ஓயாத அலைகள் மூன்று -வட பகுதி பெரும் சமர்.

ஓயாத அலைகள் மூன்று – நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்.

ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலச் சமர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும்.

ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்கள குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்தை அரசபடைகளிடம் இழந்த பின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை ‘ஓயாத அலைகள் ஒன்று’ என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம் வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல் வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டிவீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகள் வசமிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர் கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் மே 13. 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஆனையிறவு வரையான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். அந்நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர் புரிந்ததால் வன்னிப்பரப்பில் பல கடுமையான சமர்கள் நடைபெற்றன. அந்நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பாதையை சிறிலங்கா அரசதரப்பினர் கைப்பற்றிக் கொண்டனர்.

பின்னர் டிசம்பர் 5 1998 அன்று சிறிலங்கா அரசபடையினர் ‘றிவிபல’ என்ற பெயரில் நடவடிக்கையொன்றைச் செய்து மாங்குளத்துக்கும் ஏ-9 நெடுஞ்சாலைக்கும் கிழக்குப் பக்கமாகவுள்ள ஒட்டுசுட்டான் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றைய தினமே ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக சிறிலங்கா அரசபடைத்தரப்பு அறிவித்தது. ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை அமைக்கும் முயற்சியை சிறிலங்கா அரசபடைகள் கைவிட்டதற்கு, விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலும் அதனால் சிறிலங்கா அரசபடைக்கு ஏற்பட்ட இழப்புக்களுமே காரணம் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பின்னர், மன்னாரிலிருந்து பூநகரி வரையான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு நிலப்பகுதியைக் கைப்பற்றி மேற்குக் கடற்கரையோரமாக யாழ்ப்பாணத்துக்கு விநியோகப் பாதையை ஏற்படுத்துவதென சிறிலங்கா அரசபடை திட்டமிட்டது. அதன்படி ‘ரணகோச’ என்ற பெயரில் தொடரிலக்கங்களுடன் பெரியதொரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. ஒன்று, இரண்டு எனத் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட ரணகோச இராணுவ நடவடிக்கையில் சிறிலங்கா அரசபடைத்தரப்பு ‘பள்ளமடு’ என்ற இடம்வரை முன்னேறியது. பள்ளமடுவில் பல சண்டைகள் நடந்தாலும் அக்கிராமத்துக்கு அப்பால் சிறிலங்கா அரசபடை முன்னேறவில்லை.

இந்நிலையில் 1999 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் புறமாக ‘அம்பகாமம்’ என்ற இடத்தில் ‘வோட்டர் செட் -1, 2′ என்ற பேரில் இரண்டு இராணுவ முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா – தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா – தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்த நேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.

இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா – தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.

இனி நேரடியாகக் கண்டி வீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்ட தூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டி வீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்கு நோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதை திறப்பில் சற்றும் சம்பந்தப்படாத – முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வு மூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்று முழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்று கொண்டது அரசபடை.

இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்கு வேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறவு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவு செய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.

அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒரு திட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதை விட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டு விட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.

மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு “வோட்டர்செட்” என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.

மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.

இந்நிலையில்தான் “வோட்டர் செட் – இரண்டு” நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.

ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.

ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.

அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்க முதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்கும் அணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.

ஓயாத அலைகள் மூன்று – கட்டம் ஒன்று

நவம்பர் 1, 1999 அன்று நள்ளிரவு ‘ஓயாத அலைகள் மூன்று’ இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது. ‘றிவிபல’ என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடைகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்த ஒட்டுசுட்டான் கூட்டுப்படைத்தளம் மீது முதலாவது தாக்குதல் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுங்கேணி, அம்பகாமம், கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், விளக்குவைத்த குளம் போன்ற ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளும், 1985 ஆம் ஆண்டு தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுச் சிங்களக் குடியேற்றமாகவும் இராணுவத் தளமாகவும் மாற்றப்பட்டிருந்த சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற நிலப்பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தாக்குதல் தொடங்கி ஐந்தாம்நாள் (நவம்பர் 5. 1999) ஏ-9 பாதையில் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முதற்கட்டம் முடிவுக்கு வந்தது.

ஓயாத அலைகள் மூன்று – கட்டம் இரண்டு

இரண்டுநாட்கள் கழிந்த நிலையில் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. ரணகோச என்ற பெயரில் தொடரிலக்கமாக நான்கு நடவடிக்கைகளைச் செய்து சிறிலங்கா அரசபடைகள் மன்னார் மாவட்டத்தில் கைப்பற்றியிருந்த நிலப்பகுதிகளை மீளக் கைப்பற்றும் நோக்கத்தோடு பள்ளமடுவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. பள்ளமடு, பெரியமடு, தட்சணாமருதமடு, மடுத்தேவாலயப்பகுதி உட்பட ‘ரணகோச’ மூலம் சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் விடுதலைப்புலிகள் மீளக்கைப்பற்றினர்.

இத்தாக்குதல் நடவடிக்கையின் போதுதான் மடுத்தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகி அங்குத் தஞ்சமடைந்திருந்த 42 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் பலர் படுகாயமடைந்திருந்தனர். இத்தாக்குதல் யாரால் நடத்தப்பட்டதென்ற குழப்பம் சிலரிடையே நிலவினாலும், கோயிலில் தங்கியிருந்த மக்கள், காயமடைந்தவர்கள் அனைவரினதும் சாட்சியங்கள் அரசபடையினரையே சுட்டின.

ஏறத்தாழ மூன்றுநாட்களில் இரண்டாம் கட்டம் நிறைவுக்கு வந்தது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.

ஓயாத அலைகளின் சமர்க்கள தொடர் பதிவுகள்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “