30 ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்…!!!
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 30 ஆண்டுகள் கழிகின்றன. உலகின் நான்காவது பலமிக்க இராணுவம் எனக் கருதப்பட்ட இந்திய இராணுவம் இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளோடு போரிட்டு பாரிய இழப்புக்களையும் படு தோல்விகளையும் சந்தித்து 1990 மார்ச் மாதமளவில் நாட்டுக்குப் பின்வாங்கியமை வரலாறு.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்திய தலையீடு ஏற்பட்டதும் இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையிலான முதலாம்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த அமைதி ஓகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில்தான் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவின் வஞ்சக நோக்கங்கள் வெள்ளிடை மலையாகின. திலீபனின் உண்ணாவிரதப் பின்னணிகள் அதைத் தெளிவாகவே துலக்கின. திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே இந்திய இராணுவத்தின் அட்டூளியங்கள் அரங்கேறத் தொடங்கின. இதைப்பற்றி எழுதிக்கொண்டிருந்த ஈழமுரசு, முரசொலி ஆகிய பத்திரிகைகள் இந்திய இராணுவத்தால் கண்வைக்கப்பட்டன.
திட்டமிட்டபடி நேற்றைய தினத்திலிருந்தே இந்திய இராணுவத்தின் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகின. அதன்படி இன்று அதிகாலை வேளையில் மேற்குறிப்பிட்ட இரு பத்திரிகை கட்டடங்களும் இந்திய இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. அவற்றின் அச்சு இயந்திரங்கள் சுக்குநூறாகின. அதைத்தொடர்ந்து நண்பகல் வேளையில் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் வெளிப்பட்டு புலிவேட்டை என்ற பெயரில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினர். மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதைக் கண்ட புலிகள் வெற்றியா தோல்வியா என்ற நிலையில் ஒரு வல்லரசின் இராணுவத்துக்கு எதிராக தமது ஆயுதங்களில் கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டனர். பாரத சேனையை உக்கிர சம்ஹாரம் செய்வதற்கு நிலையெடுத்துக்கொண்டனர்.
‘ஒபரேசன் பவான்’ என்ற பெயரில் தலைமைப் பீடத்தை அழிப்பதற்காக இந்தியப் படைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் அமைந்துள்ள மைதானத்தில் உலங்கு வானூர்திகளில் தரையிறங்கியது. புலிகள் இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர். மைதானத்தைச் சுற்றி கொரில்லா அணிகளாகப் பதுங்கியிருந்தனர். தரையிறங்கிய படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூண்டது. அனைத்து இந்தியப் படையினரும் அடியோடு அழிக்கப்பட்டனர். ஒரே நாளில் 29 சீக்கியப் படையினரையும் 6 கொமாண்டர்களையும் இந்தியா இழந்தமை உலகளவில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்ட ஒபரேசன் பவான் வெறும் கனவாகிப்போனது. ஏற்கனவே இலங்கைப் படையினர் ஐந்து நாட்களாகத் தொடர்ந்த ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையில் இழந்த படையினரைவிட இந்தியா அதிகமாக இழந்தது.
விடுதலைப் புலிகளுக்கு தமது கொரில்லா தாக்குதலின் தேவையும் முக்கியத்துவமும் புரிந்துகொண்டது.
அதற்கு அடுத்துவந்த நாட்களில் வன்னிக் காடுகளுக்குள் புலிகள் நிலையெடுக்கத் தொடங்கினர். ஆனாலும் இந்தியப் படையினரின் கோரத் தாண்டவங்கள் யாழ்ப்பாணமெங்கும் தலையெடுத்தன. மக்கள் கண்மூடித்தனமாக சுடப்பட்டனர்; சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட ஆண்கள் உள்ளுறுப்புக்கள் பாதிக்குமளவுக்கு தாக்கப்பட்டனர்; தமிழ்ப்பெண்கள் தேடித்தேடி வன்கொடுமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வேளையில் மக்கள் பட்ட துயரங்களை வெளிப்படுத்திய பாடல்களாக,
“நாய்கள் குரைக்குது இராவினிலே
இந்தி இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம்-எங்கள்
வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுதுபார்-எட்டுத்
திக்கிலும் ஓர்குரல் கேட்குதுபார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே-நான்
பாலுடன் ஊட்டுறேன் வாயினிலே
கண்மணியே கண்ணுறங்கு” என்ற P.சுசீலாவின் குரலில் அமைந்த தாலாட்டுப் பாடலும்,
“உங்கள் கொடிலமர் இங்கு மடியுது
ஊர்மனை யாவிலும் சாக்குரல் கேட்குது
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் இராணுவம் செய்து முடிக்குது.
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார் -புலி
வீரரைக் காட்டினில் தேடுகிறார்
தாங்க முடியல்லை வேதனைகள்-இதை
தாயக பூமியின் காதில் சொல்லு” போன்ற வாணிஜெயராம் பாடிய காற்றைத் தூதுவிடும் பாடலும் உணர்த்தவல்லவை.
புலிகளின் தலைமையை அழிக்கும் நோக்குடன் வன்னிக் காடுகள் எங்கும் அலைந்து திரிந்த இந்தியப் படைகளால் இறுதிவரை அந்த இலக்கை எட்டமுடியவில்லை. பரந்த காடுகளாக இருந்தாலும் புலிகளின் கொரில்லா தாக்குதல் நுட்பங்கள் இந்தியப் படையினரை அழித்துக்கொண்டேயிருந்தன. புலிகள் எதிர்பாராத இடங்களில் வைத்த கண்ணிவெடிகளும் பொறிவெடிகளும் அதன் பின்னர் அவர்கள் மறைந்து போவதும் இந்திய இராணுவ உயர்மட்டத்தை வேதனையில் ஆழ்த்தியது. புலிகளின் பழைய குறுந்திரைப்படங்களில் இவை சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கடைசியாக திருகோணமலை துறைமுகமூடாக 1990 மார்ச் 24 அன்று இந்தியப் படைகள் இலங்கையை விட்டு முற்றாக வெளியேறும்வரை 1250க்கும் மேற்பட்ட படைவீரர்களைப் பறிகொடுத்தும் 2500க்கும் மேற்பட்ட தமது படைவீரர்களை அங்கவீனர்களாக்கியுமென இந்திய வல்லரசு ஒரு சிறிய ஆயுதப் போராளிகளிடம் பாரிய தோல்வியைச் சந்தித்து பின்வாங்கியது.
அன்று விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக இருந்த தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இந்தியப் படையினரோடு தாம் ஏன் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம் என புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதம் பல விடயங்களை சுருக்கமாக உணர்த்தியிருந்தது.
அன்றைய தோல்வி இந்தியாவிற்கு பழிவாங்கும் வெறியை ஊட்டியது. சர்வதேச நியமங்களுக்கேற்ப மீண்டும் அதனால் நேரடியாக தலையிட முடியாமற்போனது. ஆனால் புலிகள் முள்ளிவாய்க்கால் வரை போராடித் தோற்கும்வரை இலங்கை அரசுக்கான அதன் ஒட்டுமொத்த உதவிகளும் தங்குதடையின்றி கிடைத்தன. தனது பழிவாங்கும் படலத்தில் மிகப் பெரும் மனிதப் பேரவலத்திற்குத் துணைபோய் இந்தியா வெற்றி கொண்டது…???