புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பு
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். பிபிசி சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறுபான்மையின மக்கள் தமது பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்கவேண்டும்.
தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்பட்டாலும் கூட அதிபராகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவரும் பெரும்பான்மையினருக்காகவே பணியாற்றுகின்றனர். எனவே, இந்த முறையின் ஊடாக சிறுபான்மையினர் நீதியைப் பெற முடியும் என்பது தவறானது. தமிழ் மக்களின் ஒப்புதலுடன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்காவிட்டால் தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது.
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதற்கு முந்தி உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் அனைத்தும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே உருவாக்கப்பட்டன. எனவே நாம் புதியதொரு யுகத்துக்குள் நுழைவதானால், நாம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதுபற்றி ஆட்சியாளர்கள் மக்களிடம் கொண்டுசெல்வதில்லை எனவும் தெரிவித்தார்.