சரணாகதியும் புதிதாக முளைக்கும் தமிழின துரோகிகளும் – தலைவர் பிரபாகரன் அவர்களின் செய்தியும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை உலகத் தமிழர் அறுதிப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஈழத் தமிழர்களை பொறுத்தவரை, ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் – அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் துரோகம், கூட்டுசதி மேற்கத்திய நாடுகளின் சதி வலைகள் காரமாக தற்காலிகமாக மௌனிக்கப்பட்டு தமிழின அழிப்பின் பின்னர் தாயகம் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இடையில் புதியவகை ‘போதகர்கள்’ புறப்பட்டிருக்கிறார்கள் இந்த 10ஆண்டுகளில்.

‘ஒற்றுமையுடன் இருப்போம்!

ஆயுதப் போராட்டம் வேண்டாம்.

அரசியல் போரே ஒரே வழி

இராஜதந்திர நகர்வுகளே தீர்வு தரும்!’

ஆகியவை இந்தப் புதிய போதகர்களின் மந்திரங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முதல் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சிங்கள இந்திய உளவுத் துறைகளின் பரப்புரைகளை மறுத்துரைக்காமல் அந்த சரிவுகளிலிருந்து போராட்டத்தை மீட்டு எடுத்து வழி நடத்தும் முயற்சிகளில் இறங்காமல் மேற்கண்ட மந்திரங்கள் சில பிரமுகர்களால் ஓதப்படுகின்றன. இன்னும் பலர் தங்களை பெரியாளாக காட்ட முனைகின்றனர். கண்டபடி அறிக்கைகளை விடுகின்றனர். இன்னும் பலர் யார் அறிக்கை விடுவதென சண்டை பிடிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிரிகளிடம் சரணடையச் செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் இந்த நான்கு வரி மந்திரம் கொண்டுள்ளது. அதன்படி இந்த பத்தாண்டுகளில் திட்டங்கள் நகர்தப்பட்டு வருகின்றது. 2009 தமிழின அழிப்பின் பின்னர் துரோகி கே.பி தொடக்கி வைத்த இந்தச் சரணாகதி மதம் தாயகத்தில் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கட்சி தொடங்கி புலம்பெயர் நாடுகள் கடந்து தமிழகத்திலும் வேர் பிடிக்க நுழைந்திருக்கிறது. ‘ஒன்றிணைவோம்!’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன? இந்த அழைப்பு யாரை நோக்கி விடுக்கப்படுகிறது? இந்தச் சூழலில் இந்த அழைப்பின் தேவையும் நோக்கமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடினால் சரணாகதி மதத்தின் ‘தத்துவம்’ புரியும்.

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி அரசியல் வழியில் மட்டுமே முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ‘வன்முறை’ வழிகள் இனி பலன் தராது. இந்திய சிங்கள அரசுகளுடன் நல்லுறவின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற வேண்டும் என்று இந்த புதியவகை போதகர்கள் பிரச்சாரங்களை கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேற்கொண்டு தற்போது இந்த பத்தாவது ஆண்டு இதனை விரிவு படுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாபெரும் இடர்களைத் தோற்றுவித்த ஒட்டுக் குழுக்கள் எப்போதும் முன்வைத்த மந்திரம் – ‘ஒன்றுபடுவோம்’ என்பதே. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் இந்தச் சதிகார ‘ஒற்றுமை’ குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போதைய ‘ஒன்றிணை வோம்’ மந்திரத்தின் பின்னாலிருக்கும் சதிவலையை உணர வேண்டிய அவசியம் இருப்பதால், விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவப் பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

“தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை வரித்துக் கொண்ட சகல விடுதலை அமைப்புகளும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல்.

“…நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழ் ஈழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ, அன்றி பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் நெருக்குதல் காரணமாகவோ, அவசரப்பட்டுச் சமைத்த சாம்பார் ஒற்றுமையாக அமைவதை நாம் விரும்பவில்லை.

“…நாம் விரும்புவது உண்மையான, நிரந்தர ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப் போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களிலிருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில் புரட்சிகர சக்திகள் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்”.
(தலைவர் வே. பிரபாகரன் – விடுதலைப்புலிகள் – இதழ் – ஏப்ரல் 85)

ஈபிஆர்எல்எஃப், டெலோ, ப்ளாட், ஈரோஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சூழலில், இக்குழுக்களில் பெரும்பான்மையானவை இந்திய அரசின் வளர்ப்புப் பிள்ளைகளாக வலம் வந்த நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழ மக்களை மட்டும் நம்பி இயங்கினர். பிற ஆயுதக் குழுக்கள் தமது இந்திய எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து செயல்படாதவர்கள். அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் எதேச்சாதிகாரக் குழுவினர்’ என்று பரப்புரை செய்தன. இந்தப் பரப்புரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியே மேலே கண்டது. இது தொடர்பான விவாதங்கள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் மிக ஆழமாகவும் நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டன. விளைவாக, 1985 ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O)

3. ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S)

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F)

ஆகிய நான்கு அமைப்புகளும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டன.

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.

2. ஈழத் தமிழர் (இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின்) சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத்திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

5. உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து, அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்

– இவையே ஒருங்கிணைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள்.
(விடுதலைப் புலிகள் இதழ் – மே 85)

இந்த ஐந்து கோட்பாடுகளில் ஒன்றிலிருந்தும் வழுவாமல் இன்று வரை விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இதே உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிற மூன்று குழுக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுக்குழுக்களாக மாறியதை வரலாறு உணர்த்தியுள்ளது. ‘ஒன்றிணைவு’ குறித்து அதிகமாகப் பேசிய அனைத்து ஆயுதக் குழுக்களும் விடுதலைப் போருக்கு எதிரான முகாம்களில் பதுங்கியிருந்த படிதான் செயல்பட்டன.

ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் ஆசியோடு தமிழகத்தில் தங்கிக் கொண்டு, அனைத்துவிதச் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு, புரட்சிகர வசனங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதன் வழி மட்டுமே தமது ‘விடுதலைப் போரை’ நடத்திக் கொண்டிருந்தன”. விடுதலைப் புலிகள் இவர்களை, ‘காகிதப் புரட்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ஆனால், இந்த ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் செய்த ஒரே பரப்புரை, ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைய மறுக்கிறார்கள்’ என்பதுதான்!

ஆக, ‘ஒன்றிணைதல்’ என்ற சொல்லின் பின்னே அன்று முதல் இன்றுவரை ‘இந்திய ஏகாதிபத்தியத்தின் சதிகார முகம்’ ஒளிந்து கொண்டுள்ளது. கூட்டமைப்பு தொடக்கம் புலம்பெயர் அமைப்புக்கள் வரை வலியுறுத்தும் ‘ஒற்றுமை’க்கு என்ன கோட்பாட்டு நிபந்தனைகள் உள்ளன?

தனித் தமிழீழம் அமைய வேண்டும் – என்பதை இவ்விரு போதகர்களும் பேச்சளவில் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், அதைச் சாதிப்பதற்கான செயல்திட்டம் என்ன என்பதை ஆராயும் போதுதான் இவர்களின் சொல்லடுக்குகளுக்குப் பின்னால் உள்ள உண்மை முகங்கள் தெரிகின்றன. இந்திய அரசோடு நல்லுறவு பேணிக் கொண்டு, அமெரிக்க, பிரித்தானிய போன்ற மேற்கத்திய நாடுகளையும் இணைத்துக் கொண்டு, மைத்திரி, ரணில் மற்றும் ராஜபக்சேயின் காலில் விழுந்தாவது அரசியல் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்து இராஜதந்திர வழியில் தனித் தமிழீழம் அமைக்கப் போகிறார்களாம்!

இவ்வளவு ‘எளிய வழிகள்’ இருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 35 ஆண்டுகள் சமர் புரிந்தார்கள் என்று வியக்க வைக்கும் செயல்திட்டங்கள் ‘இவை’! எதிரிகளிடம் சரணடைந்து விடக்கோரும் திட்டம் இது. எல்லா சரணடைவுகளுக்கும் ‘ஒன்றிணைவு’ என்ற சொல்லே மூல மந்திரம்!

இதே போன்ற சூழலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட தலைவர் பிரபாகரன் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரசார சாதனமாகக் கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியற் சந்தர்ப்பவாதமாகும்’ (விடுதலைப் புலிகள் இதழ் – ஏப்ரல் 85)

ஒரு தேசிய இனத்தின் விடுதலையைக் கெஞ்சிப் பெற முயல்வது, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வாங்க நினைப்பது, போராட்டமே நடத்தாமல் அடைய முனைவது ஆகிய குணநலன்கள் கோழைத்தனத்தின் தன்னலத்தின் வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்கால் படுகொலையின் பிறகு மேலும் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய தமிழினம் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றது. எது கரைந்து காணாமல் போகிறது என்பதை அறிய வேண்டும். வீரம் – கோழைத்தனம் ஆகிய இரண்டும் இரு இயல்புகள். ஒரு மனிதரின் கோழைத்தனம் குறித்து நாம் குறைபட இயலாது. ஆனால் தன்னலம் ஆபத்தானது. அது நல்லவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

இதனை விடுதலைப் புலிகள் இவ்வாறு விவரிக்கின்றனர்.
“எமது அரசியல்வாதிகள் எமது மக்களது தேசியப் பிரச்சினையின் முழுவடிவத்தினையும் அதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பதையும் இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோ தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கவில்லை. தனியரசு தவிர்த்த சலுகைகள் பெறுவதற்காகவே இவர்கள் கொழும்புக்கும் டெல்லிக்கும் ராஜதந்திரக் காவடி எடுத்து வந்தனர். ஒரு தேசிய இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு தலைமை, அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையிலும் அதற்கான அரசியற் தீர்விலும் குழம்பி நின்று, ‘மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கட்டும்’ என்ற மதி நுட்பமற்ற தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்து வந்ததாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
(விடுதலைப் புலிகள் இதழ் – மே 84)

35 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் சந்தித்துக் கிள்ளி எறிந்த கருத்துதான் ‘சரணாகதி மதம்’ என்பது. நபர்கள் மாறியுள்ளனர். கருத்து ஒன்றுதான் – என்பதை மேற்கண்ட தலையங்க வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. புலிகள் அடையாளம் காட்டிய ‘ராஜதந்திர காவடி’யைத் தற்போது அன்னக்காவடி துக்கியுள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது. போராடிய இயக்கம் இன்று உறங்கு நிலையில் உள்ளது. தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இனமே அல்லாடுகிறது. ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். எதிரிகளோ களியாட்டம் போடுகின்றனர். ஒட்டுக் குழுக்களின் பரப்புரைகளில் பிணம் தின்ற ஓநாய்களின் உற்சாக ஊளையைக் கேட்க முடிகிறது. எங்கும் வேதனை, சோகம், மன இறுக்கம், தவிப்பு, மனநோய்க்கு ஆளாகிவிடுவோமோ, மாரடைப்பு வந்து விடுமோ என்ற பதைப்பு!

ஆனால், இதுவும் ஒரு போராட்டச் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவிடுதலைப் போர் நடக்கிறது என்பதன் அறிகுறிகள்தான் இவை. இத்தனை ஆண்டுகள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகினோம். இப்போது கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெறும் பின்னடைவுகளை ஏற்க இயலவில்லை. வெற்றியின் களிப்பில் பங்குபெற்ற நம் அனைவருக்கும் இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

எந்தப் புலிகள் நம்மைப் புன்னகைக்க வைத்தார்களோ… அந்தப் புலிகள் முகங்களில் மீண்டும் புன்னகை பூக்க வேண்டும். எந்தப் புலிகள் நமக்குத் ‘தமிழர்’ என்ற பெருமிதத்தை இறுமாப்பை மீட்டுத் தந்தார்களோ… அந்தப் புலிகள் மீண்டும் இறுமாப்படையச் செய்ய வேண்டும். இவையே போராடும் இனத்திற்குத் தேவையான குணங்கள்.

“சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானமிழந்து ‘தலைகுனிந்து’ வாழ வேண்டும். பயந்து பயந்து பதட்டத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”
(தலைவர் வே. பிரபாகரன் – விடுதலைப்புலிகள் இதழ் – மே 84)

இவையே தலைவர் பிரபாகரன் கடைபிடிக்கும் கோட்பாட்டு வரிகள். அவரோ, புலிகள் இயக்கமோ ஒரு போதும் ‘சரணாகதியை’ ஏற்றதில்லை. எதிரிகள் நமது இனத்தை அழிக்க முடிவு செய்துவிட்ட பிறகு, அவர்களிடம் சரணடைந்தாலும் மரணம்தான். திருப்பி அடித்தாலும் மரணம்தான். இவற்றில் இரண்டாவது வழியில்தான் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது. ‘சரணாகதி’ என்பது ஒரு இனத்தை அழித்தொழிக்கும் திட்டம் ஆகும்.

சரணாகதி மதத்தவர்’ அனைவரும் எழுச்சி மிக்க வசனங்கள் பேசுகின்றனர். தலைவர் பிரபாகரன் குறித்து சிலாகிக்கின்றனர். இவையெல்லம், புரட்சிகர அடையாளங்கள் அல்ல. மாறாக, நடவடிக்கைகள் மட்டுமே அடையாளத்தைத் தீர்மானிக்கும்.

இயேசு ஒரு கலகக்காரராக வாழ்ந்தவர். மத நிறுவனங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜெருசலேம் நகருக்குத் தம் சீடர்களுடன் சென்ற இயேசு தேவாலயத்தின் முற்றத்தில் வணிகர்கள் கடைவிரித்திருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அவ்வணிகர்களை அங்கிருந்து விரட்டுகிறார். புறாக்களை விற்பவனிடமிருந்து அப்புறாக்களைப் பறித்துப் பறக்க விடுகிறார். அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தைப் பார்க்கும் மதபோதகர்களை நோக்கி, ‘இவ்விடம் வழிபாட்டுக்கான இல்லம் என்று எழுதப்பட்டுள்ளது. நீரோ இதை வழிப்பறிக்காரர்களின் குகை யாக்கிவிட்டீரே’ என்றார். (மத்தேயு 21:13) இது மட்டுமல்லாது, மதத் தலைவர்களையும், பிரசாரகர்களையும் இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். மத்தேயு அதிகாரம் 23 முழுவதும் மதகுருக்கள் மீதான இயேசுவின் கடுஞ்சொற்கள் நிறைந்தது.

இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டான்டின் என்ற ரோம அரசன் தனது வர்க்க நலன்களுக்காக, கிறித்துவத்தை ஒர் ஆதிக்க வர்க்க மதமாகக் கட்டமைத்தான். இன்று தேவாலயங்கள் வணிகமயமாகிவிட்டன. மொத்த வணிகமும் இயேசுவின் பெயரால் நடக்கிறது. ‘நீங்கள் ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்தில் இருப்பவரே உங்கள் பிதா’ என்றார் இயேசு. (மத்தேயு 23:9) இன்று கிறித்துவப் பாதிரியார்கள் அனைவரும் ‘பிதா’(Father) என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதுவும் இயேசுவின் முன்னிலையில்தான் நடக்கிறது. யூத மதம் என்னென்ன பாவங்கள் செய்கிறது என்பதற்காக இயேசு ஒரு கலகக்காரராகப் போராடி கொல்லப்பட்டாரோ, அப்பாவங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களை கிறித்துவம் புரிந்துவருகிறது – இயேசுவின் திருப்பெயரால்!

சமூக மாற்றத்திற்குப் போராடும் இயக்கம் சரியும்போது அதைச் சரிவிலிருந்து மீட்டு அதற்கு வலுவூட்டத் தவறினால், இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கவியலாதவை. இதே வழியில்தான் புலிகள் சரிந்த நிலையில், சரணாகதி மதத்தினர் புலிகளின் பெயராலெயே ‘ஆயுதப் போராட்டத்தை வன்முறை’ என்று அறிக்கை விடுகின்றனர். இதே போக்கில் சரணாகதி மதம் வளர்ந்தால், புலிகள் மீண்டு வருவதை இடர் நிறைந்ததாகி விடும். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் இவர்கள் நமது போர்க்குணத்தை மழுங்கடித்து மண்டியிட்டு மனுப்போடப் பழக்கி விடுவார்கள்.

எனவே ஈழத் தமிழர்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி. தற்போதைய எமது கடமை எது என்பதை உணர்ந்து செயற்படுவோம் தலைவர் பிரபாகரன் அவர்கள் எமக்கான ஈழத்தை பெற்று தருவார்.

“இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளம் கொழிப்பது திண்ணம். இந்நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறு நடை போடுவோமாக” – இவையும் தலைவர் பிரபாகரன் எழுதிய வரிகளே!

நன்றி
ஈழம் புகழ் மாறன்
(ஈழம் புகழ் மாறன் அவர்களின் தமிழர் தைத்திருநாளை முன்னிட்டு சிறப்பு கட்டுரை)