கூடு விட்டு கூடு பாய்ந்த புலி! ஆம் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
தமிழகத்தின் வீதிகள் யாவும் கொதிநிலை அடைந்துள்ளன. காணும் விழிகள் யாவும் நெருப்புத்துண்டங்களாக தகிக்கின்றன. நெருப்பு பற்றுகிற போது கிளம்பும் பரபரப்பு யாவர் செவிகளிலும் பற்றுகிறது. இதயத்துள் குடைந்து தோய்கிறது ஈழத்தில் இனம் மாண்ட ரணத்தின் சேறு.
ஒட்டு மொத்த பயிலும் இளம் தலைமுறையும் உணவை மறுத்து வடக்கிருக்கின்றமையால் எமது அடுப்புகள் சில்லிட்டிருக்கின்றன. அவர்கள் மாணவர்கள் ஆடுகளங்களில் அலைந்து களிப்பவர்கள். இந்தக்கணங்களில் அவர்களின் மனங்களை தமிழீழத் திருமண் வியாபித்திருக்கிறது. மாவீரப்புனிதர்கள் அங்கே தவமிருக்கிறார்கள். தான் பெற்ற பிள்ளைகளின் மடியில் தலைவைத்து படுத்திருக்கிறாள் தமிழன்னை.. வரலாற்றின் வஞ்சணைப்பிணி அவளை நோகடித்திருக்கிறது.
எம்மினம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. எம்மை அழிப்பவர்கள் எமது தோள் மீதே அமர்ந்திருக்கிறார்கள். எமது கைகளைக் கொண்டே எம்மீரல் குலையில் குத்துகிறார்கள். எம் கைகளை எமக்கெதிராய் பணிக்காதே எனச்சொல்லவுமே நாங்கள் திராணியை தேடிக்கொன்டிருக்கிறோம்.
எமது ஒரு கரம் வெட்டப்படும்போது மறுகரத்தால் உண்டு கொன்டிருந்தோம். ஒரு கண் பிடுங்கி எறியப்பட்டபோதும் மறுகண் அப்பக்கம் திரும்பவில்லை. எமக்கு என்ன வியாதி என்றே விளங்காத போது எமது மாணவர்கள் அதை நாடிப்பிடிக்கின்றனர். மரத்த மனத்தில் குளிர் நீர் விழுந்த்ததாய் உணர்கிறாள் தமிழ்த்தாய். அதோ பட்டினி கிடக்கும் இளம் பிள்ளைகளின் மடியில் அந்தப்பெருந்தாய் சற்றே அயர்கிறாள்
பீறித்தெறித்த குருதியில் மூழ்கிய இளம்குழவிகளின் சதைச்சேறு. சிதறிய கபாலங்கள். நாறிக்கிடந்த தாய்த்திருமேனிகள் நரிகள் பிடுங்கிய கருவறைகள். அவ்வாசலில் வழிந்த சிசுக்கள். உயிர் வாதையின் கூக்குரல்கள் இயற்கையே அதிர்ந்த ஈனங்கள் இப்புவியில் இதுகாறும் எந்த இனமும் சந்திதிராத் கோரம் அக்கிரமம், அனாச்சாரம்……புழுவைப்போல் வளைந்த செங்கோல்கள். சூறைக்காற்றில் சிதறிய வெண்கொற்றக்குடைகள் பொந்துக்குள் ஒளிந்த தர்ம தேவதை. முகத்தை புதைத்துக்கொண்ட தேவ குமாரர்கள். இவை முள்ளிவாய்க்கால் காட்சிகள். 9 ஆண்டுகள் கடந்தும் அந்த கொடுங்கனவு எம்மை துரத்துகிறது. செத்தாலும் எம் சிதையிலும் அவை எரியா.
.. எமது தமிழ்மனக்கூடு அதிர்ந்தேகிடக்கிறது. புயல் தாக்கிய கூரை போல். இந்த நான்கு கொடும் ஆண்டுகளாய் யாம் வதைந்தவிதம் இந்த இனத்தில் பிறந்தவனும், இவ்வினத்தின் ஆன்மாவையில் வழிப்பேறாய் பெற்றவனும் மட்டுமே உணர முடியும். நாங்கள் மன நோய் பீடிக்கப்பெற்றோம். எத்தனை இரவுகள் துணுக்கொற்றெழுந்தோம் எழுகிறோம். கொண்டாட்டங்களை யாம் வெறுத்தோம். இனிப்புகளை தவிர்த்தோம். சிரிப்பைக்கூட யாம் புதைத்தே வைத்தோம்.
யாம் எமது துக்கம் தொண்டைக்குழியில் கல்லாய்க்கிடக்க தவித்தோம். தாளா கோபம் மீளாத்துயரம் என நொறுங்கிகிடந்த வேளை. எங்கள் குலக்கொழுந்து பாலச்சந்திரனின் எழிலூறிய திருமுகமும் இதயத்துக்குள் ஊடுறுவிய விழிகளும் கொடியோனால் துளைக்கப்பெற்ற பால் மேனியும் கண்ட நொடி யாம் துடித்தோம். பல்லாயிரம் பாலச்சந்திரங்கள் எம் கண்முன் சிதைந்து கிடக்க கொதித்தோம் திமிறி எழும் திராணி பெற்றோம். எம்மை எம் பாலகன் ஆட்கொண்டானோ. பரிசுத்த ஆவியாய் எம்முள் நுழைந்தானோ. எமக்கொரு பராக்கிரமம் தந்தானோ!.எங்கள் தெய்வம் பெற்ற தெய்வமல்லவா! அவன்
இதோ மாணவரின் எழுச்சியாய் தமிழர் யாம் எழுந்தோம். கண்ணீரின் .துளிகளை நாம் கல்லாய் எறிகிறோம். சிதைந்த எம் சதைப்பிண்டங்களை பிய்த்தெறிந்து யாம் போர் செய்யும் வேளை எதிரி எம் மாணவர்களின் எழுச்சியை பார்த்து கலக்கமுறுகிறான். அவர்களின் கனல் விளையும் விழிகளைக்கண்டு அவன் அலறுகிறான். ”புலி”…புலி’’என்று
ஆம் சிங்களத்தின் தூதுவன் எம்மை பயங்கரவாதி என்கிறான். எமது அறப்போரை பயங்கரவாதம் என்கிறான். அவன் பயங்கரவாதி என்றால் அதற்கு புலி என்றுதானே பொருள். ஆம் அவன் சரியாக கண்டு கொண்டான். ஏனெனில் அவனுக்குள் பயங்கரத்தை நிறுவியிருக்கும் அந்தக்கண்களை அவனால் எப்படிமறக்க முடியும். ஒழித்துவிட்டோம் என இறுமாந்திருந்தவன், மீண்டெழக்கண்டு அலறுகிறான்.
அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
புலி கூடுவிட்டு கூடு பாய்கிறது. மாவீர்ர்களின் உடலில் இருந்து மாணவர்களின் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்கிறது.
புலிகள் இங்கே தமிழ்நாட்டில் மாணவர்களின் தோற்றத்தில் பதுங்கிப்பாய்கிறார்கள்! அவர்களை இயக்கும் மந்திரம் பிரபாகரம்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
-முத்துக்குமரதாசன்
-மீள்பதிவு