Fotor0712104937

இந்திய அமைதிப் படைமூலம் தலைவரை அழிக்க எண்ணிய ராஜிவ்காந்தி..!

தலைவர் கொல்லப்பட்டால் ஈழத் தமிழர்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என்பதற்காகவே .அந்தச் செய்தி பரவாமல் தடுக்க
ஊடகங்களை குண்டுவைத்து தகர்த்தது இந்தியப்படை!

9.10.1987 அன்று இரவு அதாவது குமரப்பா,புலேந்திரன் உட்பட 12 விடுதலை வேங்கைகளை கொன்று ஏப்பம்விட்ட இலங்கை ராணுவத்துக்கு துணைபோன இந்தியப்படைகள்,26.9.1987 இல் தியாகி திலீபனைக் கொன்று ஏப்பம் விட்ட இந்திய அரசு,அதே வாரத்தில் தலைவர் பிரபாகரனையும் கொல்லத் திட்டமிட்டிருந்தது..என்பதை தலைவர் உணர்ந்தபோது, தலைவரைக் காக்க விடுதலைப் புலிகளின்
பாதுகாப்பு பிரிவு முடிவு எடுத்தது. தலைவர் இருக்குமிடத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த இந்திய ராணுவம், நிச்சயம் அந்த இடங்கள்மீது பாயும் என்பதால் தலைவர் மிகப் பாதுகாப்பான இடத்துக்கு இரவோடிரவாக மாற்றப்பட்டார்.அங்கிருந்து கொண்டே புலிகளுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

நன்றாக கவனியுங்கள்..10.10.1987 அன்று இந்தியப்படைகள் தமது முகாம்களைவிட்டு வெளியேறி புலி அழிப்புக்காகவும் ,தமிழின அழிப்புக்காகவும் வெளியில் வருமுன்னர்.அதற்கு முந்திய நள்ளிரவில்(9.10.1987) பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன என்பதை யாழ் மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.அந்த நாட்களில் விடுதலைப் புலிகள் சார்பில் நடாத்தப்பட்ட தினப்பத்திரிகை ‘ஈழமுரசு’,அதேவேளை விடுதலைப் பலிகள் பற்றிய அதிக செய்திகளையும்,படங்களையும் பிரசுரித்து வந்த ஒரு தனியாருக்கு சொந்தமான பத்திரிகை ‘முரசொலி’…இதைவிட புலிகளின் குரல்,(ஒலி) நிதர்சனம் போன்ற ஒளிச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த புலிகளின் முக்கிய ஊடகம் கூட யாழ்ப்பாணத்தில்தான் இருந்தது.
இவைகளை வைத்துக் கொண்டு புலிகளின் தலைவரை கொல்வதோ,அல்லது புலிகளை அழிப்பதோ முடியாத செயல் என்பதை உணர்ந்த இந்திய அரசு,அவற்றை அழித்துவிடும்படி,அல்லது கைப்பற்றும்படி முதல்நாளே இந்திய அமைதிப் படைக்கு கட்டளை இட்டிருந்தது.

அதன்படி அன்று நள்ளிரவில் புலிகளின் ஒலி,ஒளி ஊடகங்கள் இந்தியப்படைகளால் முற்றுகை இடப்பட்டு அங்கிருந்த
சாதனங்கள் அத்தனையும் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன.அதுபோல் புலிகளின் அச்சகத்தை செய்ய முடியாது என்பதால் அதனை
(ஈழமுரசு பத்திரிகை ) குண்டுவைத்து சரித்துவிட்டது.இந்தியப்படை.அதேபோல்தான் முரசொலி அச்சகமும் செயலகமும் குண்டுவைத்து சாய்க்கப்பட்டது.

அன்று அதிகாலையில் நான் இதை கேள்விப்பட்டு ஈழமுரசு செயலகத்துக்கு போனபோது என்னால் அழமுடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.அதிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில்தான் நான் இருந்தேன்.ஈழமுரசு சின்னாபின்னமாகிக் கிடந்தது.நடுவீதிஎங்கும் அச்சுக் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் சிதறிக் கிடந்தன.ஊழியர்களோ,வேறு யாருமோ அங்கே இருக்கவில்லை.

மனம் கேட்காமல் ஒரு சாக்கை எடுத்து வீதியில் கொட்டிக் கிடந்த அச்சு எழுத்துக்களை ஒன்று சேர்த்து செயலகத்தினுள் போட்டுவிட்டு வந்தேன்.வாரா வாரம் எனது கவிதைகள் தவறாமல் வெளிவரும் பத்திரிகைகள்தான் ஈழமுரசும் முரசொலியும்.ஒரு மயான அமைதி அந்தப் பிராந்தியத்தில் அப்போது நிலவியது என்பதை சொல்லவும் வேண்டுமா?
“இலங்கைப் படைகள்தான் குமரப்பா..புலேந்திரன் போன்றோரைக் கைது செய்து கொழும்புக்கு கொண்டு செல்ல முயன்றார்கள்..நாங்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்களை தடுக்க முடியவில்லை” என்று இந்தியப்படை மூக்கால் அழுதபடி சொன்னது உண்மைஎன்றால்..மக்களிடம் சென்றடைய வேண்டிய ஊடகங்களை பயன்கரவாதிகள்போல் குண்டுவைத்து சிதைத்தது யார்..?பேட்டை ரௌடிகளா ?
இல்லை..என்றால், இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் நகரத்துக்குள் புகுந்து இலங்கை ராணுவம் அதைச் செய்ததா?..

இவைகளைத் தொடர்ந்தே 10.10 1987 அன்று இந்திய ராணுவம் இன அழிப்புக்கும் புலி அழிப்புக்கும்,முகாம்களை விட்டு வெளியேறியபோது
புலிகளுக்கும்,இந்தியப்படைகளுக்கும் சண்டை தொடங்கியது.எல்லாவற்றுக்கும் மூல காரணம் அப்போது ராஜீவ் காந்திதான். அவருக்கு நாரதராகச் செயல்பட்டவர்தான்
ஜே. என் டிக்சிட் .குட்டி ஆடு கொழுத்தாலும் வழு வழுப்பு போகாது என்பதை ராஜீவ் காந்தி நிரூபித்த இடம்தான் ஈழம்.அதை தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவரது அருமைப் பாரியார் இன்று.

மு.வே.யோகேஸ்வரன்