இன்று நாம் தூங்கினால் நாளை எழுந்திருக்க நிலமிருக்காது…

புகைத்தலால் பாதிக்கப்பட்டவனின் நுரையீரல் சுருங்குவதைப் போல யாழ்ப்பாணம் இன்று மெல்ல மெல்ல சுருங்குகிறது. இது இன்னும் சில வருட காலத்தில் முற்றாக அழிந்துவிடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டிய நிலையன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் வாழ்விடம் சுருங்குகிறது. இது இன்னும் சில வருடங்களில் முற்றாக சிங்களவன் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துவிடுவான். அதன் பின்னர் நாங்கள் யாரிடமும் பேரம் பேச முடியாத நிலை ஏற்படப்போகிறது. உலகத்திலேயே தமிழ் மக்களுக்கு முக்கியமான, முதன்மையான தாயகமாக திகழ்ந்தது யாழ்ப்பாணம் மட்டுமே. இன்று அதையும் சிங்களவன் பறித்தெடுக்கிறான். நாங்கள் என்ன பாவம் செய்தோம். உலகில் தனிமையாக, யாருமே எம்மை அசைக்க முடியாத பலத்துடன் நின்ற நாங்கள், இன்று எமது நிலத்தை இழக்கின்றோம். எங்கள் வயிறு பற்றியெரிகின்றது. ஈழத் தாய் குமுறுகின்றாள். யாருக்கும் அடிமையாக இல்லாமல் நிமிர்ந்து நின்ற நாம், யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் வாழ்ந்த நாம் இன்று எமது நிலத்தை இழக்கின்றோம்.

வலி. வடக்கு..! அது எத்தகைய வளம் கொழிக்கும் பூமி. பாட்டன், முப்பாட்டன் காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே வலி. வடக்கு எங்கள் பசி என்ற வலியைப் போக்கியது. அழகிய தோட்டங்கள். என்ன பயிர் வைத்தாலும் நிறைந்த விழைச்சல் தரும் செம்மண். யாழ்.குடாநாட்டுக்கு தேவையான மரக்கறிகளையும் பழ வகைகளையும் எடுத்துக் கொண்டது போக எஞ்சியவையே தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தோட்டத்தில் நிற்கும் போது பசித்தால் சில மரவள்ளிக்கிழங்குகளைப் பிடுங்கி சுட்டுவிட்டு தோட்டத்தில் நிற்கின்ற பச்சைமிளகாய், வெங்காயத்துடன் சேர்த்து கடித்துச் சுவைத்துச் சாப்பிட்டால். ஐயகோ அதன் சுவையை சொல்லவே முடியாது. யாழ்.குடாநாட்டிலுள்ள எந்தச் சந்தையிலும் பழங்களா, காய்களா எதை எடுத்தாலும் அது வலி.வடக்கைச் சேர்ந்ததாகவே இருக்கும். இது அந்தக் காலம். பிரபாகரன் காலம். ஏன்… பிரபாகரனுக்கு முற்பட்ட காலமும் கூட.

இன்று இங்கே என்ன நடக்கிறது?

நடக்கிற எதையுமே சொல்ல முடியவில்லை. நடக்கிற அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. வார்த்தைகளில் வருவதை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏனெனில், என் தாயை மாற்றான் தள்ளி வீழ்த்திவிட்டு காலால் உதைத்துக்கொண்டிருக் என்னால் கவிதை எழுத முடியுமா? என் தங்கையின் ஆடை கலைத்துவிட்டு மாற்றான் காமம் புரிந்துகொண்டிருக்கும் போது என்னால் கையப்பம் வைக்க முடியுமா? இங்கே இன்று அதுதான் நடக்கிறது. எது நடந்தாலும் நாங்கள் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டியதாய் உள்ளது.

எங்கள் நிலம் இது. எங்கள் நிலமே இது. இதை மாற்றான் அபகரித்தால் எந்தக் காலத்தில் இதை நாம் பெற முடியும்? என் அழகான மனைவியின் முந்தானைக்குள் மூக்கை நுழைப்பது போலல்லவா இன்று சிங்களவன் எங்கள் வளமான நிலத்தில் காலை மிதிக்கிறான். அகலக் கால்பதிக்கும் அந்நியன் நாளை தன் கால்களை குறுக்கிக்
கொள்வான் என்று எவன் எமக்கு உத்தரவாதம் தர முடியும்? முடியாது. எவனும் எங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

எங்கள் நிலத்தை அவன் ஆக்கிரமிக்கிறான். தூங்கிய எங்களைத் தட்டிக் கலைத்துவிட்டு எங்கள் அன்னையின் மடியில் வந்து அவன் படுத்துறங்குகிறான். இவன் அன்னையின் முந்தானையை முகரமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இல்லை யாரும் உத்தரவாதம் தர முடியாது. அந்நியன் எதுவும் செய்யலாம். நாங்கள் திருப்பிக் கதைக்க முடியாது. இந்த நிலைதான் இன்று இங்கே இருக்கிறது. அவன் வந்துவிட்டான். அவன் அகலக்கால் வைத்துவிட்டான்.

வலி.வடக்கு இன்று சிங்கள தேசமாகிறது. அங்கே எங்கள் நிலங்களை ஒரு தடவை வந்து பாருங்கள். எங்கள் நிலங்களை அவன் அபகரிக்க நாங்களே உத்தரவாதப்படுத்தும் நிலை. எங்கள் காணிகளை அவன் ஆக்கிரமிக்க நாங்களே காணிகளை அடையாளப்படுத்தும் நிலை. கையிலிருந்த வாள்களும் இல்லை. வாளுக்கு பின் வந்த ஆயுதங்களும் இல்லை. ஏன் எங்களோடு நின்ற தோள்களே இல்லை. எதுவுமே இல்லாத எமது கையில் தரப்பட்டது நில ஆக்கிரமிப்பு பத்திரம். எங்கள் காணிகளில் அதை ஒட்டும்போது நாம் அழுதோம். மனதுக்குள் அழுதோம் ஏனெனில், வெளியே தெரிந்தால் நாம் அழுவது அபசகுனமாகிவிடும்.

என் மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக என்று எண்ணியிருந்த காணியை இன்று மாற்றானுக்கு கொடுக்கின்றேன். என் அப்பா வாழ்ந்த நிலத்தில் நானும் வாழலாம் என்று எண்ணியிருந்த காணியை இன்று மாற்றானுக்கு கொடுக்கின்றேன். என் தங்கைக்கு வாழிடம் அமைக்க என்று எண்ணியிருந்த நிலத்தை இன்று சிங்களவனுக்கு கொடுக்கின்றேன்.

ஒரு கணம்… ஒரே ஒரு கணம்…. நினைத்துப் பாருங்கள் அந்த நிலையை. சிறீலங்கா அரசாங்கத்தில் அரச உத்தியோகம் பார்க்கின்ற காரணத்தால் எங்கள் நிலங்களை அவன் ஆக்கிரமிக்க நாங்களே உறுதியெழுதிக் கொடுத்தது போல அந்தக் காணிகளுக்குள் ஆக்கிரமிப்பு துண்டுகளை ஒட்டினோம். ஐயகோ…. எத்தகைய அழகிய நிலம் அது. 20 வருடங்களுக்கு முன்னர் எங்களை அங்கிருந்து துரத்திய காலம் தொடக்கம் சிங்களப் படைகள் அங்கே எங்கள் நிலத்தில் விவசாயம் செய்கின்றது. மரக்கறி, பழமரத் தோட்டங்களைச் செய்கின்றது.

வடபகுதியிலுள்ள அனைத்துப் படை முகாம்களுக்கும் தேவையான மரக்கறிகளும் பழங்களும் வலி.வடக்கிலுள்ள தோட்டங்களிலிருந்துதான், எமது தாய் மடியிலிருந்துதான் உற்பத்தியாக்கப்படுகின்றன. அந்தத் தோட்டங்களைப் பார்க்க எங்களுக்கு இதயம் வெடித்தது. இந்த இடங்களை எப்படி சிங்களவனுக்கு விட்டுக்கொடுப்பது என்று எமக்குள் புலம்பினோம். ஆனாலும், என்ன செய்வது, எங்களுக்குள்ளும் யாராவது உளவாளிகள் நிற்கிறார்களோ தெரியாது என்று எங்களைச் சுதாகரித்துக்கொண்டு நாங்கள் அபகரிப்பு பிரசுரங்களை ஒட்டிவிட்டு வந்தோம். இந்த நிலம் இனிமேல் எமக்குக் கிடைக்காதா என்ற ஏக்கம் வலி. வடக்கு மக்களிடம் மட்டுமல்ல. ,வலி.வடக்கைப் பற்றி அறிந்த, தெரிந்த ஒவ்வொரு மக்களிடமும் இருந்துகொண்டுதானிருக்கிறது. இந்தக் கவலைகள் தொடர்கதையா? அல்லது இதை தடுக்க வழி உண்டா என்று நாம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.

நிச்சயமாக நாங்கள் இதைத் தடுக்க முடியும். எவ்வாறு என்றால், முதலாவது புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வசிக்கின்ற நாட்டு அரசாங்களுக்கும், இந்தியத் தமிழர்கள் இந்திய அரசாங்கத்திடமும் மிக முக்கிய கோரிக்கையாக இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தடுக்க முடியும்.

புலம்பெயர் தேசத்திலிருக்கிற தமிழர்கள், இது எங்கள் நிலம், நாங்கள் வாழ்ந்த நிலம், எமது தாயக நிலம் எமது உறவுகள் வாழ வேண்டிய நிலம். இப்போது அங்கே புலிகள் இல்லை. பயங்கரவாதம் இல்லை. இந்த நிலையில் ஏன் இந்த அபகரிப்பு? இந்த அபகரிப்பை நிறுத்துமாறு சிறீலங்கா அரசாங்களுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தாங்கள் தற்போது வதியும் நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க முடியும்.

இந்த அழுத்தங்களை கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலமாக, மின்னஞ்சல்கள் மூலமாக, தந்திகள் மூலமாக வெளிப்படுத்த முடியும். இது வெற்றியளிக்காவிட்டால் வீதிப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் சிந்திக்கலாம்.

மேலும், தாயகத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாயகத்தில் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதுடன் சர்வதேச நாடுகளுக்கும் அவசர தந்திகளையும் மின்னஞ்சல்களையும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்ததாக நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க வேண்டும். அல்லது நாடாளுமன்ற வாசலில் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் யாரையும் யாரும் பகைத்துக்கொள்ளாமல், யாருடனும் யாரும் முரண்படாமல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நாங்கள் இன்று இந்த நில அபகரிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லையாயின் நாளை இப்போது நாமிருக்கின்ற வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து இராணுவ முகாமை அமைத்துவிட்டு எங்களைத் துரத்தியடிக்கவும் சிங்களவன் பின்னிற்கமாட்டான்.

சிந்தியுங்கள்…

தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு