அவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி?

Fotor0130203419‘இலங்கையில் இப்போது ஆட்சியிலிருப்பவர்கள் – என்னைத் துடைப்பத்தால் பெருக்கித் தள்ள வேண்டும் என்கிறார்கள்…. என்னைக் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்கிறார்கள்…. என்னை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்கிறார்கள். பிரபாகரனும் இதையே தான் சொன்னார். பிரபாகரன் சொன்னதைத்தான் இவர்களும் சொல்கிறார்கள்’ ….

சிங்கள இனவெறி நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றுகிற விதத்தில் இப்படியெல்லாம் உருகி உருகிப் பேசியிருப்பவர், இலங்கையின் மாஜி அதிபர் மகிந்த ராஜபக்சே. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்த மிருகம் அநுராதபுரத்தில் நடந்த முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இப்படிப் பேசியிருக்கிறது. மகிந்த குற்றஞ் சாட்டுவதைப் போல, மைத்திரியோ ரணிலோ பேசினார்களா என்பது குறித்து நமக்குத் தகவல் இல்லை. அதைப் பற்றி நமக்குக் கவலையுமில்லை. ஆனால், பிரபாகரன் அப்படிப் பேசியதாக – சோனியா கோஷ்டியின் ஆத்ம நண்பன் மகிந்த சொல்லியிருப்பது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

உண்மையில், ராஜீவ்காந்தி முதல் சோனியாகாந்தி வரையிலான இந்தியாவின் முதல் நிலைத் தமிழினத் துரோகிகளால் முன்மொழியப்பட்டு, ஜெயவர்தனே முதல் ராஜபக்சே வரையிலான இலங்கையின் முதல் நிலைத் தமிழின விரோதிகளால் வழிமொழியப்பட்ட வார்த்தைகள் அவை. ‘பிரபாகரனைக் கொல்வதுதான் லட்சியம்’ என்பதைத் தவிர வேறென்ன அதிகாரபூர்வ கொள்கை இருந்தது அவர்களுக்கு!

பிரபாகரனை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவர்கள் அவர்கள்தான்! பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனுக்கு வைக்கிற பொறியில் எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் செத்தாலும் பரவாயில்லை – என்று ஈவிரக்கமின்றி முடிவெடுத்தவர்கள் அந்த மனிதநேயப் மரப்பாச்சிகள்தான்! எந்தப் பிரபாகரனை இல்லாமல் செய்யவேண்டும் என்று தலைகீழாக நின்றார்களோ, அந்த பிரபாகரன் தன்னை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று சொன்னதாக மகிந்த மிருகம் சொல்கிறதே – இதற்குப் பெயர்தான், பிளேட்டைத் திருப்பிப் போடுவது.

பிரபாகரன் என்கிற அந்த ஒற்றை இலக்கைத் துளைக்க, குட்டிநாடு இலங்கையின் கூலிப்படை ரேஞ்சுக்குப் போய் ராஜீவின் இந்தியா சிறுமைப்பட்டது, நம் கண்ணெதிரில் அரங்கேறிய பழைய கதை. அதே இலக்குக்காக, சோனியாவின் கூலிப்படையாகவே ராஜபக்சேக்களின் ராணுவம் இயங்கியது, அந்தக் கதையின் இரண்டாம் பகுதி. இரண்டு கூலிப்படைகளும் அந்த இலக்கை எட்டினார்களா இல்லையா என்பது குறித்த வாதப் பிரதிவாதம் இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன். பலமுறை நாம் பேசியிருக்கும் வரலாறு அது.

ஒன்றைமட்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். மணலாற்றுக் காட்டில் மறைந்திருந்த வல்வெட்டித்துறை வேதாளன், இந்தியப்படையின் முற்றுகையிலிருந்து எப்படித் தப்பித்தான் என்பது இன்றுவரை எழுதப்படாத வரலாறு. அவன் தப்பித்தது எப்படி என்பதே தெரியாமல், ‘பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார்’ என்று, 1987ல் இந்திய உளவுப்படை உளறியது, பாரத தேசத்தின் புளுகு வரலாறு.

(அப்படி கூசாமல் பேச காரணமாக இருந்தவர்களெல்லாம், ஆங்கில ஊடகங்களில் மீசையை முறுக்கிவிட்டபடி இலங்கைப் பிரச்சினை பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது! என்ன தகுதியில் அவர்களிடம் கருத்து கேட்கின்றன ஊடகங்கள்? பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக புளுகி ராஜீவ் தலையில் மசாலா அரைத்த தகுதிக்காகவா?)

1987ல் இந்திய ராணுவத்தால் ‘கொல்லப்பட்ட’ பிரபாகரனைத்தான், இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009ல், மீண்டும் கொன்றதாக அறிவித்திருக்கிறது இலங்கை. சூடு சுரணையெல்லாம் இல்லாமல், ‘பிரபாகரனை இலங்கை கொன்றேவிட்டது’ என்று ஓ போடுகிறார்கள் அதே மீசைக்காரர்கள். தலை சுற்றுகிறதா உங்களுக்கு! உலக வரலாற்றில் மாயாவிகளின் வாழ்க்கையெல்லாம் மர்மக் கதை தானே!

“இருக்கிறானா இல்லையா – என்று
நாம் அறிந்துகொள்ளவே
முடியாதவர்கள் இருவர்.
ஒருவன் இறைவன்…
இன்னொருவன் பிரபாகரன்”
என்று வாலி எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது எனக்கு!

வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி என்று சென்ற இதழில் நான் எழுதியிருந்ததன் பொருள் உணர்ந்து பாராட்டிய நண்பர்களின் மின்னஞ்சலைக் காட்டிலும், அதன் பொருள் புரியாமல் என்னைச் சாடிய கெழுதகை நண்பர் ஒருவரின் மின்னஞ்சலைத்தான் முக்கியமானதாகக் கருதுகிறேன் நான்.

‘முதல் குழந்தைப் போராளி – என்று சொல்லாதீர்கள். முதல் குழந்தைத் தீவிரவாதி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்’ என்பது நண்பரின் அறிவுரை. (நன்றி நண்பா! உங்களுடைய நண்பர்களில் பலர், ‘கொள்கைப் பிடிப்போடு’ காங்கிரஸிலிருந்து பாரதீய ஜனதாவுக்குப் போய்விட்டார்களே! நீங்கள் இப்போது எங்கேயிருக்கிறீர்கள்?)

தங்கள் கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளைப் பார்க்கப் பொறுக்காமல், அதை எதிர்த்துப் போராடவும் முடியாமல், மனக் குமைச்சலோடு வாழ்கிறவர்களே அதிகமாயிருக்கிற ஒரு சமூகத்தில், பிரபாகரன்கள் மாதிரி குழந்தைப் போராளிகள் குறைந்த அளவிலாவது உருவாவது இயல்பானதுதான். பிரபாகரன் விஷயத்தில் அதுதான் நடந்தது.

“1956ல், தனிச் சிங்கள மொழியை அரசு மொழியாக்கி சட்டம் இயற்றினார், பிரதமர் பண்டாரநாயக. அதற்குமுன், ஆங்கிலம் பொதுமொழியாக இருந்தது. தனிச் சிங்களச் சட்டம் அமலில் வந்த மூன்று ஆண்டுகளுக்குள், சிங்களத்தைப் பாடமொழியாகக் கற்றுத் தேர்ந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் – என்கிற அளவுக்கு கடுமையான சட்டம் அது. அப்போது அரசின் சட்டத்தை விமர்சித்து வீட்டில் நான் பேசியது பிரபாகரன் மனத்தில் பதிந்திருக்கக் கூடும்…….”
இது பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை தெரிவித்த தகவல்.

“தமிழ் மக்கள் இனி ஆயுதம் ஏந்திப் போராடத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டபோது, பிரபாகரனோடு இணைந்த நண்பர்களிடையே வயதில் மிகவும் குறைந்தவர் பிரபாகரன்தான். அதனாலேயே எல்லோரும் அவரை ‘தம்பி’ என்றழைத்தனர்”………..
இது பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் கூற்று.

இரண்டுமே first hand report. எவராலும் தவிர்க்க முடியாதவை.

எந்தப் போராளியும் ஆயுதங்களுடன் பிறப்பதில்லை. அவர்கள் பிறந்த சமூகத்துக்கு எதிரான அடக்குமுறைகள்தான் அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கின்றன. பிரபாகரனையும் பிரபாகரனின் தோழர்களையும் பற்றிய ஆய்வு போலவே இருக்கும் விக்னேஸ்வரனின் லண்டன் உரை, இதைத்தான் உணர்த்துகிறது.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினர் என்று புரியாமல் பேசுகிறவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் – என்பது முதல்வர் விக்னேஸ்வரனின் வேண்டுகோள்.

“எனது இளமையில் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் தமிழர்கள் இருந்தனர். தென் மாகாணங்கள், வட மேற்கு மாகாணங்கள், வட மத்திய மாகாணங்கள், மத்திய மாகாணங்கள் – என்று எல்லா பகுதிகளிலும் தமிழர்கள் இருந்தனர். ஆனால், எல்லா இடங்களிலிருந்தும் தமிழர்கள் விரட்டப்பட்டனர். இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிமையான நிலங்கள், உரிமை இல்லாதவர்களால் பங்குபோட்டுக் கொள்ளப்பட்டன…..

ஒரு மொழியின் மூலமாக, கல்வித் தரப்படுத்தல் மூலமாக, குடியேற்றங்கள் மூலமாக தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டதை அறிந்தவன் நான்…..

நாங்கள் வேறெங்கோ இருந்து வந்து இலங்கையில் குடியேறிய சிறுபான்மையினர் அல்ல. இலங்கையின் பூர்விகக் குடிகள். இந்தத் தீவில் பௌத்தம் அடியெடுத்து வைக்கும்முன்பே, தமிழ் மக்களின் ஆணிவேர் நிலைபெற்றிருந்தது. இரு மாகாணப் பெரும்பான்மையினராகிய நாம், ஏழு மாகாண பெரும்பான்மையினருடன் சேர்த்துக் கொள்ளப் பட்ட பிறகே, நவ மாகாண சிறுபான்மையினர் ஆக்கப்பட்டோம்…

எமது பாரம்பரிய வாழ்விடங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்காக, எமது மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறுவதற்காக, தொடர் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கேட்பதற்காக, 67 ஆண்டுகளாக, அகிம்சை வழியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது….

உரிமைகள் மறுக்கப்பட்டதாலும், அநீதிகள் தொடர்ந்ததாலுமே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட நிர்பந்திக்கப்பட்டனர்….”

இது விக்னேஸ்வரனின் மிகத் தெளிவான, பாரபட்சமற்ற, பின்னோக்கிய பார்வை.

வட மாகாண சபை முதல்வரான நீதியரசர் விக்னேஸ்வரனின் லண்டன் உரை, ஒரு வரலாற்று சாசனம். அந்த உரையின் மற்ற பகுதிகளைக் குறித்தும் பின்னர் எழுதியாக வேண்டும். இந்த இடத்துக்குப் பொருந்துகிற பகுதியை மட்டுமே இப்போது குறிப்பிட்டிருக்கிறேன்.

எந்தச் சூழ்நிலை பிரபாகரன் என்கிற சிறுவனைப் போராளியாக்கியது என்பதை என் கெழுதகை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உரிமைகள் மறுக்கப்பட்டதாலும், அநீதிகள் தொடர்ந்ததாலுமே அவர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தது. நிஜத்தில், மூத்தவர்களின் கனவுகளையும் சேர்த்து நிறைவேற்ற ஆயுதம் தாங்கிய இளம் போராளிகள் அவர்கள். அதைத் தீவிரவாதம் என்றோ, பயங்கரவாதம் என்றோ சித்தரிப்பவர்கள், தமது சொந்த இனத்தைத் தூக்கில் போட கயிறு திரிப்பவர்கள். தம் இனத்தை நசுக்கிய பயங்கரவாத அரசுகளின் அடிவருடிகளாகவே இருப்பதற்காக, அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பத்திரிகைப் பேட்டி ஒன்றில், பிரபாகரனே சொன்ன தகவலை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

“எங்கள் சிற்றூரில் ஒவ்வொரு நாளும் ராணுவத்தினரின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேர்ந்தது…..

எனது 14வது அகவையில், விடுதலை உணர்வின் உந்துதலால், என்னைப் போலவே உணர்வுள்ள பள்ளி மாணவர்கள் – இளைஞர்கள் 7 பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு இயக்கத்தை அமைத்தோம். அந்த இயக்கத்துக்கு நாங்கள் பெயர் எதையும் வைக்கவில்லை……

எங்களது குறிக்கோள், தமிழின விடுதலை…. அதற்காக ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவது….. அந்தக் காலக்கட்டத்தில் தான், ஆயுதங்களை வாங்குவதென்ற திட்டம் உருவானது…..

ஒவ்வொரு கிழமையும் (வாரம்) ஒவ்வொருவரும் 25 சென்ட் கொடுப்பதென்று முடிவெடுத்தோம்…. இவ்வாறு 40 ரூபாய் சேர்ந்தது. அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த ஒருவர், அவரது ரிவால்வரை 150 ரூபாய்க்கு விற்கவிருப்பதாகத் தெரியவந்தது. என் உடன்பிறந்த சகோதரி தனது திருமணத்தில் எனக்குப் பரிசாகக் கொடுத்த மோதிரத்தை 70 ரூபாய்க்கு விற்றேன். அப்படியும் 110 ரூபாய்தான் சேர்ந்தது…”

தனது 14 வயது துப்பாக்கிக் கனவு நிறைவேற என்னென்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை, பின்னாளில் இப்படி விவரித்தார் பிரபாகரன்.

இதைப் படிக்கிற போதெல்லாம், செவுளில் அறைவதை மாதிரி நான் உணர்வதுண்டு. சென்னை நகரின் கலாச்சாரத்துடன் ஒட்டியே வளர்ந்தவன் நான். எனது இளமையில் பார்த்ததைத்தான் இப்போதும் பார்க்கிறேன். தலையாகவோ தளபதியாகவோ சூப்பர் ஸ்டாராகவோ லிட்டில் சூப்பர் ஸ்டாராகவோ இருக்கும் ஒரு நடிகனின் பட வெளியீட்டுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டவும், ஸ்டார் கட்டவும், பாலாபிஷேகம் செய்யவும் தலைக்கு இவ்வளவு என்று போட்டிபோட்டுக்கொண்டு செலவு செய்யும் சிறுவர்களை இளைஞர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இவர்களைப் பார்க்கிற போதெல்லாம், சகோதரி போட்ட மோதிரத்தை விற்றாவது துப்பாக்கி வாங்க முயன்ற அந்த வல்வெட்டித் துறை சிறுவனின் நினைவு தான் வருகிறது எனக்கு! அந்தச் சிறுவனையா, குழந்தைத் தீவிரவாதி என்று சொல்லச் சொல்கிறார் என் நண்பர்! அவன் போராளி இல்லையென்றால் இந்த உலகில் வேறு எவன் போராளி?

கத்தி – படம் வெளியானபோது, கோயம்பேடு அருகிலுள்ள ஒரு திரையரங்குக்கு வெளியே கூடியிருந்த விஜய் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாத போலீசார், அவர்களை விரட்டியடிக்க முற்பட்டனர். அது போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை. போலீஸுக்குப் பயந்து ஓடிவந்த ஓர் இளைஞன், என் வாகனத்துக்குக் குறுக்கே வந்துவிட, விரட்டிவந்த போலீஸ்காரரிடம்தான் நான் சண்டை போட்டேன்.

“ராஜபக்சேவின் நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிற ஒரு நடிகனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில், அவனது படத்தை காசு கொடுத்துப் பார்க்க வந்திருக்கிற ரசிகனை அடிக்கிறீர்களா” என்று நான் கேட்டதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட அந்த போலீஸ்காரர், எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டார். அந்த இளைஞனுக்கு நான் சொன்னது புரிந்ததோ, இல்லையோ! என்னை ஒருமாதிரி பார்த்தபடியே திரும்பிவிட்டான்.

இந்த இளைஞர்கள் எங்கே? பிரபாகரன் என்ற அந்த 14 வயது சிறுவன் எங்கே? அந்த வேதனையை இங்கேதான் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது… வேறெங்கே போய் இதைப் பேசுவது?

1983ல், கொழும்பு நகரிலும், இலங்கையின் மற்ற பகுதிகளிலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் போது, வெறி பிடித்தவர்களைப் போல ஆயுதம் தாங்கிச் சென்ற சிங்களச் சிறுவர்களுக்கும், பிரபாகரனின் தோழர்களுக்கும் அடிப்படையில் இருக்கிற வித்தியாசம் நண்பர்களுக்குப் புரிகிறதா இல்லையா? ஒரு இனத்தைத் தாக்குவதற்காகவே ஆயுதம் ஏந்தியவர்களுக்கும், சொந்த இனத்தைக் காப்பதற்காக ஆயுதம் தாங்கியவர்களுக்கும் வித்தியாசமே இல்லையா!

உயிரைப் பறிக்க ஆயுதத்துடன் திரிந்த சிங்கள வெறியர்களையும், உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்த தமிழ் இளைஞர்களையும் இந்த உலகம் ஒப்பிட்டுப் பார்க்க வழிவகுத்தது, 1983 ஜூலை மாதம். கறுப்பு ஜூலை என்றே அது அழைக்கப்படுகிறது, இன்றுவரை!

இனப்படுகொலை என்றெல்லாம் விக்னேஸ்வரன் பேசக்கூடாது, இனப்படுகொலை செய்தவர்களின் காலைக் கையைப் பிடித்து நிவாரணம் வாங்க முயல்வதுதான் ராஜதந்திரம் – என்று விக்னேஸ்வரனுக்கே போதிக்கிற போதிதர்மர்கள் கறுப்பு ஜூலையில் காத்து கருப்பு மாதிரி வெறியாட்டம் ஆடிய புத்தனின் புத்திரர்களை மறந்தே போய்விட்டார்களா? அல்லது தமிழன் என்கிற உணர்வே மரத்துப் போய்விட்டதா?

-புகழேந்தி தங்கராஜ்!!

dcp56464646464

(www.eelamalar.com)