ஆம் அவர்கள் எமக்காகத்தான் வீழ்ந்தார்கள்!
வித்துடலாகிப்போன தம் தோழர்களின் உடல்களை அரணாய்க்கொண்டு அவர்கள் வீழும்வரை போரிட்டார்கள்.
இறுதித்தோட்டா இருக்கும்வரையிலும் அவர்கள் துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டேதானிருந்தன..
அவர்களுக்கு அழகான குழந்தைகள் இருந்தன, அன்பான மனைவி கணவன் இருந்தனர். பாசம்கொண்ட உறவுகள் இருந்தன, பத்துமாதம் சுமந்துபெற்ற தாய் தந்தையர் இருந்தனர்,,
ஆயினும் அவர்கள் அனைவரையும் விட இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தார்கள்.
தங்கள் சாவினை உறுதிசெய்துகொண்டுதான் அவர்கள் இரட்டைவாய்க்கால் கடந்தார்கள்.
முள்ளிவய்க்கால்வரை நம்பிவந்த மக்களை அவர்கள் ஏமாற்ற துணியவில்லை.
இத்தனைக்கும் அவர்கள் மேடைகளில் வீரவசனம் பேசியவர்கள் இல்லை. காடுகரையென ஈழமெல்லாம் விரவியிருந்த களமுனைகளில் கடந்த காலங்களை கழித்தவர்கள். வெற்றி வெற்றியென சென்றவிடமெல்லாம் வெற்றிகளை குவித்தவர்கள். மொத்தமாய் ஒரேயிடத்தில் ஓர்நாளில் ஏன் விதையாகிப்போகவேண்டும்?? நீங்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒருநாள் முயற்சித்திருக்கலாமே ஏன் முயற்சிக்கவில்லையென்று அவர்கள் சந்ததிகள் அவர்களிடம் கேள்விகேட்க இடமளிக்கக்கூடாதென்றுதான் இறுதிக்களத்தை இரட்டைவாய்க்கால் தாண்டி அவர்கள் தெரிவு செய்தார்கள். ஆனந்தபுரம்நோக்கி அணிவகுத்தார்கள்…
கிரேக்க புராணங்கள் கூறிய ஸ்பாட்டன்களின் நிஜவடிவம் எங்கள் போராளிகள். எங்கள் தேசம் மீளவேண்டுமென்பதற்காய் அவர்கள் வீழும்வரை போரிட்டார்கள். காலம் ஒரே சம்பவங்களை வரலாறுகளாய் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனந்தபுரம் எமக்கு ஆனந்தமளிக்கவில்லை ஆயினும் அடுத்த தலைமுறைக்கு அதுதன்னில் ஆயிரம் வீரவரலாறுகளை தாங்கி நிற்கின்றது. எங்கு வீழ்ந்தோமோ அங்கிருந்து எழுவோம். முடிந்துபோனவைகளில் இருந்து முன்னோக்கிச்செல்லும் எம் தலைமுறைகள். அவர்கள் போராடுவார்கள் ஏனெனில் காலம் மீண்டும் மீண்டும் ஒரே வரலாறுகளை அடிக்கடி பிரசவிக்கிறது……