அன்னையாக, அண்ணாவாக………. எம் தேசியத் தலைவர் அவர்கள்.!
1989 காலப்பகுதியல்,

■ மணலாற்றுக் காட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அண்ணா இருந்த அதே முகாமில் பயிற்சி நடைபெற்றது. எமது (பயிற்சிக்குச் சென்ற) தனிப்பட்ட விபரங்களை அண்ணா தானே நேரில் கூப்பிட்டு எடுத்தார். விபரங்களை கேட்டு எழுதி எடுத்தார்.

■ பயிற்சி ஆரம்ப நாள் அன்று பயம் என்றால் என்ன என்பது பற்றியும் மூடநம்பிக்கை பற்றியும் அவற்றிலிருந்து தெளிவை நாம் பெறுவதற்கேற்ப அண்ணா வகுப்பு எடுத்தார்.

■ பின்பு தொடர்ந்த வெடிபொருள் வகுப்பு, ஆயுத வகுப்பு போன்றவற்றையும் எடுத்தார். ஆயுத வகுப்பின்போது தன்னுடன் நிற்போரின் ஆயுதங்களைக் கூட உடன் வாங்கி காட்டி விளங்கபடுத்துவார்.

■ சிலவேளை உணவு சரியான முறையில் இல்லாதிருப்பின் மறுநாள் எமது பயிற்சிகளைக் குறைத்துக் கொடுக்கும்படி எமது பயிற்சி ஆசிரியருக்கு கூறுவார்.

■ நாம் சிலர் இரவு உணவின் பின் மீண்டும் பசியால் கிச்சினிற்கு சென்று உணவு களவெடுத்து உண்போம். இதை அண்ணா அறிந்தபோது, சமையலாளர்கட்கும் பொறுப்பாளர்கட்கும் கூறினார், இனிமேல் தினமும் இரவில் கூடுதலான உணவு சமைத்து வைக்கவேண்டும். பிள்ளைகள் சாப்பிடும் வயது அவர்கள் நிறைய சாப்பிட வேண்டும் என்றார். (நாம் அனேகம் வயதில் சிரியோர்தான் அக்குழுவில் இருந்தோம்.)

■ கம்பால (பொருள் மூட்டை சுமந்துவா) அல்லது மரம் வெட்டவோ செல்லும்போது கூப்பிட்டு சில அறிவுறுத்தல்களோடு தெளிவுபடுத்தியும் அனுப்புவார்.

■ ஒருநாள் நீண்ட தூரம் போய் பொருள் கொடுக்க வேண்டிய இடத்திற்கு செல்வதற்கு ஒன்றுகூடி நின்றபோது எல்லோரையும் பார்த்து கூறினார், கொலைக்களத்துக்குப் போறமாதிரி முகங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். உடனே எல்லோரும் சிரிந்தனர். இவ்வாறு கலகலப்போடு திரிவதை விரும்புவார்.

■ மூட்டை சுமக்கும்போது தலையில் சுமப்பதால் கழுத்து எலும்பு பாதிப்படையும் என்பதால் தோளில் சுமக்கவேண்டும் எனக்கூறி அதை நடைமுறையில் கொண்டுவந்தார்.

■ உணவுத்தட்டுப்பாடு, பொருளாதார தட்டுப்பாடு என்பன கூடுதலாக இருக்கும்போதுகூட எமக்கு மலேரியாத் தடுப்புக் குளுசைகளும் தரப்பட்டது. கொதித்தாறிய நீரே கண்டிப்பாக எல்லோரும் குடித்தனர். இவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தினார். ஒருவருக்குக்கூட அகாலப்பகுதியில் காய்ச்சல் வரவிடவில்லை.

■ கிணறு வெட்டும்போது, பதுங்குகுழி வெட்டும்போது தான் நேரில் வந்து உருமறைத்திருந்த இடங்ககளைப் பார்த்துச் சென்றார். நானும் இன்னும் இருவரும் பிடிபடவில்லை பின் எமக்கு (கன்டோஸ்) பரிசு தந்து பாராட்டினார்.

■ சிலவேளை விசேட உணவு தயாரித்து முகாமிலுள்ள எல்லோரிற்கும் அனுப்பிவிடுவார்.

■ பொருளாதாரத் தட்டுப்பாடு மிகுந்திருந்தும்கூட குளிர்காலத்தில் எல்லோரிற்கும் பெற்சீற், சுவற்றர், மங்கிக்கப் என்பன தரப்பட்டிருந்தது. மாலை 6.00 மணிக்குப் பின் ‘சுவற்றர்’, ‘மங்கிக்கப்’ இன்றி யாரும் வெளியே திரிய அனுமதியில்லை.

■ எமது பயிற்சி நிறைவு நாளின்போது பொருளாதாரத்தைப் பற்றி அண்ணா வகுப்பெடுத்தார். பொருட்களைக் கவனமாக பாவிப்பது பற்றி எடுத்துக் கூறினார். தான் பொருட்களைப் முறை பற்றியும் கூறினார். தனது செருப்பை சுட்டிக்காட்டினார். அவரின் பெருவிரலும் குதிக்காலும் நிலத்தில் படும்வரை மிகத் தேய்ந்திருந்தது.எந்தப் பொருளையும் பாவிக்க முடியாமல் போகும்வரை பாவிப்பதைக் கண்டோம். எமது மக்களின் பணத்தை நாம் ஒரு துளியும் வீண் செலவு செய்யக்கூடாது. அவை எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கே பயன்பட வேண்டும் என்பதை உணர்த்தினார். தொடர்ந்த காலங்களிலும் பொருட்களை அண்ணா கவனமாகப் பாவிப்பதையே காண்கிறோம்.

■ பயிற்சி முகாமில் அணியின் மாற்றத்தை பார்த்து கூப்பிட்டுக் கதைத்து, வீட்டுக் கவலையை ப்க்கும்படி கதைத்தார்.

■ சிலரின் முகத்தில் பரு உள்ளதைப் பார்த்து, கூப்பிட்டு நீங்கள் தண்ணீர் குடிப்பது காணாது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார். காட்டின் நிலைபற்றிக் கூறி ஏன் நிறைய நீர் உடலுக்கு தேவை என்பது பற்றியும் கூறுவார்.

■ பயிற்சி முகாமிலேயே எங்கள் ஒவ்வொருவரின் இயல்பையும் குணத்தையும் உடனும் விளங்கிக் கொள்வார். பெயர்களைக் கூட ஞாபகத்தில் வைத்திருந்தார். ஆரம்பத்திலேயே பெயர் கூறியே உடனும் கூப்பிடுவார்.

■ அண்ணாவிற்கு இந்தியாவில் இருந்து வந்த ‘குலாப்ஜாமுன்’ சிற்றுண்டிக்குரிய பொருட்கள் வந்ததும் அன்றிரவு தானே அந்தச் சிற்றுண்டியைச் செய்து அந்த முகாமில் உள்ள அனைவரையும் நித்திரையால் எழுப்பித் தந்தார். அப்போது அங்கு அண்ணா உட்பட அனைவருக்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவிய காலம்.

■ அந்த நேரத்தில் அதிகம் பேருக்கு பல்லில் சூத்தை ஏற்பட்டதையடுத்து நல்ல ‘பிறஸ்’ தேவை என்று (அதுவரை ஓர் தடிப்பான பிறஸ் பாவித்தோம்) Golden dragen பிறஸ் எடுப்பித்துத் தந்தபோது அதன் விலைபற்றியும் அதைக் கொண்டுவரப்பட்ட கஸ்ரம் பற்றியும், பற்களை நாம் பாதுகாக்க வேண்டியது பற்றியும் கதைத்தபின்பே பிறஸ் தரப்பட்டது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த இக்கட்டான நிலையிலும் ஒவ்வொரு தனிமனித பாதுகாப்பிலும் கவனம் செலுத்தினார். பல்துலக்கல் முதற்கொண்டு அனைத்துமே பார்வையிடப்பட்டது.

■ 1991ம் ஆண்டு ஆரம்ப மருத்துவப் பொறுப்புத் தரும்போது கூப்பிட்டுச் சந்தித்தார். (யாழ். குடாநாட்டுப் பகுதியில் சந்தித்தேன்) யாழ்ப்பாணத்தில் அனேகம் ஏனையோரது முகாம்கள் ஆடம்பரமாகவும் நிறைய செலவுகளுடனுமே காணப்பட்டது. ஆனால் அண்ணாவின் முகாம் மிக எளிமையாகக் காணப்பட்டது. ஓலையால் வேயப்பட்ட ஓர் கொட்டில் நிலம் சீமெந்து போடப்பட்டு அரைச்சுவர் வைத்து வெள்ளைக்காவி அடிக்கப்பட்டிருந்தது. உள்ளே ஓர் சிறிய மேசை அதில் நீர் வைத்து மூடியிருந்தது. பிரம்புக் கதிரை போடப்பட்டு காற்றோட்டமாக புனிதமாக அவ்விடம் காணப்பட்டது. எல்லோரும் எப்படியோ எல்லாம் இருக்கும்போது அண்ணா அவ்வளவு எளிமையாக இருந்தார்.

■ மருத்துவப் பொறுப்பை நாம் ஏற்பதற்கு முன் ஏழுபேருக்கு (ஒரு செக்கன்) கூட பொறுப்பாக நான் இருந்ததில்லை. அப்படியிருந்தும் நம்பிக்கையுடன் மகளீர் மருத்துவப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். எப்படி செயற்பட வேண்டும் என்பதையும் விளங்கப்படுத்தினார்.

■ மருத்துவப் பொறுப்பாக இருந்த காலத்தில் போராளி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை அண்ணாவிற்கு கடிதத்தில் எழுதினர். உடன் என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். பிரச்சனைகளை எப்படி கையாள வேண்டும். எப்படி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக இலகுவாக விளங்கப்படுத்தினார். அவ்வாறே சிறிய பிரச்சினை தொடக்கம் பெரிய பிரச்சினைவரை ஒவ்வொன்றையும் கவனித்துச் செயற்படக்கூடியவாறு ஒவ்வொரு விடயங்களையும் தொடர்ந்து சொல்லித் தந்தார்.

■ பெரிய சண்டைவருமுன் எல்லோரையும் கூப்பிட்டு மருத்துவப்பக்கத்தில் நாம் எப்படி எல்லாம் தயார்ப்படுத்துவது என்பதை கூறுவார். எவ்வளவு காயங்கள் வரும் எனவே இடங்கள், நோயாளர்கள், ஆடைகள், உணவுகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற ஒவ்வொன்றையும் எவ்வளவு தூரம் எப்படித் தயார்படுத்தி என்ன விதத்தில் ஒழுங்குகளைச் செய்யவேண்டும் என்பதை விளங்கப்படுத்தி எங்களை தயார்படுத்துவார்.

■ ஆனையிறவுச் சண்டை (ஆகாயக் கடல்வெளிச் சமர்) முடிய மின்னல் சண்டையுடன் மகளீர் மட்டும் திடீரென 600 காயக்காரர்களுக்கு கிட்ட வந்தபோதும் அதை இலகுவாக சமாளித்து கவனிக்கக்கூடியவாறு எம்மைத் தயார்ப்படுத்தியிருந்தார். நான் இயக்கத்தில் இரு வருடங்களிலேயே இப்பெரிய பொறுப்பை இலகுவாகச் செய்யக்கூடியவாறு எம்மை நெறிப்படுத்தினார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பிரிகேடியர் துர்க்கா,
சிறப்புத் தளபதி, 
மேஜர் சோதியா படையணி.
தமிழீழ விடுதலைப்புலிகள் 
தமிழீழம்.