சிறையில் சசிகலா சிறகு விரிப்பு!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சல்வார் கமீஸ் அணிந்து ஷாப்பிங் பையுடன் புறப்படுவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளூர் ஊடகங்களில் புகைப்படம் மற்றும் காணொளி வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி வருகின்றன. சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் காணொளி வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சசிகலா சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு ஷாப்பிங் பையுடன் சிறை வளாகத்தில் நடமாடுவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.