இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள்

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உட்பட சிரேஷ்ட சிங்கள சட்டத்தரணிகள் சிலர் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவைக் கூட்டத்தில் இப்படியான சம்பவம் முதல் முறையாக நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு மறைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போர் குற்றங்கள் அடங்கிய 340க்கும் மேற்பட்ட தகவல்கள் சாட்சியங்களுடன் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதுவர்களிடம் கையளிக்கப்படும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மனிதாபிமான சட்டத்திற்கு பதிலாக மனித உரிமை சட்டத்தின் கீழ் போர் குற்றத்தை சுமத்தியிருப்பதாகவும் இதனை நிரூபிக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவம் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு உட்பட்டது என இலங்கை சம்பந்தமாக நியமிக்கப்பட்ட தருஷ்மன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் இராணுவம் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க எந்த தரப்பும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கையாண்ட முறை தவறானது என்பதை நிரூபிப்பதற்காக சர்வதேச சட்டம் அறிந்த சிங்கள சட்டத்தரணிகள் சிலர் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.