கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

உலகை உலுப்பிய – ஈழத்தமிழர்களுக்கு எதிரான – கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டமானது-

இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பிற்கான சர்வதேச விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்.

இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை நிலை உறுதி செய்யப்பட வேண்டும்

தமிழர் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களுக்கான தீர்வு அமைய வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது.

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான இனச்சங்காரமே கறுப்பு ஜூலை. தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.

இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கை வைத்துள்ளது சிங்கள அரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டு வருகின்றது.

கறுப்பு ஜூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்குகின்ற ஒரு காலமாக இனி வரும் காலம் அமைய புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்க வேண்டிய காலம் இது.