வாழ்விலொரு வழிகாட்டி…!

சண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன.

விழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன்.

அவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின் நிலைகண்டு அதிர்ச்சியுற்றபோதும் அடுத்த கணம் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். விழுப்புண்ணடைந்த பெண் போராளியைப் பக்குவமாய் இறக்கி ஊர்தியில் ஏற்றினோம். ஊர்தி மருத்துவ வீடு நோக்கிப் பறந்தது.

அவனின் நினைவுகள் என்னைச் சுற்றி வட்டமிட்டன.

அவனை முதன்முதல் சந்தித்தபோதே எனக்குப் பிடித்துப்போயிற்று. அவனுள் எண்ணற்ற ஆளுமைகள் அமிழ்ந்திருந்தன. ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் கலங்கரை விளக்காய் வழிகாட்டினான்.

அவன் ஒரு பயிற்சி ஆசிரியரென்பது அவனது தோற்றத்திலேயே பளிச்சிடும். அவனிடம் ஆண், பெண் போராளிகள் ஆர்வமாய் பயிற்சி எடுப்பார்கள். பயிற்சிக் கட்டளைகள் கனீரென ஒலிக்கும். அவனிடம் பயிற்சியெடுத்துத் தேறாதவர்கள் எவருமில்லை. படையணியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அவன் பரிசு பெறாத நாட்களில்லை.

அவனுடைய படகின் நேர்த்தி அவனின் முகாமைத்துவத்தைப் பறைசாற்றியது. படகிலுள்ள அனைத்துப் போராளிகளும் அவனில் மிகுந்த பற்றுதலாய் இருந்தார்கள். அவனும் அவர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை காட்டினான். அவர்களிடையே சகோதர உணர்வு இறுகப் பிணைந்திருந்தது. கடற்சண்டைக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

காலம் கனிந்தது. கரையோர மக்களின் உயிர்களைக் காவுகொள்ள வந்த சிறிலங்காக் கடற்படை நோக்கி விரைந்தன படகுகள். மாலைப்பொழுதில் மூண்டது சண்டை. “கனோனின்” சத்தம் காதைப் பிளந்தது சிங்களக் கடற்படைப் படகுகள் சிதைந்து மூழ்கின. எஞ்சிய கடற்படைப் படகுகள் பின்வாங்கின. அவற்றிற்குத் துணையாய் பறந்தன வானூர்திகள்.

விழுப்புண்ணடைந்த போராளிதனைப் பார்ப்பதற்காய் மருத்துவ வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவன் கட்டிலில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவனிற்கான சத்திரசிகிச்சை நிறைவடைந்து சில நாட்கள் கழிந்திருந்தன. விழுப்புண்ணடைந்த நிலையையும் மீறி வீரியமாய்க் கதைத்தான். முதலில் தனது படகின் நிலைபற்றிக் கேட்டான்.

போராளிகளின் நலன் பற்றிக் கேட்டான்.

அவனின் உணவு, ஓய்வு விடயங்களில் மிகுந்த அக்கறையெடுக்கச் சொன்னேன். கையின் மேற்பகுதியில் காயமிருந்த போதும் விறைத்திருந்த விரல்களை அசைத்து உணர்வூட்டிக் கொண்டிருந்தான்.

“எல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும். படகுக்கு வந்திடுவன்” எனச் சொன்னான். எனக்கென்ன சொல்வதென்று தெரியவில்லை. அக்காவைச் சந்தித்த திருப்தி அவனுள் இழையோடியது. மீண்டும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

– – ஆ.ந.பொற்கோ
விடுதலைப்புலிகள் (சித்திரை – வைகாசி 2006) இதழிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”