சசிகலா பதவியேற்பு
அதிமுகவின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா 31.12.16 நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிமுகவின் பொதுச் செயலர் அறைக்குச் சென்ற சசிகலா, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பொதுச் செயலர் நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் அவர் அங்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் நேரில் அளிக்கப்பட்டது. நிர்வாகிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அவர் ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 11.30க்கு முன்னதாகவே தலைமை அலுவலகத்துக்கு வந்து முன்னேற்பாடுகளை செய்தனர்.
புதிய பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, அது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய குறிப்பேடுகளில் கட்சியின் பொதுச் செயலாளரின் பெயர் ஜெயலலிதாவுக்குப் பதிலாக சசிகலா எனக் குறிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(www.eelamalar.com)