இரு விழிகளாய் தலைவரை காத்து நின்ற தோழர்கள் இம்ரான் – பாண்டியன்
யாழ். கொக்குவில் பிரம்படி பகுதியில் பிறந்து, ஒன்றாக படித்து, ஒன்றாக விளையாடி, அண்டை வீடுகளில் நண்பர்களாய் வளர்ந்து, நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து, நண்பர்களாகவே களங்களில் போரிட்டு, நண்பர்களாகவே தம் கொள்கைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர்கள்.
தலைவரின் பாதுகாவல் அணியின் முக்கிய பொறுப்பாளர்களாக செயற்பட்டவர்கள் இரு தளபதிகளும்.
இந்திய இராணுவம் தமிழீழ மண்ணில் கால்பதித்து யாழ் மண்ணை ஆக்கிரமித்த போது பாண்டியன் அவர்கள் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டார்.
ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக செயற்பாடுகளை தீவிரப்படுத்திக்கொண்டிருந்த வேளை 09.01.1988 அன்று யாழ் காரைநகர் பகுதியில் இந்தியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற உறுதிப்பாட்டிற்கு இணங்க தளபதி பாண்டியன் அவர்கள் தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தொடர்ந்து, தன் நண்பனின் கனவுகளை சுமந்து யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்று, இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து இந்திய படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தினார் தளபதி இம்ரான்.
03.03.1988 அன்று யாழ். உரும்பிராய் பகுதியில் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலின் போது அவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகள் லெப் கேணல் பாண்டியன் – லெப் கேணல் இம்ரான் ஆகியோருக்கு வீரவணக்கங்கள் !!!