எதுவரினும் தலைவரைக் காப்போம்…..!
1982ம் ஆண்டு
இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவு கெரில்லாக்களாக எமது மூத்தபோராளிகள் வாழ்ந்த காலம்.
புலி வீரர்கள் தங்களை யார் என அடையாளம் காட்டாத காலம்.
அந்தக் காலத்தில் ஒருநாள்
சென்னையில், தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
தலைவரின் புகைப்படத்தையே கண்டிராத சிங்களப் படைகளுக்கு அவர் சென்னையில் பொலிஸ் காவலில் உள்ளார் என்ற செய்தி தேனாக இனித்தது.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த படாத பாடுபட்டனர்.
தலைவரை தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.
இந்திய அரசு கோரிக்கையை ஏற்று விடுமோ என்ற அச்சம் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டது.
தமிழ் நாட்டிலுள்ள சில கல்லூரிகளின் மாணவர்கள் தலைவர் பிரபாகரனை நாடுகடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளும் அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆயினும் எமது தோழர்களுக்கு உள்ளூரப் பயம்.
தற்செயலாக சிறீலங்கா அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால்……
எப்படித் தடுக்க முனையலாம் எனக் கலந்துரையாடினர். மண்டையைப் பிய்த்தனர்.
இறுதியில் லெப்.கேணல் பொன்னம்மானும், கப்.ரஞ்சனும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
தங்களது உயிர்களைத் துறந்து தலைவரைப் பாதுகாக்க முடிவெடுத்தனர்.
சிறிலங்கா அரசிடம் தலைவரை ஒப்படைக்க இந்திய அரசு முடிவெடுத்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் ஏறி உச்சியில் நின்றபடி தலைவரை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது-
பேச்சுக்கு செவிசாய்க்காவிட்டால் உச்சியிலிருந்து முதலில் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்வது-
அதற்கும் இணங்கி வராவிட்டால் அடுத்தவரும் குதித்துத் தற்கொலை செய்வது-
இந்தத் தியாக முயற்சி தமிழ்நாட்டை கிளர்ந்தெழச் செய்து தலைவரைப் பாதுகாக்கும் என நம்பினர்.
ஆனால் தமிழினத்தின் பேரதிஷ்டம் அவ்விதமான எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.
தலைவர் பாதுகாக்கப்பட்டார்.
அன்று ஈழத் தமிழினத்தின் இணையற்ற மாபெருந்தலைவனை தம்முயிரைக் கொடுத்துக் காக்க முயன்ற அந்த மூத்த தோழர்கள் இருவரும் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
அன்றுபோலவே இன்றும் தலைவனைக் காக்க பல்லாயிரம் போராளிகள் தம்முயிரை ஈய்ந்தனர் என்பது மறைக்கவோ / மறக்கவோ முடியாத வீர வரலாறு.