images (45)

சூரியப்புதல்விகள்………

பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை
இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.

சூரியப்புதல்விகள்………

“உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால்
நான் பெண்மையைப் போற்றுகிறேன்”
என்னும் உண்மை வரிகளில்
பெண்மையின் மேன்மையைப் பேரழகாய் எடுத்துச்சொன்ன
பெருந்தலைவன் செய்தவிந்தை ஈழமண்ணிலே
பெண்ணின் மகதத்துவத்தைப் பறைசாற்றிற்று.

ஆக்கும் சக்தியின் வல்லமை – தீமையை
அழிக்கும் சக்தியின் வடிவம்
அன்னை என்கின்ற அதியுயர் பக்குவம்
தங்கை தமக்கை தாரம் தோழி ஆகிய
அன்பு உறவுகளின் பெட்டகம் – மனிதகுல
அசைவியக்கத்தின் அச்சாணி பெண்மை

மங்கை எனும் மொழியில் தங்கும் பொருள் பலவே
மானம் சுமந்தவளே தன்மானம் நிறைந்தவளே
அவள்தம் வாழ்விற்குப் பங்கவருமின்
தீயாய் எழுந்திடலும் திடமான நிதர்சனமே.

பெண்விடுதலை மண்விடுதலை இரண்டும் சாத்தியமானால் – தமிழ்
ஈழவிடுதலை முழுமை பெறும் என்பது
சூரியத்தேவனின் தீர்க்கதரிசனம்

தனக்குள்ளே முடங்கி தினம்தினம் புளுங்கி
உறவுக்குள் அடங்கி ஊருக்குள் ஒடுங்கி
அறிவதைச்சுருக்கி அறியாமைக்குள் நசுங்கி
மாயைக்குள் அழுந்தி மாண்பினை மறந்துவாழ்ந்த
மகளிர் தம் மடமை விலகி மனந்திறந்த நாளாய்
மாலதி அவர்கள் மாவீரம் உரைத்துச் சென்ற
தமிழீழப்பெண்கள் எழுச்சிநாள்
நிமிர்ந்து நிற்கிறது கம்பீரமுடன்.

ஒக்டோபர் பத்தாம்நாள்
புரட்சிப் பெண்களின் புறப்பாட்டை எடுத்தியம்பும்
புதுமையானநாள்.
பெண்விடுதலை என்பது பன்னெடுங்காலமாய்
பெண்கள்மேல் எழுதப்பட்ட
அடக்குமுறைக்கு எதிரான விழிப்பு.

வீட்டுக் கடமைகளில் மட்டுமின்றி
நாட்டுநலனிலும், நற்சமூகத்தின் தோன்றலிலும்
பங்கெடுத்துழைக்கும் ஒரு பாகமாய்த் திகழும் பெண்களின்
உரிமைகளை வென்றெடுக்க முயல்வது.

பெண்விடுதலை என்பது
ஆணுக்குப்பெண் சரிசமானமாய்ப் பணிசெய்யும்
விரிவான சிந்தனைக்கு வித்திடும்
வேகத்தை செயலாற்ற விளைவது.

நிமிர்ந்தநடையும் நேர்கொண்ட பார்வையும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட
புதுமைப்பெண்ணைத்தேடி
புதுக்கவிதை செய்தார் பாரதி.

துணிந்த செயலும் தூயமனத்திடமும்
தெளிந்த மெய்ஞானச்செருக்கும் கொண்ட
புரட்சிப்பெண்களைப் புடமிட்டு
எழுச்சிக் கவிதை செய்தார் எங்கள் அண்ணன்.

அச்சமில்லை அச்சமில்லை எனும் முழக்கம் – வான்
உச்சிவரை எழுந்தது ஈழத்தில்
சூரியத்தலைவன் சுடர்கொடுத்தான்
வீரியத்தீயைப் பற்ற வைத்தான்
சூரியப்புதல்விகள் எழுந்தனர், விரைந்தனர்
போரியல் உத்திகள் கைவசப்பட்டன.

ஆணுக்கு நிகராய் நின்று அனைத்துத் துறைகளிலும்
வினைத்திறன் ஆற்றிடும் பெருமை
விடுதலைப்பெண் புலிகளுக்கு மட்டுமல்ல
விடியலைத்தேடும் பெண்களுக்கும்
உரித்தாயிற்று தமிழீழத்தில் .

நெருப்பாய் நிற்றலும் வேண்டும் – பெண்கள்
பொறுப்பாய் நிமிர்தலும் வேண்டும்
நீராய்ப்பொழிதலும் வேண்டும் – சமயத்தில்
வேராய் அறிதலும் வேண்டும் – புதிய
வேதம் பிறந்தது எம்மண்ணில்
வீரப்பெண்களின் தோற்றம் நிகழ்ந்தது
விடுதலைப்போருக்கு வேகம் சேர்த்தது.
வியத்தகு செயல்களால் வெற்றி குவித்தது.

அங்குசம் கொண்டு ஆனை அடக்கினாள்
அரியாத்தை எனும் தமிழ்மறத்தி அன்று
ஆயுதம் கொண்டு பகைவரை அழித்திடும்
புலியாத்தைகள் காலமன்றோ இன்று.

மாலதி, சோதியா என்னும் மறத்திகள் வழியிலே
ஆயிரமாயிரம் நங்கையர் நடந்தனர்
பயிற்சிக்களங்களிலே பம்பரமாய்ச் சுழன்று
பலமிக்க பெண்களாய்ப் பரிணமித்தனர்
படையணிகள் பலவாய்க்கொண்டு
படைத்தளங்களை வீழ்த்தி வென்றனர்.

முடியாது என்ற சொல்லுக்கு முற்றுவைத்து
கடுமையான பணிகள் பலதைத்
திறமையாக முடித்துக்காட்டி
காலத்தின் நாயகியராய் வலம் வந்தனர்

புவியியல் வரலாற்றில் இதுவரை
அறியப்படாத அதிசயமாய்
செயற்கரிய செயல்களைச் செவ்வனே ஆற்றிடும் வீரம்
தமிழீழப் பெண்களின் தனிப்பெரும் முத்திரைகள்

உயிர்க்கருவிகொண்டு – பகை
எரித்தழிக்கும் கரும்புலியாகி
வெடித்துச்சிதறிய சிதறிய வீராங்கனைகளை
வேறெங்கும் கண்டறியோம்.

தனித்தே செயலாற்றி தம்முயிரை காற்றிலூதி
தரையிலும் கடலிலும் காவியம் படைத்திட்ட
தற்கொடைத் தமிழச்சிகள்.

கணவருடன் மனைவியுமாய்
களத்திடை தமையீந்த காவியத்தலைவிகள்
பெற்ற சிசுவைப் பிரிந்து செருக்களம் சென்றதாய்கள்
பெயர் ஊர் முகம் மறைத்து
பெரும் போரிலக்கைத் தகர்த்த மாதர்
தன்னலம் பாராது தாய்நாட்டைக் காத்து நிற்கின்றனர்
சுடரும் வீரவரலாற்றினை
சொல்ல மொழி போதவில்லை

வஞ்சகர் கையில் வதைபடும் தாய்நிலமே
வாய்திறக்க முடியாது வலிசுமக்கும் எம்குலமே
வேள்வித்தீ இன்னும் ஓயவில்லை – எம்
தோழியர் விட்டுச் சென்ற பணிகள்
தோளிலே கனக்கிறது
மனதின் காயங்கள் இன்னும் ஆறவில்லை
கடமைகள் கண்முன்னே விரிகிறது.

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளிலே
முழு உலகம் கேட்கும் வண்ணம்
முழக்கமிட்டு சபதம் கொள்வோம்
தமிழீழம் அடையும்வரை ஓயமாட்டோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கலைமகள்
10.10.2015

(www.eelamalar.com)