கார்த்திகை27
என் உடலை வைத்தேனும் போராடுங்கள் ; ஈழத்திற்காக தன்னுயிரை ஈந்த முத்துக்குமாரின் கதை.!
★முத்துக்குமார் என்ற பெயர் எங்கேனும் உச்சரிக்கப்படுகையில் நெஞ்சினுள் தேக்குமரம் போன்றதோர் உடல் கொண்ட இளைஞனின் உடல் மீது பற்றி எரிகிற நெருப்பும், ஈழத்தில் அன்னைத்தமிழ் சாதியினர் மீது ராணுவத்தின் குண்டுகள் பொழிகிற காட்சிகளும் நம் மனக்கண்ணில் ஓர் நொடி எழுந்து அடங்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னையில் பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் அவர்.
ஈழத்தில் தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கேட்டு போராடிய தமிழர்கள் மீது வல்லாதிக்க நாடுகளின் அனைத்து விதமான உதவியுடன் இறுதிப்போரை கடந்த 2009 ஆம் ஆண்டில் நடத்தியது சிங்கள ராணுவம். அங்கே பச்சிளம் குழந்தைகளும், பெண்களும், முதியோரும் கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கையில் ஈழத்தின் மீதும், புலிகள் இயக்கத்தின் தலைமை மீது ஒப்பற்ற பற்றுதல் கொண்டிருந்த முத்துக்குமார் இனி அரசுகளை நம்பி பயனில்லை.
நம் உடலையேனும் ஆயுதமாக்குவோம் என தீர்க்கமானதோர் முடிவெடுத்து கடந்த 2009 சனவரி 29 அன்று காலை சாஸ்திரிபவனுக்கு வந்து திடீரென தன்னுடலில் மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி முழக்கமிட்டவாறே மண்ணில் வீழ்ந்தார்.
அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்கும் முன்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், “இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். ஒன்றிய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது” என்று முத்துக்குமார் தெரிவித்தது அவர் ஈழத்தின் மீது கொண்டிருந்த பற்றுதலை புலப்படுத்தும்.
‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’; என்று அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததும் அவரது ஈகத்தை வெளிப்படுத்தும். அவரது இறுதி ஊர்வலத்தில் எண்ணற்ற பொதுமக்களும், இளையோர்களும் கலந்துகொண்டது நெகிழ்ச்சிப்பூர்வமாக இருந்தது.
ஈழத்தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்று தமிழர்கள் முழுக்கமிடுவது வெறுமனே வாய் வார்த்தை அல்ல என நிரூபித்தது முத்துக்குமார் உள்ளிட்டோரின் ஈழத்துக்கான ஈகம்.