கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் காணிகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் நாளுக்கு முதல் விடுவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய 279 ஏக்கர் காணியை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
248ஏக்கர் அரசகாணிகள் கேப்பாப்புலவிலிருந்தும், 31ஏக்கர் தனியார் காணிகள் சீனியாமோட்டையிலிருந்தும் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய காணிகள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 5 மில்லியன் ரூபா நிதி மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்படும் பட்சத்தில் 189 ஏக்கர் தனியார் காணிகளும் ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதற்கமைய கேப்பாப்புலவிலுள்ள 468 ஏக்கர் காணிகள் முழுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவின் கீழ் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.