பகிரப்படாத பக்கம் – 18

கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை 

“தம்பி இந்தியா என்ட பிள்ளையை காப்பாத்துமா?அல்லது என் கண்ணுக்கு முன்னாலையே பிள்ளையை சாகடிக்குமா தம்பி…? நல்லூரான் முன்றலில் அடிக்கடி புரட்சிக் கவிஞர் காசியானந்தனையும் அங்கே இருந்த தேவர், வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறி போன்ற போராளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தியாகதீபம் திலீபனின் அன்புத் தந்தையான இராசையா ஆசிரியர்.

அவர் கண் முன்னே அவர் பெற்ற பிள்ளை பசிப் போர் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாவடைந்து கொண்டிருந்த கொடூரத்தை எமது தேச வரலாறு பதிவு செய்து கொண்டது எவ்வளவு கொடியது.

உண்மையில் ஒரு நேர உணவை தனது பிள்ளை உண்ண வில்லை என்றால் கூட நெஞ்சில் நெருப்பேந்தி நிற்கும் தந்தைகளுக்கு மத்தியில் பசிப் போரால் இந்திய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்து நின்ற தியாகதீபம் திலீபனின் தந்தை எவ்வளவு மனவுறுதி இருந்திருந்தால், தன் பிள்ளை சாவதற்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அந்த மேடைக்கு அருகில் இருந்தருப்பார்? பிள்ளை செத்துக் கொண்டிருந்ததை விழி கரைய பார்த்துக் கொண்டிருப்பார்?

பூமி உயிருடன் இருக்கும் வரை எந்த தந்தையாலும் செய்ய முடியாத தியாகம் இது. மாவீரர்கள் மட்டும் அல்ல அவர்களைப் பெற்றவர்களும் தியாக வேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதற்கு திரு இராசையா ஆசிரியர் ஒரு சாட்சியம். ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த தந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? தன் மகன் செத்து விடுவானோ என்ற ஏக்கம் ஒருபுறம் கனன்று கொண்டிருக்கும். மறுபுறம் இந்திய அரசு எப்பிடியாவது பிள்ளையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கும். நல்லூர் கந்தன் கைவிட மாட்டான் என்று நம்பிக்கை இருந்திருக்கும். அடிக்கடி முருகனை கையெடுத்து வணங்கி இருப்பார்.

தாய் இல்லாத நிலையிலும் தனி ஒருவனாக வளர்த்து மருத்துவபீட மாணவனாக உயர்நிலையை பெற வைத்த அந்த தந்தை இந்த தருணத்தை எவ்வாறு அனுபவத்திருப்பார்? இருந்தாலும் அவர் தன் கண்முன்னே பிள்ளை செத்துக்கொண்டிருந்ததை தாங்கிக் கொண்டிருந்தார்.

இந்து சமயப் பற்றும் தமிழ் மீதான பற்றுதலும் பண்ணிசைகளும், விபூதி சந்தனம் என்று சிறுவயதில் அமைதியாக வளர்ந்த பிள்ளை தீ ஏந்தி பெரும் போர் வீரனாக மாறியது யாரால்? இன்று தன் வயிற்றில் பசித் தீயை மூட்டிவிட்டு சாவுக்கே வீரம் உரைத்து படுத்திருந்தது யாரால்? என்பவை எல்லாம் எம் மீது வல்லாதிக்கங்களை கட்டவிழுத்து விட்டிருந்த எதிரிகளுக்கு புரிந்திருக்கும். அதனால் தான் அமைதியாக பெரு வீரனை சாகடித்தது இந்திய தேசம்.

நெஞ்சை உருக்கும் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிய இந்திய தேசத்தை நாம் என்னவென்று கூற? தமிழீழ விடியலுக்காக களம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை முடக்கி விட வேண்டும் என்ற அப்போதைய சிங்களத்தின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை இடையே யூலை 29, 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் என்று கூறப்பட்ட “இலங்கை இந்திய” ஒப்பந்தத்தை வைத்து இந்திய வல்லாதிக்கப்படை இலங்கைக்குள் அமைதிப்படை என்ற பெயரில் கால் வைத்தது.

இந்திய வல்லாதிக்கத்தின் கபடத்தை புரிந்து கொண்டார்கள் விடுதலைப்புலிகள். அதனால் தான் ஆயுதவழிப்போர் முறையில் யாரிடம் இருந்து தம்மை மேம்படுத்தினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவ்வாயுதத்தை திருப்பி அவர்களுடன் சண்டையிட முடிவெடுத்திருந்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

இக் காலகட்டத்தில் தான் பயங்கரவாதிகள், ஆயுதவிரும்பிகள் என விடுதலைப்புலிகளை குறிவைத்து சர்வதேசப் பரப்புரை ஒன்றை முன்னெடுக்கத் தொடங்கிய சிங்களத்துக்கு நாம் ஆயுதவிரும்பிகள் இல்லை என்பதை காட்ட வேண்டிய தேவை எழுந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப்போராட்டம் தோற்ற நிலையில் ஆயுதவழிப் போராட்டத்தை எம் மீது திணித்த சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் அறவழியில் இருந்து நாம் இன்னும் வெளியில் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையும் எழுந்த போது திலீபன் என்ற புனிதன் அதற்கு தயாராகினார்.

அந்த தருணத்தில் தான் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் தேசியத் தலைவரை சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது,

“அண்ண இது தான் திலீபன். “

என அறிமுகப்படுத்தி அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகிறார். திலீபனோடு இணைந்து பணியாற்றுமாறு கட்டளையிட்ட தலைவர் தன் பணியில் மூழ்கி விடுகிறார். தியாக தீபம் திலீபனுடனான குறுகிய நாள் பயணத்தில் ஆற்றல்மிக்க ஒரு இளைஞனை தான் கண்டு கொண்டதாக குறிப்பிடுகிறார் கவிஞர் காசியானந்தன்.

இந்நிலையில்,
வவுனியாப் பகுதியில் நடந்த சண்டை ஒன்றில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களை மக்களின் வணக்கத்துக்காக தாயக பிரதேசம் எங்கும் கொண்டு செல்லுமாறு திலீபன் பணிக்கிறார். அப்பணியை ஏற்றுக்கொண்டு தாயகம் எங்கும் பயணித்து மீண்ட காசியானந்தனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த தருணத்தில் தான் உண்ணாநிலைப் போராட்டத்துக்கான முடிவெடுக்கப்பட்டிருந்தது.

எங்கட விடுதலைப்போராட்டத்தின் அடுத்த நகர்வு ஒன்றாக இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தார்ப்பரியங்கள் விளக்கப்பட்டு திலீபனின் உண்ணாவிரத்ததை ஆரம்பித்து வைக்க தலைவரால் பணிக்கப்படுகிறார் கவிஞர் காசியானந்தன். அப்போது கூட இது நடந்தால் திலீபனை இழந்து விடுவோம் என்று உள்மனம் கூறினாலும் இலட்சியப் பற்றில் விடாத கொள்கை கொண்ட திலீபனின் முடிவை மாற்ற யாராலும் முடியவில்லை.

உண்ணா நிலைப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவு கண்டன. 15 ஆம் நாள் புரட்டாதி 1987 ஆம் ஆண்டும் பிறந்தது. பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய கொடிய நாள் பிறந்தது. உண்ணாநிலைப் போருக்கு தயாராகி மேடையில் ஏற வந்தவரை இடை மறித்த தாய் ஒருத்தி வீரத்திலகமிட்டு அனுப்புகிறாள். இது திலீபனின் மனதில் இன்னும் அதிகமான பற்றுதலை ஏற்படுத்தியது. ஒருவேளை பெற்ற தாய் இருந்தருந்தால் கூட இவ்வாறு தான் திலகமிட்டு அனுப்பி இருப்பார். தந்தையைப் போலவே மேடையை சுற்றி சுற்றி வந்து தன் பிள்ளையை இந்தியா காப்பாற்றுமா என வேண்டியிருப்பார். ஆனாலும் திலீபனின் முடிவினை எதிர்க்கவோ தடுக்கவோ முயன்றிருக்க மாட்டார். ஏனெனில் அந்த வீரத்தாயின் வயிற்றில் பிறந்தவனே இவ்வாறான தியாகத்தின் உச்சமாக இருக்கும் போது எவ்வாறு தாய் மட்டும் கோழையாக இருக்க முடியும்? திலீபன் தன் தாயை நினைத்தாரோ என்னவோ புன்னகை புரிந்த படி திலகமிட்ட தாயையும் தன் மக்களையும் பார்க்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக 5 வகை கோரிக்கையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நீர்கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துகிறார்கள் பிரசாத் தலமையிலான போராளிகள். மக்களும் போராளிகளும் சுதந்திரப்பறவை பெண்களும் என மாறி மாறி மேடைகளில் கவிதைகளாகவும் பேச்சுக்களாகவும் தியாக தீபத்துக்கு இன்னும் உரமேற்றியும், வேண்டாம் அண்ணா இதை கைவிட்டு எம்மோடு உயிரோடு இரு அண்ணா என்றும், இந்தியத்தை கெஞ்சி மன்றாடியும், நல்லூரான் கந்தனை மன்றாடியும் என நிகழ்வுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இராசையா ஆசிரியரோ விழிகளில் இருந்து ஓடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மேடைக்கு அருகிலும், பின்னாலும் முன்னாலும் என்று அலைந்து கொண்டே இருக்கிறார். வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி போராளிகள் கொடுக்கும் உணவில் எப்போதாவது ஒரு தடவை கொஞ்சமாக உண்டார். தூக்கமில்லை. துவண்டு கொண்டருக்கும் தன் பிள்ளையை நினைத்து நினைத்து செய்வதறியாது இருந்தார்.

இந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார். தன் மகன் கிடந்த கோலத்தை ஒவ்வொரு வினாடியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையால் அந்தக் காட்சியை காண முடியவில்லை. இறுதிவரை மகனை இந்திய அரசு காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த அவரின் நம்பிக்கையை உடைத்தெறிந்து துரோகம் இழைத்தது இந்திய வல்லாதிக்க அரசு.

இந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது பாதுகாப்பு போராளிகள் மற்றும் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் ஆகியோருடன் முகாம் ஒன்றில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். திலீபன் வீரச்சாவடைந்துவிட்டதாக தலைவருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. உண்ணா நிலைப் போராட்டத்தின் முடிவெடுக்கப்பட்ட நாளில் இருந்தே தியாக தீபம் திலீபனை நினைத்து வாடிக் கொண்டிருந்த தேசியத் தலைவரின் விழிகள் கண்ணீரை சொரிகிறது. எதற்கும் அஞ்சாத பெரு வீரனின் விழிகள் அன்று திலீபன் என்ற ஒற்றை புனிதத்துக்காக கலங்கி நின்றது.

மகனின் வித்துடல் தாங்கிய ஊர்தியோடு இறுதிவரை பயணித்த தந்தை தாங்க முடியாத வேதனைகளை மனதுக்குள் புதைத்து விட்டு வீரப் புதல்வனுக்காக வணக்கம் செலுத்துகிறார். இன்றும் எங்கள் மனங்களில் தியாக தீபம் திலீபனைப் போலவே அவரின் தந்தையும் நிலைத்து விட்டார். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான்.

நன்றி கவிஞர் காசியானந்தன்

அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான்.

நன்றி புரட்சிக் கவிஞர் காசியானந்தன்.
இ.இ.கவிமகன்
19.09.201