இன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதே.!

மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.
அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட.
‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.
இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு அமைந்திருந்தது.
அதுதான் நாம் இதை இன அழிப்பு என்கிறோம் – பலியெடுக்கப்பட்ட உயிர்களின் கணக்கை வைத்து நாம் இதைக் கூறவில்லை.
ஐநா வின் சரத்துக்களும் இன அழிப்பை இந்த அடிப்படையில்தான் வரையறுக்கின்றன.
ஆனால் அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் பிரகாரம் ஐநா தமிழின அழிப்பு தொடர்பாக இன்று வரை கள்ள மவுனம் சாதிக்கிறது.
வங்க மொழிப் போராட்டத்தின் விளைவாக அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நாளை ஐநா பிரத்தியேகமாக அறிவித்திருக்கிறது.
ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளை முன்னிட்டு வருடா வருடம் வெவ்வேறு குறிப்பிட்ட கருதுகோள் அடிப்படையில் இந்த நாள் நினைவு கூரப்படுகிறது.
இந்த வருடத்தின் கருது கோள் அமைதியைக் கட்டியெழுப்பவும்/ நல்லிணக்கத்தைப் பேணவும் தாய்மொழிகள் அங்கீகரிக்கப்பட வேணும் என்கிறது ஐநா.
(Indigenous languages matter for development, peace building and reconciliation).
ஆனால் இன அழிப்பு அரசு இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இந்த நாளிலாவது தொடரும் இன அழிப்பை அம்பலப்படுத்தாமல் இன அழிப்பு அரசுக்குத் தொடர்ந்து முண்டு கொடுக்கும் நமது அரசியல்வாதிகளை என்ன செய்வது?
எல்லாம் காலக் கொடுமை.
எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும்.
-பரணி கிருஸ்ணரஜினி