“கடலிலே காவியம் படைப்போம்”
தமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது.
இந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்டு வந்து சோ்க்கப்பட்டன. அத்துடன் விநியோக, கடற்சமர்களை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாலையிலிருந்து வழிநடாத்தினா். என்பதுடன் தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் தளபதிகள் போராளிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
இவ் விநியேக நடவடிக்கை என்பது எழுதுவதற்கு இலகுவானதாக இருந்தாலும் அவர்கள் பட்ட கஸ்டங்கள் என்பது இலகுவானதல்ல சாலையிலிருந்து ஆரம்பத்தில் அதாவது 1996,லிருந்து 2002ம் ஆண்டு வரை 60 கடல் மைல்களாகவும், பின்னர் 75 கடல் மைல்களாகவும் பின் 100 கடல் மைல்களாகவும் இறுதியில் 120 கடல் மைலாகவும் விநியோகங்கள் நடைபெற்றன. (அதாவது சாலைக்கும் கப்பலுக்குமான தூரம்) இலங்கை கடற்படையினரதும் இந்திய கடல், வான் படையினரதும் நடவடிக்கையே தூர அதிகரிப்பிற்கான காரணமாகும்.
இலங்கை கடற்படை மற்றும் வான்படை தாக்குதல்கள் அதைவிட இயற்கையான பிரச்சனைகளான காலநிலைப் பிரச்சனை அதைவிட விடிவதற்குள் கரையை அடைந்து விடவேண்டும் இல்லையேல் விமானத் தாக்குதலுக்கு இரையாக வேண்டி வரும் கரையை அடைந்தவுடன் வேகமாக கொண்டு வந்த பொருட்களை இறக்கி படகையும் அதன் ஓடுபாதைகளையும் உருமறைக்க வேண்டும் பின் அடுத்த நாளுக்கான பயணத்தை மேற்கொள்வதறகான வேலையை தொடங்கவேணும், இதற்கிடையில் உருமறைப்பை பரிசோதிப்பதற்கும் அதற்கரியவர்கள் வருவார்கள். உருமறைப்பு பிரச்சனையெனில் வேவு விமானங்களாள் காட்டிக் கொடுக்கப்பட்டு விமானத் தாக்குதல் நடைபெறும் அப்படியான சம்பவங்களும் இடம்பெற்றன.
அப்படியான சம்பவமொன்றை குறிப்பிடலாம்: 1998ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கிறேன். வேவு விமானம் எமது முகாமை அண்டிய பகுதியை வட்டமடித்துச் சென்றதும் அப்பகுதிக்கு உடனடியாக வந்த பொறுப்பாளரான லெப். கேணல் டேவிட் / முகுந்தன் அவர்கள் வேங்கைப் படகை இடம் மாற்ற உத்தரவிட்டார். அந்த படகை வேகவேகமாக மாற்றிய போராளிகள் படகிலுருந்து இறங்கிக் கொண்டிருக்கையில் வேங்கை படகு முன்பிருந்த இடத்தில் விமானத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. அன்று அவரது முடிவினால் ஒரு பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது.
விநியோக நடவடிக்கை:
விநியோகத்தின் மிக முக்கியமானது இரகசியமாகும். இரகசிய விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக நடந்து கொணடனர். உதாரணமாக எவ்வளவு தூரம் எந்தக் கப்பலை சந்தித்து கப்பலில் யாா் யாா் நின்றாா்கள் என்ற விபரத்தைக்கூட ஒருவருக்கொருவர் கதைப்பதில்லை. கடற்சமரை பொறுத்தவரையில் விநியோகப் பாதுகாப்புச் சமரே அதிகமாகும். ஏனெனில். விநியோகத்தில் ஈடுபடுவேருக்கோ அல்லது பொருட்களுக்கோ எந்தவித சேதமும் வரக்கூடாது என்பதில் கடற்புலிகளின் சிறப்பத் தளபதி அவர்கள் மிகவும் அவதானமாக இருந்ததுடன் போராளிகளையும் உறுதியாக வைத்திருந்தாா். இது ஏனைய விநியோகங்களுக்கும் பொருந்தும்.
“கடலிலே காவியம் படைப்போம்”
மீள்நினைவுகளுடன் அலையரசி.