chankanai-lady-209x300

இராணுவத்தின் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனது கணவர்! – மீட்டுத்தருமாறு கதறியழுத மனைவி

இராணுவத்தினருடைய இரகசிய முகாம்களை விசாரணை செய்யுங்கள். அதில்தான் எனது கணவர் உள்ளார். இரகசிய முகாம்களை விசாரணை செய்தால் எனது கணவரைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்றுக் கதறியழுதவாறு சாட்சியம் அளித்தார் பெண் ஒருவர். யாழ்.சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியம் அளிக்கும் போதே அந்தப் பெண் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்கள். எனது கணவரைப் பிடித்து 5 மாதங்களில் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டார். நான் கண்டேன். ஆனால், வைத்தியசாலையில் சென்று அங்கு சிகிச்சை பெற்றவர்களின் விவரத்தில் பார்த்தால் அவருடைய விவரங்கள் எதுவும் இல்லை. இராணுவத்தால் கொண்டு வரப்படுபவர்களை வைத்தியசாலையில் பதியமாட்டார்கள். இராணுவத்தினர் விவரங்களைக் கொடுக்க மாட்டார்கள். எனது கணவரை இராணுவத்தினர்தான் வைத்திருக்கின்றார்கள்.

எனது கணவருடன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு காணாமல்போன ஒரு நண்பர் அண்மையில் திரும்பிவந்து தனது மனைவியுடன் இணைந்துள்ளார். நான் அவரிடம் நேரடியாகச் சென்று விசாரித்தேன். அப்போது அவர், ”எங்களை திருகோணமலையில் உள்ள ஓர் இரகசியமான முகாம் ஒன்றில்தான் இராணுவத்தினர் அடைத்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அங்கு யார் யார் இருக்கின்றார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது. எனக்குப் பக்கத்தில் யார் இருக்கின்றார் என்றே எனக்குத் தெரியாது. அப்படித்தான் இராணுவத்தினர் எங்களை வைத்திருந்தார்கள் என்று கூறினார். அவருடன்தான் எனது கணவரையும் இராணுவம் பிடித்துச் சென்றது. குறித்த இராணுவத்தினருடைய இரகசியமான தடுப்பு முகாம்களில் ஏதோ ஒன்றில்தான் எனது கணவர் உள்ளார். அந்தத் தடுப்பு முகாம்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டால் எனது கணவரைக் கண்டுபிடிக்கலாம் என்றார்.

(www.eelamalar.com)