அரசியல் கைதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை தீர்வு வழங்கப்படும் – மைத்திரி உறுதி!

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமையே தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாத காரணத்தினாலேயே குறித்த தீர்வானது திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பானது மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில்,

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,டெலோ கொள்கை பரப்பு செயலாளர் கணேஸ், வல்வெட்டிதுறை முன்னாள் நகரசபை உபதலைவர் க.சதீஸ் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான தி.கோவிந்தன், மதியரசன் சுலக்சனின் தாயார், கணேசன் தர்சனின் தாயாரும் தம்பியும் மற்றும் இராசதுரை திருவருளின் மனைவியும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுபுறம் மைத்திரிபாலசிறிசேனவுடன் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகலரத்னாயக்க ஆகியோருடன் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிபரும் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகள் முறையான விசாரணையின் பின் விரைவாக விடுதலை செய்யப்படல் வேண்டும். அல்லது பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் நாட்டில் புதியதொரு அத்தியாயத்தினை ஏற்படுத்த முடியும் எனவும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளையும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழ் தரப்புக்களால் கோரப்பட்டது.

அதற்கு பதிலளித்த் வவுனியாவில் வழக்கினை நடாத்துவதற்கு சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரச தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழ் தரப்பு அச்சுறுத்தல் இருப்பதென்பதையே ஏற்க முடியாது. இலங்கை புலனாய்வு பிரிவினர் சிறந்த கட்டமைப்புடன் காணப்படுகின்ற ஓர் புலனாய்வ பிரிவாகும் அப்படியானதொரு அமைப்பு காணப்படுகையில் அச்சுறுத்துகின்ற பிரிவினரை கண்டுபிடிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். வெறுமனே அச்சுறுத்தல் இருப்பதைக்; காரணமாக கொண்டு வழக்கினை மாற்றியுள்னோம் எனக்கூறுவது நியாயமற்ற செயல் என்பதை சுட்டிகாட்டியுள்ளது.

இதனிடையே வடமாகாண ஆளுனரிடம் ஜனாதிபதி கருத்து கேட்ட போது அவரும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது முக்கியமானதாகும். சிறைகளில் உள்ள மூவின மக்களையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இருப்பினும் நாட்டின் சட்ட ஒழுங்குகளையும் கருத்தில் கொண்டு விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் நையாண்டியாக கேட்டுகொண்டதாக தெரியவருகின்றது.