கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் ஜெயக்குமார்

துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோ உயிரிழந்தார். அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாலை தங்கச்சி மடம் சென்று, மீனவர் பிரிட்சோவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர, கச்சத்தீவை மீட்பது ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தி.மு.க.தான் காரணம். தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டு போயிருக்காது. மீன்பிடித்தல் தொடர்பாக இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
“இருநாட்டு மீனவர் பிரச்சனையில் 95 சதவீதம் முடிந்துவிட்டது. 5 சதவீதம் மட்டுமே முடியவில்லை. இந்திய அரசு நினைத்திருந்தால் அதையும் பேசி முடித்து பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் அரசு செய்யவில்லை.
மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்தால் அதை மனித சமுதாயத்தால் எற்றுக்கொள்ள முடியாது. எனவே, மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.