இந்திய – தமிழீழப்போர்….!!!

1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட  சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின.
இனமோதல்கள் வெடித்தன இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்ட பழிகளைச் சும த்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு.பந்த், இந்திய தூதுவர் திரு தீட்சித், இந்திய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும்,சிறீலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனா, தேசியபாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினை விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வது என்றும் எமது போராளிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப்படை விடுதலைப்புலிகள் மீது ஒரு விஷமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.
1987 ஒக்டோபர் 10ம் திகதி காலை அமைதிப்படையினர் யாழ்ப்பான நகரிலுள்ள இரு தமிழ்த் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலங்களுக்குள் புகுந்தனர். பத்திரிகை ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர் அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காகத் திருப்பிச் சுட்டோம், போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொது மக்கள்பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை , விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகின்றோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம் யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப்புலிகளை வழிநடத்தினார் .
தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப்படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தன் போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார் கெரில்லாப் போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம்ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர்கொள்ளத் திரானியற்ற இந்தியப்படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொதுமக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரைக் கற்பழித்துக் கொலை செய்தது இந்தப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதிமொழிகளின் படி இடைக்கால அரசைத் தமிழ்ப் பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார்ர்.
ஆனால் ராஜீவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்து ‘தமிழீழ விடுதலை என்றஅரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிடவேன்டும் என் வெறியுடன் தன்னுடைய ஆயுதப்படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர்.!
 தமிழீழ விடுதலை ” என்று சொல்லிக்கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘ தமிழீழவிடுதலை” என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய , சிறீலங்கா  அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர். ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து. 
இந்திய இரானுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகதமிழீழவிடுதலைப் போரை முன்னெடுத்தார்.உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ்சிறிய தழிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமைதாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழ்ந்த னர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் அதாவது 1988ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை மாறி ‘தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ‘ என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத்தொடங்கினர்.
அன்னை பூபதி  தியாகச் சாவு.!
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்
குலம்  எழுச்சி  கொண்டு போராடப் புறப்பட்டபோது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கினார். போரைநிறுத்து, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்கு கூறி  உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினைார். ஆனால் காந்தீயம் பற்றி புகழ்ந்துரை க்கும் இந்திய தேசத்து பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார் அன்னை பூபதி 19-04-1988 தியாகச் சாவு அடைந்தார். அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றிஅறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார் அதில், “எமது”புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப்பெறுகிறார்.
ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந் த சாதாரண வாழ்க் கையைத்  துறந்து , சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனதுசமூகத்தின் சுபிட்சத்திற்காக, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தயாகம உன்னத வடிவம் அடைகிறது” என்றார்.
மாவீரர் நாள் (நவம்பர் 27).!
இந்திய தமிழீழப்போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர்.1989, நவம்பர் 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றி தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப்புலிப் போராளி வீரச் சாவு அடைந்த நாளான “நவம்பர் 27″ஐ “மாவீரர் நாள்” ஆகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போது , “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட் சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீர நாளை நாங்கள்  ஆரம்பித்துள்ளோம் முதல்  முறையாக இன்று இந்த மாவீரர்நாளைக் கொண்டாடுகிறோம்.
எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட போராளிகளின் நினைவாகவும் அந்த நாடுகளின் பாதுகாப்புக்காகப் போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம் உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்துஅந்த நாளையே “மாவீரர் நாளாக” பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னுமொருகாரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப்புலிப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த ‘சங்கரின்’ நினைவுதினமான இன்று அநத மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடுவழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம்உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள்  இப்படிப்பட்டவர்களைத் தான் பெரிதாகப்பார்க்கும் பழக்கம் உண்டு. 
அதுபோல்எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம். அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இ யக்கத்தில் இருந்து வீரச்சாவு அடை தலைவர்களில் இருந்து சாதாரணமாக போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றிணைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம் . இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரேநாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவு எடுத்தோம். ஓர் இனத்தைப்பொறுத்தவரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டு மிராண்டி இனமாகத் தான் மாறி அழிந்துவிடும் . எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகிறார்கள் அதேவேளை வீரர்களுக்குத் தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில் வரலாற்றில் எங்களுடைய இனத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம். ஆம்  எமது வீரர்களைக் கூட நாம் கெளரவிக்க ஆரம்பித்துள்ளோம் .
 இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம் எனவே இனி எமது இனம் அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம் தான் அவர்களுடைய வீரமான , தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும் ” என்றார்.
சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை .!
1988இல் புதிய சாதிபதியாக பதவியேற்ற பிரேமதாசா 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார் தமிழீழ மன்னில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடவேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளும் விரும்பியதால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார்.
தமிழீழ தேசியத் தலைவ ர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக
அறிவித்தார் சிறீலங்காவின் அழைப்பின் பேரில்அமைதி காக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது : அவமானப்பட்டு போரில் தமிழீழவிடுதலைப்புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிபூசியபடி இந்திய இராணுவம்
1990இல் தமிழீழத்திலிருந்து வெளியேறிச்சென்றது இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவநடவடிக்கைகளாலும் விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன  . இலட்சிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப்படை வீரர்களின் மின்னல் வேகத்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுவத்தாலும் உருவாக்கப்பட்ட‘தமிழ்த் தேசிய இராணுவம்’ என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது.
பெரும்பான்மையோர் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்த து. இந்திய அரசின் இறு தித்திட்டமும் தவிடுபொடியாகியது.
தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த ன. இறுதியில் சிங்கள இன வாதத்தின் ஏமாற்றுவேலைகளால், பேச்சுவார்ததை உருப்படியான தீர்வுகள் பற்றிஆராயப்படாது முறிந்து போனது.

 

வெளியீடு:தமிழீழ விடுதலைப்  போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல் 

மீள் வெளியீடு :வேர்கள் (தமிழ்த் தேசிய ஆவணக் கீற்று ) 

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”