குண்டர் சட்டத்தில் திருமுருகன் கைது ஏன்? –உயர் நீதிமன்றம்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தொடர்பாக காவல் துறை கமி‌ஷனர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினாவில் கடந்த மே மாதம் 21-ந்திகதி மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த மே 17 இயக்கத்துக்கு அனுமதி வழங்க சென்னை காவல்துறை மறுத்தது.

இதையடுத்து, தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையடுத்து, சட்ட விரோதமாக கூடியதாக கூறி திருமுருகன் காந்தி உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து திருமுருகன், டைசன், இளமாறன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதில் எங்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்டு 3-ந்திகதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை காவல் துறை கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.