தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

14317506_195330024221177_3140103624733376984_nசெப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.

பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. ஏனனில் மக்களுக்காகப் போராடிய ஏனைய போராளிகள், சண்டையின் போது மக்களின் ககண்களுக்குத் தூரவாகவே மடிந்தார்கள். அவர்களின் இழப்புக்கள் வெறும் செய்தியாகவே மக்களின் காதுகளை வந்து தாக்கின.

thileepan-annai-ninaividam-1024x768-768x576

ஆனால் திலீபனின் மரணம் அப்படி நிகழ்வல்ல ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்ல திலீபனின் ஆவி மக்களின் கண்முன்னே துடிதுடித்தபடி பிரிந்து கொண்டிருந்தது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா? இல்லையே! ஆனாலும் திலீபன் தியாகத்தை மறைக்க இந்திய அரசு காலங் காலமாக முயன்றே வருகிறது. எப்போதும் எந்தச் சாக்குப் போக்கும் சொல்லி தட்டிக் கழித்து விடமுடியாத கரும் புள்ளியாக இந்தியாவின் முகத்தில் ஒட்டிய படி உள்ளது திலீபனின் சாவு. அதை என்ன விலை கொடுத்தேனும் அகற்ற இந்திய அரசு தயாராக இருந்தது. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் மருந்து என்பதால் சில வருடங்களில் திலீபனை ஈழத்தமிழர்கள் மறந்து விடுவார்கள் என காந்திய தேசம் நினைத்தது. அந்த நினைப்புக்கு மாறாக திலீபனின் நினைவுகளை போராளிகளும் மக்களும் தம்முடன் சுமந்தார்கள்.

இறுதிப்போர் தொடங்கிய பின்னர் நல்லூரில் திலீபன் உண்ணா விரதம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ருந்த நினைவுக்கல் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது. அதேபோன்று நல்லூர் பின் வீதியில் இருந்த நினைவுத் தூபியும் பிறிதொரு நாளில் இடிந்து சேதமாக்கப்பட்டது. இப்படியாக நேரடியாகவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசு செயற்பட்டது. மறைமுகமாக தமிழ்த் தலைமைகளும் உடன்போவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

thileepan-1024x682-768x512

திலீபன் பட்டினிப்போரை ஆரம்பித்த அதே தினத்தில் நல்லூரில் கம்பன் விழாவை நடத்தப் போவதாக அகில இலங்கை கம்பன் கழகம் அறிவித்துள்ளது.கம்பன் பற்றிய கொண்டாட்ட மழையால் திலீபனின் தியாக நினைவுகளைக் கரையச் செய்வதற்காகவே இக் கம்பன் விழா ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

ஏனெனில் கம்பர் தமிழுக்கு வளம் சேர்த்த கம்பராமாயணம் எனும் காவியத்தை தந்திருந்தாலும், அந்தக் காவியம் இலங்கை மன்னன் மீது இந்தியர்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே அமைந்தது. இந்தியாவின் குறியீடாக ராமனும் இலங்கையின் குறியீடாக இராவணன் என்ற தமிழ் மன்னனும் கம்பராமாயணத்தின் பிரதான பாத்திங்களாக சித்திகரிக்கப்பட்டன. இராமனை நாயகனாக்கி இராவணனை வில்லனாக்கி இலங்கையை இராமன் ஆக்கிரமித்தமை சரியே என நிறுவியவர் கம்பர். ஆக மொத்ததில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய திலீபன் நினவு நாளின் தொடக்கத்தில் இந்திய ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திய கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். அதுவும் திலீபன் பட்டினிப்போர் புரிந்த அதே நல்லூரின் வீதியில்.

ka-1024x576-768x432

தற்செயல் நிகழ்வே இதுவென்று இனிமேல் சொல்லலாம். ஆனால் செப்ரெம்பர் 15 ஆம் திகதியும், நல்லூரும் நிகழ்வுக்கு தெரிவு செய்யப்படும் போதே கண்முன்னே பசியால் வாடிவதங்கிய திலீபன் உருவமே ஏற்பாட்டாளர்களின் கண்களில் வந்திருக்க வேண்டும். அகிம்சை போராட்டத்தின் மன்னன் என கூறப்படும் காந்திக்கு சவால் விடுக்கும் வகையில் தனது போராட்டத்தை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன் தியாகங்கள் மக்களை சென்றடையக் கூடாது என்று பல திரைமறைவு காய்நகர்தல்கள் நடைபெறுகின்றன.

செப்டெம்பர் 15 என்றதும் திலீபனின் ஞாபகம் வரவேண்டும். அப்படி வரவில்லையாயின் திலீபன் பற்றிய மறக்கடிப்புகளை செய்வதில் ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று விட்டன என்றே தோன்றுகின்றன.

கோகுலன்

(www.eelamalar.com)