சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.

சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக கடந்த ஜனவரியில், சிறிலங்காவின்  பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் பொருளாதாரத்தில் சீனாவின் தலையீடு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை அமைதிப்படுத்துவதற்காகவே திருகோணமலைத் துறைமுக உடன்பாடு எட்டப்பட்டதாக இலங்கையர்கள்  கருதுகின்றனர்.

இலங்கைத் தீவானது தற்போது 64 பில்லியன் டொலர் கடன்சுமையை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன் பாரிய சில திட்டங்களை மேற்கொள்வதற்காக சீனாவிடமிருந்து சிறிலங்காவால் 8 பில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய வருடாந்த  வெளிநாட்டு ஏற்றுமதி வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதி நிதியானது கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி சிறிலங்காவால் கடனாகப் பெறப்பட்டுள்ளது. பொதுச் செலவை மீள்கட்டமைப்புச் செய்வதற்காக மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என அனைத்துலக நாணய நிதியத்தால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறான பல்வேறு கடன் சுமைகள் இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட சீன முதலீடுகளுக்கு எதிராக சிறிலங்கா வாழ் மக்கள் எதிர்ப்புக்களைக் காண்பித்து வருகின்றனர். தமது நாட்டில் சீனக் கொலனித்துவம் வந்து விடுமோ என இலங்கையர்கள் அஞ்சுகின்றனர்.

சீனா மீது சிறிலங்கா தங்கியிருக்கும் நிலையைச் சமன் செய்ய வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. சிறிலங்கா மீதான சீனாவின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற விடயத்தை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை விட தற்போதைய அதிபர் சிறிசேன அதிகம் கவனத்திற் கொண்டுள்ளார்.

இந்தியாவானது தனது இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவுகளை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ள போதிலும், சிறிலங்காவில் முதலீடு செய்வது தொடர்பில் இந்தியா பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்திய அரசாங்கத்தால் திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் போன்ற நடுத்தரத் திட்டங்களை வேறு நாடுகளில் செய்வதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை.

ஆகவே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு  யப்பானிய முதலீட்டாளர்களுடன் இணைந்து தனியார் துறையால் சிறிலங்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமா என்பதை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

சீன நிறுவனங்களால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத் திட்டங்களின் ஊடாக சிறிலங்கா மீதான கடன் சுமையைக் குறைப்பதற்கும் இதன் மூலம் சிறிலங்காவுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் சீனா முயற்சிக்கிறது. பாதுகாப்புத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் இவ்விரு நாடுகளும் அறிவித்தன. இது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை எதிர்த்து சிறிலங்காவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்புத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக இவ்விரு நாடுகளும் அறிவித்தல் மேற்கொண்டமையானது சீனா தனது ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான நல்லதொரு சமிக்கையாக நோக்குகிறது.

சீனாவால் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு சீன நிறுவனத்திடம் வழங்குவதற்கு கடந்த ஆண்டு சிறிசேன அரசாங்கம் உடன்பட்டது. அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பை 5 பில்லியன் டொலர் பெறுமதியில் தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு வழங்குவதெனவும்  தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையர்கள் இத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையால் சிறிலங்கா அரசாங்கத்தால் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியவில்லை. சீனாவிடம் பெருந்தொகையான கடனை சிறிலங்கா பெற்றிருந்தாலும் கூட, தனது நாட்டில் சீன இராணுவம் கால் பதிப்பதற்கு சிறிசேன அரசாங்கம் இதுவரை அனுமதிக்கவில்லை.

ஆனால் சீனாவுடன் சிறிலங்காவானது பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக அண்மையில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் சீனக் கடற்படையினர் சிறிலங்காவின் கடலில் செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆபத்து உருவாகும். ராஜபக்சவின் ஆட்சியின் போது 2014ல் கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இது இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்பியது.

2015ல் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச தோல்வியுற்ற பின்னர், இந்திய மாக்கடல் மீதான இந்தியாவின் பன்முக கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளில் சிறிலங்காவும் பங்களித்தது. இதற்காக இந்தியாவிடமிருந்து சிறிலங்காவிற்கு மேலும் பல கடல் சார் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கடற் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான கலத்தைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்காவின் தொழிற்துறைக்கு இந்தியா உதவியது.

சிறிலங்காவிற்கான இந்தியாவின் அபிவிருத்தி உதவியானது 2.6 பில்லியன் டொலராகும். 435 மில்லியன் டொலர் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. சீனா சிறிலங்காவிற்கு தான் கொடுத்த 50 சதவீத கடனிற்கு 2 சதவீத வட்டியையும் மீதிக் கடனிற்கு 5 சதவீத வட்டியையும் அறவீடு செய்கிறது. ஆனால் இந்தியாவானது சிறிலங்காவிற்கு தான் வழங்கிய அனைத்துக் கடனிற்கும் 1.75 சதவீத வட்டியையே அறவீடு செய்கிறது.

அத்துடன் சிறிலங்கா மீதான இந்திய முதலீடுகளும் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன. திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள சம்பூரில் நிலக்கரி மின்னாலை ஒன்றை நிறுவுவதற்கான இந்தியாவின் திட்டமானது சம்பூர் மக்களின் எதிர்ப்பின் பின்னர் கைவிடப்பட்டது. இலங்கைத் தீவின் மேற்குக் கரையிலுள்ள கெரவலப்பிட்டியவில் எரிவாயு மின்னாலை ஒன்றை அமைத்துத் தருமாறு தற்போது சிறிலங்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

கொழும்பு துறைமுக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அங்கே கொள்கலன் தாங்கி ஒன்றை அமைப்பதற்கு அனுமதியைப் பெறுவதற்கு இந்தியா முயற்சிக்கிறது. 2013ல் தனியொரு கொள்கலன் தாங்கி ஒன்றை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

2003 இல் இருந்து இந்தியாவின் லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா மீளவும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் எந்தவொரு குத்தகை ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படாமையால் இவற்றை மீளப் பெறுமாறு பொது நிறுவங்கள் மீதான சிறிலங்கா நாடாளுமன்ற ஆணைக்குழு அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஆகவே இவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ள சிறிலங்கா முயற்சிக்கும். சீனாவுடன் சிறிலங்காவானது பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதானது, தனது கடன் சுமையைக் குறைப்பதற்கு இந்தியா மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சமிக்கையை சிறிலங்கா அனுப்பியுள்ளது என்றே நோக்கலாம்.

இந்திய அரசாங்கம் தனது செலவீனங்களைக் குறைப்பதற்காக, தனது தனியார் துறையின் ஊடாக சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள முயற்சிப்பது போல் தென்படுகிறது. அத்துடன் இந்திய அரசின் திட்டங்கள் சில சிறிலங்காவில் நெருக்கடியைச் சந்தித்த போதிலும் தனியார் துறையினர் வெற்றிகரமாக தமது திட்டங்களை சிறிலங்காவில் மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூற்று ஆய்வை சிங்கப்பூரின் சேர்பனா யுரோங்க் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்நிறுவனத்துடன் இணைந்து இந்திய தனியார் நிறுவனங்கள் பணியாற்றுவதற்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது.

சிறிலங்காவின் கிழக்கிலுள்ள திருகோணமலையில் இந்தியா முதலீடு செய்வதன் மூலம் அங்கு தமிழ்மயமாக்கல் முற்றுமுழுதாக இடம்பெற்று விடும் என உள்ளுர் மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், சிறிலங்காவில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு இந்தியா ஒருபோதும் அழுத்தம் வழங்காது என அண்மையில் சிறிலங்காவிற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்குடன் வரையப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் சுயாட்சியை நிறுவுவது தொடர்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் வெளிநாடுகள் தமது இராணுவ நோக்கிற்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவிற்கான சிறிலங்கா தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தியா மேலும் பணியாற்ற வேண்டும் என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது.

ஆங்கிலத்தில்  – Saurav Jha
வழிமூலம்        – World politics review
மொழியாக்கம்  – நித்தியபாரதி

(www.eelamalar.com)