download (5)

எனது மகனின் இறுதித்தருணம்

எனது மகன் இறுதித் தருணங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுடன் நின்றதாக கண்டவர்கள் எனக்குக் கூறினர். பாலச்சந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் சில இளைஞர்களின் சடலங்களும் அருகில் இருந்தன. அவற்றில் எனது மகன் இருப்பாரோ எனத் தெரியவில்லையென காணாமற்போன ஐங்கரன் என்பவரின் தந்தை மார்க்கண்டு அருளானந்தம் தெரிவித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். எனது மகன் 2002ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, கேணல் கடாபியின் அனைத்துலக தொடர்பாடல் பிரிவில் இருந்தார்.

2006ம் ஆண்டு காலப் பகுதியில் எமது வீட்டுக்கு இராணுவச் சீருடையுடன் வந்திருந்த ஈபிடிபியைச் சேர்ந்தவர்கள், என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி என் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, தங்கள் சிறைச்சாலையில் வந்து தஞ்சமடையுமாறு அவர்கள் எனக்குக் கூறினர்.

சிறையில் இருப்பது எனக்கு விருப்பமின்மையால், நாங்கள் குடும்பமாக தலைமறைவாக வாழத் தொடங்கினோம். இந்நிலையில், 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது, எனது மகன் பாலச்சந்திரனுடன் நின்றதாகவும், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாலச்சந்திரனுடன் சரணடைந்ததாகவும் கண்டவர்கள் என்னிடம் கூறினர் என்றார்.

(www.eelamalar.com)