அரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…! [பாகம்- 3]
மார்க்கியத்தைத் தமது புரட்சிகர சித்தாந்தமாக வரித்துக் கொண்ட சிங்கள – தமிழ் இடதுசாரி இயக்கங்களும் பயங்கரவாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழீழ ஆயுதப் புரட்சி இயக்கத்தையும், அதன் போராட்ட வடிவங்களையும், விமர்சித்து வருவது எமக்கு விந்தையைக் கொடுக்கிறது.
மார்க்சியமானது சகல சமூக, அரசியல் சக்திகளையும், பொருளுற்பத்தி வடிவங்களையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றுப் பொருள்முதல்வாத, இயங்கியல் தத்துவார்த்த அடிப்படையில் நோக்குவதை நாம் அறிவோம்.
நிதர்சனமான யதார்த்த பூர்வமான உண்மை நிலைகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் என்ற ரீதியில் திண்ணியமாக ஆய்வு செய்யும் அவசியத்தை மார்க்சீச-லெனினிச தரிசனம் வற்புறுத்துகிறது. “Concrete Analysis Of Concrete Conditions” என்று லெனின் சதா வலியுறுத்துவதும் இந்த ஆய்வு பற்றியதே.
வரலாற்று ரீதியான அரசியல் மெய்யியல்பினை, அதன் நிதர்சனத்தை, அதன் புறநிலை உண்மையை. அது பிரிவாக மெடுத்துள்ள முரண்பாட்டுக் களத்தினை, பூரணமாகத் தரிசிக்கத் தவறும் மார்க்சீயவாதிகள், வெகுசனப் போராட்ட சக்திகளையும், அவற்றின் புரட்சிகர தன்மைகளையும், புரிந்து கொள்ளப் போவதில்லை.
இந்தக் குருடுத் தனத்தாலேயே பழைய மார்க்சீய வாதிகள் ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையையோ அன்றி சிங்களப் பேரினவாத சித்தாந்த முரண் பாட்டினையோ செம்மையாக கிரிகித்துக் கொள்ள முடியவில்லை.
இதுவே அவர்களது அரசியல் வீழ்ச்சிக்கு காரணீயமாக அமைந்தது. தமிழீழத்தில் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு என்பது ஒரு வரலாற்று ரீதியான அரசியல் உண்மை ( Armed Resistance in Tamil Eelam is a Concrete Historical Political Reality) ஈழத் தமிழரின் தேசிய விடுதலை எழுச்சியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு புரட்சிகர சக்தி. இந்த புரட்சிகர அரசியல் போராட்ட சக்தியை அதன் வரலாற்றுப் பரிணாமத்தில், அதாவது ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்று வளர்ச்சியில் ஆய்ந்தறிந்து கொள்வதை விடுத்து, பயங்கரவாதம் என்று பிற்போக்கான முதலாளியக் கோட்பாட்டில் விமர்சிக்க விழைவது மார்க்சீய அணுக முறை அல்ல.
இதனை இன்றைய வலது குறைந்து இடது சாரிகளும், ரொக்சிவாதிகளும் உணர்ந்து கொள்வது அவசியம்.
(தொடரும்)