சுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.!

சுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.!
நாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம். போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாக்குவோம். எதிரி இராணுவத்திற்குத் தகுந்த பதிலடி கொடுத்து அதன் முதுகெலும்பை முறித்துவிடுவதைத் தவிரஇந்தச் சூழ்நிலையில் எமக்கு வேறெந்த வழியுமில்லை.

எதிரியை எமது மண்ணிலிருந்து விரட்டியடித்து எமது மக்களின் சுதந்திரத்தை வேன்றேடுப்பதாயின் நாம் போராடியே தீர வேண்டும்.

போர்க்களத்தில் குதியுங்கள், எமது பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். உண்மையான ஒருமைப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாம் தோளோடு தோள் நின்று போராடும்போது எமது மக்களும் எம்மோடு அணிதிரள்வார்கள். முழுத்தேசமுமே எமக்குப் பக்கபலமாக நிற்கும். எமது ஒன்றுதிரண்ட பலத்தைக் கண்டு எதிரி நடுக்கம் கொள்வான். நாம் களத்தில் ஒன்றிணைந்து போராடினால் எதிரியை எமது தாய்நாட்டிலிருந்து விரட்டியடித்து சுதந்திர தமிழீழம் காண்பது வெகுதூரத்தில் இராது.

எமது அன்பான தமிழ் மக்களே! விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை. கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை. வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, இரத்தம் சிந்தி தாங்கொணாத துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம். சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை. நாகரிகம் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக ஒடுக்கப்பட்ட மனித சமூகங்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றன. யுத்தங்கள் புரிந்து இருக்கின்றன. புரட்சிகள் செய்து இருக்கின்றன. சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகிறது. இந்தச் சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

1984ம் ஆண்டு மே மாதம் தமிழீழ மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து…..!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”