அரசு பயங்கரவாதம், ஆயுதப் புரட்சியும்…! [பாகம்-4]
“ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்”
ஒரு அரசியல் போராட்டத்தின் அதியுயர்ந்த கட்டத்தில், அதியுன்னத வடிவமாக எழுவதே ஆயுதப் புரட்சிப் போராட்டமாகும் என்கிறார் லெனின்.
சமாதான வழி தழுவி மேற்கொள்ளப்படும் சனநாயக போராட்ட வடிவங்கள் படுதோல்வி கண்டு, ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டம் தவிர்க்க முடியாத சரித்திர நியதியாகி விடுகிறது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் வரலாற்று ரீதியில் நாம் ஆய்வு செய்கையில் இந்த உண்மை நன்கு புலனாகும், ஸ்ரீலங்கா ஆளும் வர்க்கத்தின் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்த்தேசிய இயக்கமானது சமாதான சனநாயக வழி தழுவிய போராட்ட நுணுக்கங்களை கையாண்டது.
அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைதி முறையில் வெளிப்பாடு கண்ட வெகுசன எழுச்சிப் போராட்டங்கள் அனைத்தும், சிங்கள ஆயுதப் படைகளால் அடக்கியொடுக்கப்மட்டன.
அறநெறி அரசியல்பண்புகளுக்கு மதிப்பளிக்காத அரசு பயங்கரவாத்தை, அன்பு மார்க்கங்களின் ஆன்மீக பலத்தால் எதிர்கொள்ள முடியாது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டனர்.
தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியப் பாதைத் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனைப் புரட்சியுணர்வு பெற்ற புதிய இளைஞர் சமுதாயம் உணர்ந்து கொண்டது. பிற்போக்கு வன்முறைக்கு எதிராக மென்முறைப் பாதை பயனளிக்காது என்பதை உணர்ந்து கொண்ட புதிய பரம்பரை புரட்சிகர வன்முறை அரசியலை நாடியது.
வேலைவாய்ப்பின்மை, கல்விவாய்ப்பின்மை, அந்நிய மொழித்திணிப்பு, அரசு படைகளின் அட்டுழியம் – இப்படியான சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்குப் பலிக்கடாவாகிய தமிழ் இளைஞர்கள், தமது எதிர்கால சுபீட்சம் புரட்சிகர அரசியலிலேயே தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டனர்.
தேசிய முரண்பாட்டுக்குள் சிக்குப்பட்டிருக்கும் தமிழ்த்தேசிய இனம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்துசென்று, தனி அரசு அமைப்பதன் மூலமே பூரணவிடுதலையைக் காணமுடியும் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள். தங்களது சுதந்திர வேட்கைக்கு வெளிப்பாடு காண புரட்சிகர அரசியல் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர்.