பகிரப்படாத பக்கம் -05

ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்தவளின் வீரச்சாவை பதட்டமின்றி செய்தியாக வாசித்த புலிகளின்குரல் அறிவிப்பாளர்கள்….

இசைவிழி செம்பியனின் வீரச்சாவும் புலிகளின்குரலும்….

இவர்களுக்காகவும் வீசு காற்றே…

அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. 2007 மாவீரர் நாள் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் எழுச்சியாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தேசம் எங்கும் மஞ்சள் சிகப்பு கொடிகள் எழுச்சியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. எல்லை காத்து விதையாகிவிட்ட காவியப் புலிகளின் வணக்கத்துக்குரிய நாளை எதிர்கொள்ள தமிழன் வாழும் தேசங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அவ்வாறான செயற்பாடுகளோடு தான் கிளிநொச்சி மண்ணில் நிமிர்ந்து நின்று உலகத்தமிழர் வாசலெங்கும் உரிமைக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது புலிகளின்குரல் வானொலி.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின்குரல் மாவீர் நாள் சிறப்பு ஒலிபரப்போடு காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது. மாவீர்களின் தியாகங்களையும் அவர்களின் புனிதத்தையும் சுமந்து சர்வதேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பரவிக்கொண்டிருந்த புலிகளின் குரலின் பணிசார்ந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்கான வேலையில் மூழ்கி கிடக்கிறார்கள். இசையோடும் கவியோடும் நாடகத்தோடும் கணப்பொழுதோடும் வானலையாக பரவிக் கொண்டிருந்த புலிகளின்குரலை சர்வதேசமே ஏதோ ஒன்றுக்கா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் சில நிமிடங்களில் சர்வதேசமே காத்திருக்கும் அந்த குரல் காற்றோடு கலக்க இருக்கிறது. அவர்களின் ஒருவருட காத்திருப்புக்கான பல நூறு செய்திகளைத் தாங்கிய வரலாற்று பெருமை மிக்க தமிழீழ தேசிய தலைவரது உரையை ஒலிபரப்ப வானொலி தயாராக காத்திருக்கிறது. ஆனால் சிங்கள தேசத்தின் எங்கோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பெரும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தமிழீழ தேசமே நன்கு அறியும். மாவீரர் நாளின் புனிதத்தை கெடுக்க சிங்களம் திட்டமிட்டு செயல்படும் என்ற கொடூரத்தை சிறுபிள்ளையும் அறியும். அதனால் அதற்கு தயாராகவே இருந்தது எம் தேசம்.

தேசியத்தலைவரின் உரையை வானொலியில் ஒலிபரப்புவதை தடுக்க முனைப்பு கொள்கிறது அரச தலைமை. அது ஒலிபரப்பாவதன் மூலம் சர்வதேச அளவில் தமக்கு கிடைக்கப்போகும் நெருக்குதல்களை அவர்கள் சமாளிக்க முடியாது என்பதும், அவர் வார்த்தைகளை சர்வதேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நொடிப்பொழுதை உடைத்தெறிய வேண்டியதுமான இருமுனை திட்டத்தை அரசு செயற்படுத்த நினைக்கிறது. திட்டமிட்ட தாக்குதல் ஒன்றுக்கான கட்டளையை தனது விமானப்பிரிவுக்கு வழங்க, வானேறி வருகிறது வான்படையின் கிபிர் மற்றும் மிக் 27 ரக வானூர்திகள்.

துயிலும் இல்லங்கள் தோறும் திரண்டு நின்ற மக்களை பயமுறுத்தி நிகழ்வைக் குழப்ப முனைந்தாலும் அவர்களின் மிக முக்கிய நோக்கு புலிகளின்குரல் வானொலியே. அதன் ஒலிபரப்பு இடைநிறுத்தப்பட்டு தேசியத் தலைவரது உரை தடுக்கப்பட வேண்டும். அதனால் தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புலிகளின்குரல் நடுவப்பணியகம் சிதைக்கப்படுகிறது. அதில் இசைவிழி செம்பியன் என்கின்ற மூத்த பெண் அறிவிப்பாளர் மற்றும் வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம்( இவரது மகள் அறிவழகி இறுதி சண்டையில் வீரச்சாவடைந்தார்), சுரேஸ் லிம்பியோன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். வீரச்சாவுகள், படுகாயங்கள் ஒருபுறம் இருக்க, ஒரு வினாடி கூட தடையாகாத புலிகளின்குரல் ஒலிபரப்பைக் கண்டு திகைத்தது சிங்களம். பல முறை தாக்குதல் நடாத்தியும் பல நூறு இடங்களுக்கு இடம்பெயர்த்தும் ஒரு வினாடி கூட இடைவிடாது ஒலிக்கும் புலிகளின்குரலை சிங்களம் அச்சத்துடனே எதிர் கொண்டது.

இந்த நிலையில் புலிகளின் குரல் ஊடகவியலாளரான சுபா (இசைவிழி) பற்றி நாம் பார்க்கலாம். புலிகளின்குரலோடு நீண்ட காலமாக பயணித்த ஒரு தனித்துவம் மிக்கவர். யாழ்ப்பாணம் அளவெட்டியை சொந்த இடமாக கொண்ட இசைவிழி 1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் புலிகளின் குரலின் கலையகம் இயங்கிய காலத்தில் தனது ஊடக பணியை ஆரம்பித்தார். ஆனால் புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம் கோட்டைப்பகுதியில் இயங்கியது. அப்போது தினமும் ஈருருளியில் இரு இடங்களுக்கும் ஓடித் திரிந்தார் சுபா என்கிற இசைவிழி.

அந்தக்காலத்தில் புலிகளின் ஒலி,ஒளி ஊடகங்கள் இணைந்த செயற்பாட்டு நிறுவனமாக நிதர்சனம் இருந்தது. அந்த வேளையில் புலிகளின் குரலுக்குள் உள்வாங்கப்பட்ட சுபா இசைவிழி என்ற பெயருடன் தனது குரலை தேசக்காற்றோடு கலக்க விட்டார். புலிகளின் குரல் செயற்பாடுகள் மட்டுமன்று ஒளிவீச்சு மாதாந்த ஒளிச்சஞ்சிகையிலும் தனது பணியை ஆற்றிய முதல் நிலை ஊடகவியலாளர். அறிவிப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, மட்டுமன்றி ஒலிப்பாடல் தொகுப்புக்களின் அறிமுகவுரைகள், வானொலி நாடகங்கள் என பல முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். ஒரு நல்ல குரல்வளம் கொண்ட ஊடகவியலாளராக பயணித்து கொண்டிருந்தார்.

அத் தருணத்தில் அவருக்கான வாழ்வின் அடுத்த நிலை ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணம் என்ற பெரும் பந்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான ராஜன் அல்லது செம்பியன் என்ற போராளியோடு நடைபெறுகிறது. வாழ்க்கைப்பந்தம். சந்தோசம், மகிழ்வு என்று பயணித்ததன் பெறுமதியாக மூன்று குழந்தைகள். இசைவிழி செம்பியன் என்ற மணவிணையர்கள் தம் வாழ்வில் பலவருடங்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காகவே வாழ்ந்தார்கள். ( இறுதியாக விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் இராணுவத்திடம் சரண்டைந்த இசைவிழியின் கணவரான செம்பியனும் அவர்களுடைய 3 குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது வினாக்குறி) 1993 இல் இருந்து 2007 வரையான காலத்தில் தமிழீழ ஊடகப்பரப்பில் பெயர் சொல்லக்கூடியதாக பணியாற்றி தமிழீழ தேசியத் தலைவராலும் அடையாளம் காணப்பட்டவர். அவரால் மதிப்பளிக்கப்பட்டவர். தமிழீழ தேசத்தால் அங்கிகரிக்கப்பட்டவர். மக்கள் மனங்களில் நீறா நெருப்பாக நெருங்கி இருந்தவர். அவரை பற்றி அவரோடு கூட பயணித் ஒருவரிடம் வினவிய போது,

சுபாக்கா பற்றி எப்படி சொல்லுறது. எனக்கு எங்கட புலிகளின் குரலுக்க அதிகம் பிடிச்ச என் அக்கா. ஒரு நாள் கூட அவாவை சந்திக்க வில்லை எனில் என்னால் எந்த செயற்பாடுகளையும் செய்ய முடியாது அவ்வாறான ஒரு நெருக்கம் அவாவுக்கும் எனக்கும் இருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. என்னை ஒரு தங்கையாக அத்தனை அன்பையும் வாரி வழங்கிய நல்ல உள்ளம். அன்று அழகான பச்சை நிறத்து சேலை கட்டி வந்தா. துணிவும் அசாத்திய திறமையும் கொண்டிருந்த சுபாக்கா அன்று ஏனோ கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டா. தனக்கு ஏதோ நடந்து விடப் போவதை உணர்ந்ததாலோ என்னவோ அந்த பதட்டம் இயல்பாக எழுந்திருந்தது. ஆனாலும் பணியில் தளரவில்லை.

அன்று காலையிலே எம் அலுவலகம் மற்றும் கலையகங்களை தாக்க வந்து தோற்றுத் திரும்பிய சிங்கள வானூர்திகள் மீண்டும் தாக்குதலுக்காக வந்தன. திடீர் என்று எழுந்த கிபிர் விமானங்களின் இரைச்சல் எம்மை எச்சரிக்கைக்கு கொண்டு வந்திருந்தது. கிபிர் சத்தம் கேட்டு நாம் பதுங்ககழிக்கு ஓட முனைந்த போது, எம் அலுவலகம் தாக்கப்பட்டது. முதல் அடிச்ச குண்டே எம் அலுவலக வாசலை நோக்கித் தான் அடிச்சவன். பாதுகாப்பு பதுங்ககழி அதிர்கிறது. ஏழெட்டு குண்டுகள் எம் கலையகங்களையும் அலுவலகத்தையும் முழுவதுமாக சிதைத்து விட்டது.

தாக்குதல் நின்று சிறு இடைவெளியில் அலுவலக வாசலை நோக்கி சென்ற போது மதிய உணவு நேரம் என்பதால் வீட்டுக்குச் சென்று கைக்குழந்தைக்கு பாலூட்டிவிட்டு பணிக்காக வர நினைத்த சுபாக்கா பிடரிப் பக்கத்தில் பலமான காயத்தோடு வீரச்சாவடைந்திருந்தா. ஜனனியக்கா மற்றும் அன்பரசியக்கா ஆகியோர் படு காயமடைந்திருந்தனர். ஜனனியக்கா கண்டி வீதி தாண்டி தூக்கி எறியப்பட்டு கிடந்தா அவாவுக்கும் பலமான காயம். சுபாக்காக்கு என்ன நடந்தது என்று அப்போது ஜனனி அக்காவுக்குத் தெரியவில்லை. அரை மயக்கத்தில் சுபாக்காவை கூப்பிட்டுக் கொண்டிருந்தா.

காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறார்கள் அப்போது எம்மோடு கூடப்பயணிக்கும் சகோதரி ஒருத்தி சுபாக்கா…. ஏன் எங்கள விட்டு போனாய்…என்று குளறி அழுவது என் செவிகளில் விழுகிறது. சுபாக்கா வீரச்சாவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் அக்கா என்னை விட்டு சென்றது மட்டும் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என் அருகில் என் சகோதரி இல்லாத வெறுமை என்னை முழுமையாக வாட்டியது. தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என்று விழி கலங்கிய புலிகளின்குரல் அறிவிப்பாளரின் தொலைபேசியை துண்டிக்கிறேன் நான். ��வீரச்சாவடைந்த அல்லது விழுப்புண் அடைந்த அத்தனை பேரும் ஒரு கூட்டு கிளிகளாக வாழ்ந்தவர்கள். கூட இருந்து ஒன்றாக உண்டு பல ஆண்டுகளாக நெருக்கமாக வாழ்ந்தவர்கள். தம் துயரை மகிழ்வை ஒன்றாக பகிர்ந்தவர்கள். சிங்களத்தின் வஞ்சக தாக்குதலுல் வீழ்ந்து போனார்கள். கண்ணுக்கு முன்னால் ஒன்றாக ஒரு கூட்டுக்குள் வாழ்ந்தவர்கள் வீழ்ந்து போக நிலைகுலைந்தது புலிகளின்குரல் கூடு. ஆனாலும் அவர்கள் தளரவில்லை. ஒலிபரப்பை ஒர் வினாடி கூட நிறுத்தவில்லை. மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு வானோடு வருவது நிற்கவில்லை.

புலிகளின்குரலுக்கு வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக மக்களிடையே செய்தி பரவிய போது மக்கள் தங்கள் நேசத்துக்குரிய அறிவிப்பாளர்களை வானொலியில் தேடினார்கள். அப்போதும் வீரச்சாவடைந்த இசைவிழி மற்றும் காயப்பட்டிருந்த ஜனனி, அன்பரசி ஆகியோரது பதிவு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் காற்றில் வருகின்றன. இசைவிழி செம்பியன் என்ற புலிகளின்குரலின் விழுது கம்பீரமாக ஒலித்த போது இசைவிழிக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்பினார்கள். ஆனால் புலிகளின் குரல் செய்தி அவர்களின் நம்பிக்கையை உடைத்து தம் ஊடகப்பணியாளர்கள் மூவர் வானூர்தி தாக்குதலில் வீரச்சாவென்ற செய்தியை கூறுகிறது. தம் நேசத்துக்குரியவர்கள் வீரச்சாவடைந்து விட்டதை ஏற்க மனம் தடுமாறுகிறது.

தொடரக்கூடிய விமானத்தாக்குதல் அபாயம் ஒருபுறம் இருக்க தம்மோடு ஒன்றாக வாழ்ந்து பயணித்த சகோதரர்களை தம் கண்களுக்கு முன்னால் மண்ணில் வீழ்ந்த செய்தியை எந்த பதட்டமும் இல்லாமல், குரலில் எவ்வித மாற்றமும் இல்லாமல், சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள் புலிகளின் குரல் அறிவிப்பாளர்கள்.

உண்மையில் அந்த சம்பவத்தை செய்தியாகவோ அறிவிப்பாகவோ வெளியிடுவது எவ்வளவு கொடிய வேதனை என்பது உணர்ந்தவர்களுக்கே புரியும். மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு அறிவிப்பை எந்த குரல் மாற்றங்களும் இன்றி பதட்டமின்றி வெளியிட வேண்டும். இதை என் சகோதரர்கள் அன்று செய்து காட்டினார்கள். உண்மையில் என் கூடப்பிறக்காது ஒன்றாக வாழ்ந்த சகோதரியான புலிகளின்குரல் பெண் அறிவிப்பாளர் உறுதி யாருக்கு வரும்? கொடிய வேதனையை வெளிப்படுத்தாது அறிவிப்பு செய்த அவளின் உறுதியை எப்படி சொல்வது? கட்டுப்படுத்த முடியாது அணையுடைத்த அழுகையை அறிவிப்பு முடித்து கலையகத்தின் வெளியில் வரும்வரை அடக்கி வெளியில் வந்து சுபாக்கா… எங்கடீ போனாய் என்று கத்தி அழுது தீர்த்த சோகத்தை யாருடன் ஒப்பிட முடியும்?
�தன் நெருக்கமானவள் தன் வகுப்புத் தோழி, தன் பணியிடத் தோழி தன் கண்முன்னே கொடியவனின் வானூர்தி தாக்குதலில் வீழ்ந்ததை செய்தியாக வெளிக் கொண்டு வர வேண்டிய நிலையில் கலையக ஒலிவாங்கி முன் இருந்த உறுதிமிக்க ஆண் அறிவிப்பாளனின் மனநிலையை எப்படி அளவிட முடியும். இவர்களும் தாயக விடுதலையின் வேர்கள் என்பதை எம் தேசக்காற்றே தமிழ் தேசம் முழுக்க வீசு சொல்லு…

கவிமகன்.இ
27.11.2017