இந்திய -சிறிலங்கா சமாதான உடன்பாடே விடுதலைப் புலிகளை அழிக்க உதவியது!
1987ஆம் ஆண்டு இந்தியா – சிறிலங்காவுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்பாடே விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது, எனது தந்தையாரான காமினி திசநாயக்க ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த உடன்பாட்டை எதிர்த்தது.
அந்த உடன்பாடு கைச்சாத்திடப்படாது போயிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடிக்க, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு அளித்திருக்காது. 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பிரபாகரனுக்கு இந்தியா உதவியிருந்தார், சிறிலங்காவில் நிலைமைகள் மோசமாக இருந்திருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.