ஈழப்போரில் தியாகங்களை மேற்கொண்ட பெண்கள் சோகங்களோடு வாழ்கின்றனர் – சிவரதி ராஜ்குமார்
ஈழப்போரில் பல தியாகங்களை மேற்கொண்ட பெண்கள் தற்போது அவயவங்களை இழந்தும் கணவன்மாரை இழந்தும் பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டு மனதளவில் சோகங்களை சுமந்து வாழ்ந்து வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்பாளர் சிவரதி ராஜ்குமார் ஐபிசி தமிழிற்கு தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் எவ்வாறான தேவைப்பாட்டை முதன்மையானதென கருதுகிறீர்கள் என ஐபிசி தமிழ் வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
யுத்தத்தின் வடுக்களை இன்னமும் பெண்கள் சுமந்து வாழ்வதாகவும் அவர்களுக்கான ஆற்றுகை அவர்களுக்கு உத்வேகத்தையும் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்த அவர் அதற்கான களம் அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழ் பிரதிநிதிகளின் அக்கறையென்பது இவர்கள் மீது முழுமையாக அமைதல்வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாார். குடும்பங்களை தலைமை தாங்குகின்ற பெண்களின் உள ஆரோக்கியமே அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்குமெனவும்
பெண்களுக்கான வேலைத் திட்டங்களை உருவாக்கி அவர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் ஐபிசி தமிழிற்கு தெரிவித்தார். இதே வைளை வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்ததினால் விதவைகளாக்கப்பட்ட எண்பதாயிரம் விதவைகள் இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.