எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலாக சம்பந்தனுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் – மைத்திரி!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இரா சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றித் தெரியவருவதாவது,

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் உட்பட 18பேர் கட்சியைவிட்டு விலகிச் செல்லப்போவதாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் தமக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைத் தந்தால் மாத்திரமே தாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்கமுடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தமது கட்சியைவிட்டு விலகினால் எதிர்க்கட்சியை, சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டு ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்..

இப்பேச்சினடிப்படையில், குழப்பத்தினை விளைவிக்கும் உறுப்பினர்களிடம் எதிர்க்கட்சித் தலைமைப்பதவியை வழங்குவது தொடர்பாக இரா.சம்பந்தனுடன் பேச்சு நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதற்குப் பதிலாக இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படும் எனவும்மைத்திரி உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து இவ்வமைச்சுப் பதவிகளில் ஒன்றினை சுமந்திரனுக்கும் மற்றைய பதவியினை சம்பந்தன் தான் எடுத்துக் கொள்வாரா அல்லது பங்காளிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த சித்தார்த்தனுக்கு வழங்கவுள்ளாரா எனத் தெரியவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.