மண்ணுக்காகப் போராடிய நாங்கள் அந்த மண் இறந்துகொண்டிருப்பதைப் பாராமல் இருக்கிறோம் -பொ.ஐங்கரநேசன்
இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்’ என்று கேட்டு, மண் மீட்புக்காகப் போராடியவர்கள் நாங்கள். ஆனால், அந்த மண் இறந்து கொண்டிருப்பதைப் பாராமல் இருக்கிறோம்’ என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். உலக மண் தின நிகழ்ச்சியாக வடமாகாண விவசாய அமைச்சு ‘மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் கருத்தமர்வு ஒன்றை நடாத்தியுள்ளது. யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் நேற்று சனிக்கிழமை (05.12.2015) நடைபெற்ற இக்கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
காற்று நச்சுப் புகைகளால் மாசடைவது பற்றிப் பேசிவருகிறோம். நிலத்தடி நீர் அளவில் குறைந்து வருவது பற்றியும் இரசாயனங்களால் நஞ்சடைவது பற்றியும் பேசிவருகிறோம். எண்ணெய்வளம் குறைந்து வருவதால் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் பற்றி மாநாடுகள் கூட்டி விவாதித்து வருகிறோம். எண்ணெய் வளத்தைப்போன்று மண்ணும் புதுப்பிக்க இயலாத ஒரு வளம்தான்;. ஆனால், எங்கள் காலடியில் கிடக்கும் அந்த மண் வளம் மாசடைவதைப்பற்றியோ அழிந்து கொண்டிருப்பதைப்பற்றியோ அக்கறை அற்றவர்களாகவே இருக்கிறோம்.
மண்ணை உயிரற்ற ஒரு சடமாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்;. மண்ணுக்கு உயிர் உள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமையில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் மண்ணுக்குள்ளேதான் குடியிருக்கின்றன. எமது வாழ்வியலில் விவசாயம் ஒரு பண்பாடாக இருந்தவரை மண் உயிர்ச்செழிப்போடு இருந்தது. உழவு மாடுகள் முன்னால் களைகளை மேய்ந்து, பின்னால் சாணத்ததைப் பசளையாகப் போட்டு மண்ணைப் பண்படுத்தின.
விவசாயம் பெரும் வாணிபமாக மாறியதற்குப் பிறகு, அதிக விளைச்சலை வேண்டி நாம் பயன்படுத்தும் விவசாய இரசாயனங்களால் மண் புண்பட்டு வருகிறது. மண் நஞ்சேறி மண் உயிரினங்கள் அழிந்து, மண் இறக்க ஆரம்பித்துள்ளது. இறந்த மண்ணில் எத்தனை இரசாயனங்களைப் போட்டாலும் பயிர் வளராது. எந்த இரசாயனங்களாலும் அதனை உயிர்ப்பிக்க முடியாது. கடைசியில், மண்ணுக்காகப் போராடிய நாங்கள் மண்ணை விட்டுப் புலம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே, காற்றைப்போன்று, நிலத்தடி நீரைப்போன்று மண்ணையும் இரசாயன நஞ்சுகளில் இருந்து பேணிப்பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.