சாந்தன் அண்ணாவின் நினைவு நாள் இன்று.

இறந்த போது எழுதியதாக முகநூல் இதை நினைவூட்டுகிறது.

பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன.. ஒரே விடயத்தை திருப்பித் திருப்பி எழுதி சலித்து விட்டது. புதிதாக எழுத ஒன்றுமில்லை..

வாசித்து நீங்களும் சலிப்பைக் கொட்டிக் கொள்ளுங்கள்…

வேறு என்னதான் செய்வது?

இப்படித்தான் இந்த இனம் அழிந்ததென்ற வரலாற்று புரிதலுக்காகவாவது மீள பதிந்து வைப்போம்.

மண் மீட்புப் போரின் கலையுலக முன்னோடி சாந்தன் இனஅழிப்பு அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் விளைவாகச் சாவைத் தழுவினார்.

இறுதி இனஅழிப்பின் போது வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும், இராசயான ஆயுதங்களின் பாவனையாலும், தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் , பதுங்கு குழியை விட்டு வெளியே வர முடியாத சூழலின் விளைவாக தொடர்ந்து சிறுநீர் கழிப்பதை தவிர்த்ததாலும் , நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் எமது மக்கள் பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக தினமும் மரணத்தை சந்தித்து வருகிறார்கள்

குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு

இன அழிப்பு அரசு, திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.

ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம்.

இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று வரையறுக்கிறோம். இதை இயற்கை மரணம் என்று தமிழர் தரப்பே விளிக்கும் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது?

சாந்தன் இந்த மரணங்களின் தொடர்ச்சியாகவே காவு கொள்ளப்பட்டுள்ளார்.

தமிழினியின் மரணத்துடன்: புற்றுநோய் குறித்த உரையாடல் தொடங்கப்பட்டது போல் சாந்தனின் மரணத்துடன் இந்த சிறுநீரக செயலிழப்பு குறித்த இனஅழிப்பு அரசின் தந்திரத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த பல நூறுபேர் இந்த சிறுநீரக தாக்கங்களுக்கு முகம் கொடுத்து தம்மை தினமும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.

சிறுநீரகத் தொகுதி பாதிக்கப்பட்டால் அடுத்து பாதிக்கப்படுவது அதனுடன நேரடித் தொடர்புள்ள மனித உடலின் இனப்பெருகக்த் தொகுதி. விளைவாக எமது இனத்தின் கருவள வீதம் வீழ்ச்சியடைந்து எமது இனப் பரம்பல் தடுக்கப்படுகிறது.

இது இனஅழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது.

அத்தோடு வன்னி இறுதி இனஅழிப்பிற்கு நேரடியாக முகம் கொடுத்த மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாகத் தேங்கி உள்ளது.

விளைவாக இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவைக் குறைக்கும் நச்சு பதார்த்தம் பரவியுள்ளது. இதனை Genocidal Factors எனலாம்.

இதனால் அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிபிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரமாகும்.

விளைவாக இயற்கை மரணம் என்ற போர்வையில் இத்தகைய உடற்தாக்கங்களை சந்தித்து அழிந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும் (living genocidal bio makers).

மே‬ 18 இற்கு பிறகு அதிகளவில் போராளிகளும் மக்களும் புற்றுநோயால் சிறுநீரக செயலிழப்பால் சாகும் கதையின் பின்புலம் இதுதான். இனிச் சொல்லுங்கள்சாந்தனின் சாவு இயற்கை மரணமா ? இனஅழிப்பா?

முதலில் நாம் திருந்துவோம். இனஅழிப்புக்குள்ளாகி தொடர்நது அதற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு இனமாக நாம் பாவிக்கும் ஒவ்வொரு வார்த்தகைளும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுதான் எமது நீதிக்கான அடிப்படை. மற்றவர்களிடம் நீதியை கேட்கும் அறமும் உரிமையும் அப்போதுதான் எமக்கு உரித்தாகிறது.

இனியாவது ஒரு அனைத்துலக மருத்துவ குழுவை கொண்டு இறுதி இனஅழிப்பில் பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் பரிந்துரைப்பார்களா?

அல்லது வழமைபோல் உள்ளக விசாணைக்கு ஒத்தூதுவதுபோல் எமது மக்களையும் போராளிகளையும் இப்படியான நுட்பமான இனஅழிப்புக்கு பலியாக்கப் போகிறார்களா?

-பரணி கிருஸ்ணரஜனி