ததில் இந்தியப் படை அதிகாரிகளுக்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சி.

உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல் அன்னையர் முன்னணியினரையும் அடக்கியாகி விட்டது? பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தனர். அவரகளது கணிப்பும், நினைப்பும் தப்பாகியது.

அன்னை பூபதி

“அன்னம்மா போனால் என்ன, நான் இருக்கிறேன்” என்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அன்னை பூபதி.

அன்னம்மா டேவிட் போல தன்னையும் இந்தியப் படையினர் பிடித்து விடலாம் என்பதால், முன்கூட்டியே ஒரு கடிதம் எழுதினார் அன்னை பூபதி.

“நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே எனது கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். நான் நினைவிழந்து போகும் நிலை ஏற்பட்டாலும் என்னுடைய கணவரோ, பிள்ளைகளோ, உறவினர்களோ என்னைக் காப்பாற்றவோ, தூக்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அன்னை பூபதி.

மார்ச்-19, 1988 அன்று தன் இரு கரங்களையும் கூப்பியவாறு மாமாங்க வீதியை வலம் வந்தபின்னர் தன் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அன்னை பூபதி.

அப்போது அங்கு திரண்டு நின்ற மாணவ, மாணவிகள் இந்தியப் படையினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

“இந்தியப் படையே திரும்பிப் போ”
“அன்னை பூபதியை சாகடிக்காதே”
“புலிகளுடன் பேச்சு நடத்து”
“தமிழீழத்தை சுடுகாடாக்காதே”
போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வடக்கு-கிழக்கில் பல்வேறு கிராமங்களில் அன்னை பூபதியின் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு ஆரயம்பதியில் இருந்து புறப்பட்ட அன்னையர் முன்னணி ஊர்வலம் இந்தியப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது தாய்மார்கள் பலர் காயமடைந்தனர்.

எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போல அமைந்தது இச்சம்பவம்.

இந்திய இராணுவ நடவடிக்கையை கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால் நடத்தப்பட்டது,

மறுபடி மிரட்டல்

அன்னை பூபதியின் உண்ணாவிரதப் பேராட்டம் எழுச்சியடையத் தொடங்கி விட்டது.

எங்கும் பேராதரவு கிளர்ந்தெழுந்து விட்டது.

மீண்டும் இரகசிய சதித்திட்டம் ஒன்று வகுத்தனர் இந்தியப் படையினர்.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதப் பந்தலில் சர்வமதப் பாடல்களையும் பாடியபடி அமர்ந்திருக்கின்றனர்.

அப்போது இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் ஓட்டமும், நடையுமாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார்.
பரபரப்பாக ஒரு தகவலைச் சொன்னார் அந்த அதிகாரி.

“பூபதியைக் கடத்த புலிகளுக்கு எதிரான இயக்கங்கள் திட்மிட்டிருக்கின்றன. கவனமாக இருங்கள்” என்றார் அந்த அதிகாரி.

அப்படிச் சொன்னால் பயந்து விடுவார்கள். உயிரபாயம் நேரும் என்று அன்னையர் அஞ்சுவார்கள் என்று கருதியே கூறினார்.

ஆனால் நடந்ததோ நேர் மாறான நிகழ்ச்சி.

அன்னையர்கள் பலர் ஒன்றாகத்திரண்டு பூபதியைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

“எங்களைச் சுட்டுப்போட்டு விட்டுத்தான் அன்னை பூபதியைத் தொட முடியும்” என்று கூறினார்கள். அப்போது தொலைவில் துப்பாக்கிகளின் வேட்டொலிகள் கேட்கின்றன.

மக்களை பீதிகொள்ளச் செய்யும் திட்டத்துடன் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே அதுவாகும்.

துப்பாக்கி வேட்டொலி கேட்ட அன்னை பூபதி எழுந்து அமர்ந்து கொள்கிறார்.

“துப்பாக்கி மிரட்டல்களுக்கு இந்தப் பூபதி அசையமாட்டாள்” என்று சொல்கிறார்.

ஆனாலும் பூபதியின் உடல் நிலை மோசமாகிவிட்டது. களைத்துப் போய் சுருண்டு கிடக்கிறார்.

மருத்துவர்கள் பரிசீலிக்கின்றனர். அபாயக் கட்டத்தை நெருங்குகிறார் என்று அறிவிக்கின்றனர்.

எங்கும் செய்தி பரவுகிறது. சர்வ தேசப்; பத்திரிகையாளர்கள் மட்டக்களப்பில் குவிகிறார்கள்.

இந்தியப் படையினரின் கோபம் எல்லை மீறுகிறது.

வணபிதா சந்திரா பெர்னாண்டோ, கிங்ஸ்லி இராசநாயகம், பூபதியன் கணவர் கணபதிப்பிள்ளை ஆகியோர் இந்தியப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

கணபதிப் பிள்ளையிடம் நயமாகவும், பதமாகவும் பேசிப் பார்கிறார்கள் படை அதிகாரிகள். அவர் மசியவில்லை என்பதால் மிரட்டியும் பார்க்கிறார்கள். பயனில்லை.

அன்னை பூபதியைக் காண மக்கள் வெள்ளம் மாமாங்க வீதியில் திரள்கிறது.

எங்கும் சோகமயம்.

இந்தியப் படை வாகனங்கள் ஓடித் திரிகின்றன. துப்பாக்கிகளோடு ரோந்து செல்லும் படையினரை கோபாவேசத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பித்து 31வது நாள்! மொத்தம் 31 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியின் இறுதி நாள் அதுதான்.

19.04.88ல் அன்னை பூபதி மரணத்தை அடைந்து கொள்கிறார்.

மக்கள் மத்தியில் அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் நடந்தது.

நாவலடிக் கடற்கரையில் அந்த அன்னையில் திருவுடலைக் காண அலை கடலுக்க போட்டியாக மக்கள் கடலும் திரண்டு வந்தது.

அன்னை பூபதியின் மரணம் பற்றி புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் கருத்து இது:

“ஒரு சாதாரண தாயின் அசாதாரண துணிவாகவும், அலாதியான தேசியப் பற்றுணர்வாகவும் அன்னையின் அறப் போர் அமைந்தது. தர்மத்தின் குரலாக, தனித்து நின்று அவர் ஒரு சாம்ராஜ்யத்தின் அதர்மத்தை எதிர்த்தார். நீதியின் நெருப்பில் தன்னை எரித்து அநீதிக்குச் சவால் விடுத்தார்.

சாவுக்கு அஞ்சாத மனோதிடம் படைத்தவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.

அன்னை பூபதியும் ஒரு சரித்திரத்தை படைத்தார்”

பூபதி அன்னையின் நினைவாக ஒரு கவிஞர் எழுதியது அது:

“அகராதியில்
அழித்தெழுதிக் கொள்ளுங்கள்
பூபதி அம்மா
ஒரு பெண்ணின் பெயரல்ல..
பூகம்பத்துக்குப் புதுப்பெயர்
இவள்
காலக்குரலுக்கு
சேலை கட்டிய தோற்றம்”

அன்னை பூபதி நினைவுதின சுவவொட்டியில் மற்றொரு கவிதை:

“நெஞ்சில் விடுதலை
நெருப்பைச் சுமந்து நீதி கேட்டிவள் நிமிர்ந்தாள்
பஞ்சில் பொறியெனப்
பாரதப் படைகளை
பார்த்து விழிகளைத் திறந்;தாள்”