எலும்புத் துண்டுகளுக்காக அரைகுறை தீர்வு வேண்டாம்! சீ.வி.

வடக்கு, கிழக்குப் இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, கூட்டாட்சியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் எமது தனித்துவம் அழிந்து விடும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தனது வழக்கமான கேள்வி பதில் அறிக்கையில் அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையை உருவாக்கி விடுமோ என்ற பயத்தை தெற்கில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான்.கூட்டாட்சிக்கு ஏன் பயம்?

சிங்கள மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அந்த மக்கள் குழுவை சிங்கள மக்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்?

நாங்கள் இதுவரையில் இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.

நான் கூட்டாட்சியைக் கோருவதால் வன்முறை வெடித்து விடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் கூட்டாட்சியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள். பின் எதற்கு இந்தப் பயம்?

ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறி விடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது ஆற அமர சிந்திக்கத் தொடங்குகின்றோம்.

தலைவர்களை உசுப்பேத்துகிறார்கள்கூட்டாட்சி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஓர் அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம்.

அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு கூட்டாட்சியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன்வர வேண்டும்.

எம்மவருட் சிலர், சிங்களவர்கள் எதிர்க்கும் போது எப்படி கூட்டாட்சியைக் கேட்பது, என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கட் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.

அரைகுறைத் தீர்வைப் பெற்றால் தனித்துவம் அழிந்து விடும். எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை ஒரு இருபது வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.

இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில்தான் வைத்துப் பேசுவார்கள்.

தெற்கத்தைய தமிழர்களின் நினைப்புஇந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்றுக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதுதான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா?

இந்த நிலை வரவேண்டும் என்பதுதான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?

வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் ‘வன்முறை வரும்’ என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெற வேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும்.

அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள்.

இன்னுமொரு 1983ஆம் ஆண்டு வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும்.அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே.

நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுகாறும் பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்?

வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை. இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம்.

தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்றுள்ளது.