ஆமிக்காக பலியிடப்படும் இன்னொரு பரம்பரை?

இந்த பரம்பரையை தெரிந்துகொள்ள ஒரு நுண்ணரசியல் கூந்தலும் தேவையில்லை?
மிக வெளிப்படையாக – சரியாக திட்டமிடப்பட்ட இந்த பலியிடலின் பங்குதாரர்கள் எங்களில் பலர்.

பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்துக்குள் எப்போதும் நிரவிக்கிடக்கும் காலத்தால் குறைக்கப்படாத அடக்குமுறைத்திமிரை வழிவழியாக கடத்தி – அடுத்தொரு தலைமுறையையும் பலியிட்டவர்கள் எம்மவர்களும் தான்.

முப்படையினரின் தேவைகளுக்காக : அதாவது வடக்கிலும் கிழக்கிலும் மட்டும் தேவைக்கதிகமாக குவித்துவைக்கப்பட்டிருக்கும் முப்படையினரதும் தேவைகளுக்காக அடாத்தாக பறிக்கப்பட்ட காணிகளை மீளவும் தரச்சொல்லி மக்கள் கேட்கமுடியாத சர்வாதிகாரத்தை மஹிந்த மன்னராட்சிக்காலம் நிகழ்த்தியிருந்தது.

படையினர் தமது பயன்பாட்டிலிருக்கும் தமிழர்களின் பூர்வீக காணிகளை விட்டு எழும்பி மக்களை மீளக்குடியேற்றுவது – பயங்கரவாதத்தின் மீளெழுச்சி என்ற தோற்றப்பாடு தென்னிலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த 2010 – 2013 வரையான காலப்பகுதியில், சொந்தநிலத்தை கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்த மக்களின் குரல் வீரியத்தை அடக்க அரசின் தற்காலிக உத்தியாக பயன்பட்டது : தற்காலிக குடியேற்றங்கள் எனப்படும் கொலனிகள்.

வலிவடக்கில் – நல்லிணக்கபுரம் மற்றும் கேப்பாபிலவில் கேப்பாபிலவு மாதிரிக்கிராமம், போன்று இன்னமும் சிலவிருக்கின்றன.
தமிழ்மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக அவர்களது சொந்த கிராமங்களுக்கு கூப்பிடுதொலைவில் மிகச்சிறிய காணித்துண்டுக்குள் பிரிக்கப்பட்ட சிறிய வீடுகளை நெருக்கமாக அமைத்து வேலியில்லாத ஒரு திறந்த நெரிசல்மிக்க வாழிடத்தொகுதியை உருவாக்கி ஏய்த்திருந்தது, அரசு!

காணிகளை தரக்கேட்ட மக்களின் குரல்களை நசுக்க அவசரமாக பயன்பட்ட இந்த மாதிரிக்குடியிருப்புக்கள், மக்களின் அகதிமுகாம் வாழ்க்கைக்கு முடிவுகட்டியதான பெருமூச்சு முழுமையடையும் முன்னரே – கொலனிவகை குடியிருப்புக்களில் சமூக சூழலின் பிரதிகூலங்கள் அந்த குடும்பங்களின் அடுத்த சந்ததிகளின் நிறைவாழ்வை சீரழிவுகளால் அரிக்கத்தொடங்கியிருந்தன.

வளர்ந்தவர்களையும் – பெரியவர்களையும் அணுகி கொள்ள முடியாவிடின், கொலனி வாழ்க்கை முறைக்கு பலியிடப்பட்ட அடுத்த சந்ததிகளை தெரிந்துகொள்ள பாடசாலைகளுக்கு போனாலே போதும்?

கேப்பாபிலவு மாதிரி கிராம பிள்ளைகளை ஏந்தியிருக்கும் கேப்பாபிலவு – வற்றாப்பளை பாடசாலைகளும் ,

நல்லிணக்கபுரத்தை சேர்ந்த பிள்ளைகளை ஏந்தியிருக்கும் வீமன்காமம் – கட்டுவன்புலம் – காங்கேசன்துறை பிரதேச பாடசாலைகளும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட தனித்தனியான குழந்தைச்சோகங்களை கொண்டிருக்கின்றன.

பால்யவயது திருமணம்,
கைவிடப்பட்ட இளந்தாய்மார்கள்,
தாயும் தந்தையும் வேறுவேறு குடும்பமானபின் பெற்றோரின் பெற்றோருடன் வாழும் சிறார்கள்,
குடும்பவன்முறை,
குடும்பத்தினுள் பால்நிலை அவப்பிரயோகம்,
கசிப்பு : உற்பத்தி, விநியோகம், விற்பனை,
போதைப்பொருள் : பாவனை, கடத்தல், விற்பனை, முகவரகம்,
வயதுக்கு மீறிய முதிர்ச்சி,
இன்னமும் இனம்தெரியாத சூழல் காரணங்களால் கற்றல் ஆர்வம் திருப்பப்பட்டு ஏதிலிகளாக நிர்க்கதியாக்கப்பட்டிருக்கும் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கான தமிழர்களை மீட்டெடுக்க வழிதெரியாமலிருக்கிறது?

கண்மண் தெரியாமல் காசை கொட்டும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த பிரதேசங்களில் – மீட்டெடுத்தல் செயற்திட்டங்களோடு இறங்கி முயற்சிக்கலாம்??

தரம் ஒன்பதில் பாடசாலையில் வைத்து ஆளுக்கு ஐவைந்து போதைமாத்திரைகளை உட்கொண்டு – இருநாட்கள் வைத்தியக்கண்காணிப்பிலிருந்து அருந்தப்பில் உயிர்பிழைத்திருக்கும் மூன்று சிங்கக்குட்டிகளை நேரில் காணப்போய்,
– பாடசாலைக்கு வராமல் கர்ப்பமாகி வீட்டில் தங்கிவிட்ட ஆனால் ஆளை அடையாளம் காட்ட முடியாத 15 வயது அபலை ஒருத்தியின் கதையோடு மாவிட்டபுரம் கந்தனின் கோபுரவாசலை கடக்கவேண்டியிருந்தது??

இன்றைக்கு வீதியினோரம் நீரோடும் வாய்க்காலில் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு, இராணுவமுகாமுக்கு முன்னால் – பொலிஸின் முற்பாதுகாப்புடன் தமக்குரிய காணியை கேட்டு அரசஇயந்திரத்தின் செவிட்டுக்காதுக்குள் கோஷமெழுப்பிக்கொண்டு வீதியிலே உண்டு – உறங்கி போராடும் மக்களும், இதே மாதிரிக்கிராம முறை சந்ததிப்பலியிடலுக்குள் தலையை கொடுத்தவர்கள் தான்?

பிலக்குடியிருப்பு மக்கள் போராடி தமது காணிகளை மீட்ட பிறகு எரிச்சலடைந்த அரசு, மத்திய நிர்வாகத்தினூடாக அம்மக்களை துன்புறுத்தியது இந்த மாதிரிக்கிராமத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட புறாக்கூடுகளை பணயம் வைத்துத்தான்?

“ஏற்கனவே உங்களுக்கு வீடு தந்தமையால் – விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் உங்களுக்கு இன்னொருமுறை வீடுகளை ஒதுக்க முடியாது?” என்று தமிழில் பேசிய அரசஅதிகாரிகளை பிலக்குடியிருப்பு மக்கள் சந்தித்திருந்தார்கள்.
அரசின் அடக்குமுறை வடிந்து ஒடுங்கும் பாதை அப்படி??

சொந்தக்காணிகளுக்குள் வந்த சந்தோசம் மட்டும் எஞ்சியிருக்க சுமார் ஆறுமாத காலத்துக்கும் மேலாக அம்மக்கள் தரப்பாள் குடிசைகளில் பகல்பொழுதுகளை கழித்திருந்ததை இன்றைக்கும் வேதனையோடு மீட்டுவார்கள்.

முகாம் போன்ற மாதிரிகிராமமொன்றில் வாழ்வதிலுள்ள கொடுமைகளை, பாராளுமன்ற உணவுச்சாலை நண்பர்களுக்கு சொல்லில் புரியவைக்க முடியாது?

அரசுக்கெதிரான குரல்களை சும்மா பகிடிக்கு வெளிக்காட்டினாலும் கூட, கம்பெரேலிய கையூட்டுக்களையும் அவற்றை முன்னிறுத்திய வாக்குவங்கிகளுக்குரிய அபிவிருத்திகளையும் – பெயர்ப்பலகைகளிலும் பஸ்தரிப்புநிலையத்திலும் படம் போட்டு பெயரெழுத கிடைத்த வாய்ப்புக்களையும் கேப்பாபிலவுக்கு நிகராக முன்னிறுத்தி ஜனநாயகத்தை பகைத்துக்கொள்ள இயலாது அவர்களால்??

இந்த மக்களின் துன்பங்களும் – சாமானிய அன்றன்றாடு வாழ்க்கைக்குரிய பாடுகளும் – இழிந்த துயரங்களும் கூட,
ஐக்கிய சோஷலிச இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்புக்கு உட்பட்டதே, என்பதை சட்டநுணுக்கமற்ற – அரசியலமைப்பை கற்காத மரமண்டைகளாகிய எங்களால் புரிந்துகொள்ளவே முடியாது???

காணிகளை திருடிவைத்துக்கொண்டு ஆயுதப்படைகளை காரணம் காட்டி மக்களை நடுத்தெருவில் வைத்திருக்கும் கேவலமான நல்லாட்சி ஒருபுறமும் –

அரசை பகைத்துக்கொள்ள முடியவே முடியாத பேரினவாத பங்காளிகளாகிய வாக்குப்பொறுக்கிகளின் பாராமுகம் ஒருபுறம் –

அரச கொள்கைகளை நிர்வாக நடைமுறைகளாக்கி சட்டங்களால் வருத்தும் அதிகாரவர்க்கம் ஒருபுறம் –

புலனாய்வாளர்கள் – காவலிருக்கும் பொலிஸ் – சட்டமிட்டு தடுக்கும் நீதித்துறை – மக்கள் எழுச்சியை சில்லறைகளுக்காக குழப்பி லாபமீட்டும் சொந்த துரோகங்கள் 
என பலதிசையாலும் குறிவைக்கப்பட்டும் – தளராமல் “தமது நிலத்தை தமக்கென கேட்கும்” நிலக்கேள்வி மக்களின் குரலை வலுப்படுத்த இறுதியாக எஞ்சியிருக்கிற நம்பிக்கை அவர்களது சகமக்களாகிய நாங்கள் மட்டுமே?

கேப்பாபிலவின் நிலக்கேள்விகள் வலுப்படுத்தப்படவேண்டும், பலிபீடங்களில் கிடத்தப்பட்ட அடுத்த தமிழ்த்தலைமுறையையாவது மீட்டெடுப்பதற்காகவேனும்..

_ஆதவன் _