இலங்கை அரசின் அறிவிப்புக்கு கண்டனம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களின் 120 படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் அறிவித்துள்ள​மை இந்திய அரசுக்கு விடப்பட்ட சவாலாகும். இலங்கையின் இந்த விபரீதப் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்தா விட்டால், தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாகவே இந்திய அரசு கருதவில்லையோ என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் ஏற்படும் என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்த்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் பின்விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக்கும்”, எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அரசுடைமை ஆக்குவோம் என்ற அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காரணத்தால், இலங்கை அமைச்சர் தன்னிச்சையாக பேசி வருகிறார். மொத்தத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அரசு முற்றிலும் சீரழித்து வருகிறது. எனவே, இலங்கையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, படகுகளை மீட்கவும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.