தமிழர் வீரத்தின் தனிப்பெரும் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்

சென்னை கொளத்தூரில் ஜனவரி 29ம் தேதி நடந்த முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய அறப் போராட்டத்தையும் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தையும் ஒப்பிட்டுப் பேசிய போது மற்றவர்களைப் போலவே நானும் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படியொரு கோணத்தில் இதைப் பார்க்க முடியுமா – என்கிற வியப்பு கூட ஏற்பட்டது.

”இன்றைக்கு இளைஞர்கள் திரள வாட்ஸ் அப் போன்ற தகவல் தொடர்பு வாய்ப்புகள் ஏராளம். 2009ல் இப்படியொரு வசதி இல்லாத காலத்தில் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்ட முத்துக்குமார் தனது உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கான வியூகத்தைத் தானே வகுத்தவர் அவர். தன்னுடைய உடலைக் காவல்துறை கைப்பற்ற முயலுமென்றும் இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை தன் உடலை எடுக்க அனுமதிக்க வேண்டாமென்றும் தனது மரண சாசனத்தில் அவர் குறிப்பிட்டிருந்தது அர்த்தமுள்ளது. அதை மட்டும் நாம் செய்திருந்தால் கடற்கரையில் கூடியதைப் போல இரண்டு மடங்கு இளைஞர்கள் கொளத்தூரில் திரண்டிருப்பார்கள்… இனப்படுகொலை நிறுத்தப்பட்டிருக்கும்! என்ன செய்வது…. தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அங்கீகரித்தாக வேண்டும்.

2009 ஜனவரி 29ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன் தீக்குளித்த முத்துக்குமார் உணர்வும் அறிவும் ஒருசேரக் கலந்த அதிசயக் கலவை. முத்துக்குமாரின் உயிர்த் தியாகம் எத்துணை உயர்ந்ததோ அதே அளவுக்கு உயர்ந்தது அவரது அறிவுத்திறம். அவரது மரணசாசனம் தமிழினத்துக்குக் கிடைத்த சுருக்கமான தெளிவான அரசியல் வரலாற்று ஆவணம்.

முத்துக்குமார் உடல் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த கொளத்தூர் அந்த 3 நாட்களும் இளைஞர் பிரதேசமாகவே காட்சியளித்தது. இன்று மெரினா கடற்கரையில் மையம்கொண்டிருந்த இளம்புயல் அன்று கொளத்தூரில் மையம் கொண்டிருந்தது. இந்த இளைஞர் திரளைப் போலவே அந்த இளைஞர் திரளும் அமைதியாகவும் வலுவாகவும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தது.

முத்துக்குமார் உயிர் துறந்தது 2009ல்! எட்டு ஆண்டுகளுக்குப் பின் கடற்கரையில் கூடிய இளைஞர்களில் பலரும் பார்ப்பதற்கு முத்துக்குமார் போல்தான் தெரிந்தனர் எனக்கு! முத்துக்குமாருக்கு இருந்த அதே உணர்வை இவர்களிடமும் பார்க்க முடிந்தது. இவர்கள் முத்துக்குமார் சகாப்தத்தின் தொடர்ச்சி.

முதலில் இணையத்தால் இணைக்கப்பட்ட அவர்கள் பெருந்திரளாகக் கடற்கரையில் கூடியபிறகு இதயத்தாலும் இணைந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்கள் கடைப்பிடித்த கண்ணியமும் கட்டுப்பாடும் கடமை மறந்து நடமாடும் தமிழக அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்க இயலாதவை. உண்மையில் அவர்களது சுயக்கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றும் பிரபாகரனின் தோழர்களால் கடைப்பிடிக்கப்பட்டவை போன்றே காணப்பட்டன. அவர்களது உறுதியும் ஓர்மமும் புலிகளைத்தான் நினைவுபடுத்தின.

தமிழக இளைஞன் அபிமான நடிகனின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்கிறவன் – என்கிற இமேஜ் இந்த இளைஞர்களால் தகர்த்தெறியப்பட்டதில் மிக அதிக மகிழ்ச்சி எனக்கு! அதைவிட மகிழ்ச்சி சரியான கதாநாயகன் யார் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பது!

‘தமிழக இளைஞர்கள் அபிமான நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்துகொண்டிருப்பது ஒரு புற அடையாளம்! இந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்துக்குள் தாங்கிக் கொண்டிருக்கிற ஒரிஜினல் ஹீரோ பிரபாகரன்தான்… சரியான தருணத்தில் அது வெளிப்படும்’ என்று ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை உணர்த்துவதைப் போல் புயற்சின்னமென கடற்கரையை உலுக்கிய இளைஞர்களின் கையில் பிரபாகரன் படங்களைப் பார்க்க முடிந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களும் மாணவர்களும் அரசியல் தலைவர்களை உள்ளே விடாதது ஒருபுறம் பிரபாகரன் என்கிற மெய்யான வீரனுக்குக் கொடுத்த அங்கீகாரம் இன்னொருபுறம் – என்று சென்னைக் கடற்கரையின் அழகு பேரழகானது.

‘பிரபாகரன் தான் தமிழர் வீரத்தின் தனிப்பெரும் அடையாளம்’ என்று சமூக வலைதளங்களில் இன்று தங்கள் முகம்தெரியப் பதிவிடும் மாணவிகளும் இளம் பெண்களும் ‘பயங்கரவாதம்’ என்றெல்லாம் பரப்பப்பட்ட பச்சைப் பொய்களின் முகத்தில் கரிபூசுகிறார்கள்.

இன்றைக்கு தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கிற கோக் பெப்ஸி எதிர்ப்புக் குரல் சென்னைக் கடற்கரை அறப்போரின் நல்ல விளைவு. என்றாலும் இந்த விழிப்புணர்வெல்லாம் இல்லாத காலத்திலேயே வன்னி மண்ணில் கோக் பெப்ஸியைத் தடை செய்தவர்கள் – பிரபாகரனும் தோழர்களும் என்பதை நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை! பிரபாகரனின் தொலைநோக்குப் பார்வைக்கு அது மிகச் சரியான சான்று.

கோக் பெப்ஸியைக் குடித்தே ஆக வேண்டும் – என்று போதிக்கிற பிரமாண்ட விளம்பரப் படங்களில் நடிப்பதற்காகப் பலகோடி ஊதியம் வாங்கும் தமிழகக் கதாநாயகர்களிடமிருந்து தமிழீழத்தின் ஒரிஜினல் கதாநாயகர்கள் வேறுபட்டது இப்படித்தான்!

நம் ஊர் செல்லுலாய்டு பொம்மைகளும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் தான் கோக் பெப்ஸியை நம்மீது திணித்தார்கள். அது உடல் நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. ஒரு ரூபாயோ ஒன்றரை ரூபாயோ தான் ஒரு குளிர்பானத்தின் அடக்க விலை. அதை 20 ரூபாய்க்கு விற்பதற்காகவே தங்கள் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள் – என்பது பல நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் நிச்சயமாகத் தெரியும். அந்தப் பகல் கொள்ளையை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

நாமும் அப்படித்தான் இருக்கிறோம். பிளாச்சிமடாவில் கொக்கோகோலா தயாரிப்பு மையத்தால் விளை நிலங்கள் பாழானபோது அதை எதிர்த்து ஒட்டுமொத்தக் கேரளமும் போராடியது. தமிழ்நாட்டில் சிவகங்கைக்கு அருகில் படமாத்தூரில் வைகை ஆற்றுப் படுகையில் அந்த நதிநீரை ஒட்டச் சுரண்ட முயன்ற கோக் நிறுவனத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் அறச்சீற்றத்துடன் போராடியபோது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதுகுறித்து எந்த அசைவும் இல்லை.

அண்மையில் கோக்கின் நதிநீர்ச் சுரண்டலுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேல்முருகன் தலைமையில் கங்கைகொண்டானில் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நம்மில் எவரும் மறந்திருக்க முடியாது. சென்னைக் கடற்கரையில் நடந்ததற்கு இணையான அராஜகம் அது. ஊடகங்களுக்கு அது ஒரே ஒருநாள் செய்தியானதோடு முடிந்தது கதை. அதுதான் கொடுமை.

இதே கங்கைகொண்டானில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் போராடியதையும் அதற்காக அவர்கள் பயன்படுத்திய ‘கொக்கோ கோலா – அமெரிக்க மூத்திரம்’ என்கிற வலுவான வார்த்தையையும் இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை.

இளநீரு இருக்கு பதநீரு இருக்கு
கொக்கோகோலா பெப்ஸி எதுக்கு?
அறிவை மயக்குற உடலைக் கெடுக்குற
அயல்நாட்டுக் குளிர்பானம் எதுக்கு?

என்று சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் கவிஞர் மு.மேத்தா எழுதி இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்த பாடல் ஒலிப்பதிவின் போது நானும் உடனிருக்க நேர்ந்தது.

கவிஞர்களில் மேத்தா தனிரகம். கவிதைகளிலும் பாடல்களிலும் தன்னுடைய மேதாவிலாசத்தைக் காட்டிக்கொள்வதை விட எளிய வார்த்தைகள் மூலம் தமிழ்மக்கள் மனத்திலும் தமிழர் நிலத்திலும் உண்மைகளை விதைப்பதே முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்துவருகிறேன்….. இன்றுவரை அந்தக் கவிஞன் மாறவேயில்லை. அந்த மெய்யான மனிதனின் வார்த்தையிலோ வாழ்க்கையிலோ போலித்தனத்தின் சாயலைக்கூடப் பார்க்க முடியவில்லை.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தமிழை முன்னிலைப்படுத்தும் மேத்தா போன்றவர்கள் விதைத்த விதை தான் இன்று விருட்சமாகியிருக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ‘கோக் பெப்ஸியை வெளியேற்று’ என்று ஒரே குரலில் பேசுகிறது.

இளநீரு இருக்கு…. பாடலை மேத்தா எழுதிக் கொடுத்தவுடன் பாடல் மிக மிக எளிமையாக இருப்பதாக வணிகர் அமைப்பின் நிர்வாகி ஒருவர் குறைசொன்னார். பாடல்களிலும் கவிதைகளிலும் வார்த்தைஜாலங்களையே பார்த்துப் பார்த்து பழகிவிட்டவர் அவர். இதுபோன்ற பாடல்களின் வலிமையே எளிமைதான் என்பதையும் அதற்காகத்தான் இந்தப் பாடலுக்காக மேத்தாவை அணுகினோம் என்பதையும் சகோதரர் வெள்ளையன் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது அவருக்கு!

மறுநாள் இன்னொரு பாடலை ஒலிப்பதிவு செய்தோம்.
அதையும் மேத்தா தான் எழுதியிருந்தார்.
அவர் எழுதிக் கொடுத்த கவிதைக்குத்தான் இசையமைத்திருந்தார் பரத்வாஜ்.

‘பாரததேவி! கண்ணீர் விடலாமா?
பார்ப்பவர் இதயம் பதறிடலாமா?
உலகச் சந்தை நுழைந்திடலாமா?
இந்தியக் குழந்தை தொலைந்திடலாமா?’
என்கிற அந்தப் பாடலை சுஜாதா பாடியபோது முதல்நாள் கேள்விகேட்ட நண்பர் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே கண்கலங்கியது இப்போதும் நினைவிருக்கிறது.

அந்தப் பாடலின் முதல் சரணம் கேட்கிற ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்குவதாக இருந்தது.
‘குளிருக்குப் போர்த்தத் துணியில்லை
அதனால்
குழந்தைகள் இறந்த சம்பவங்கள்……
வெளிநாட்டார் இங்கே நடந்துவர
நாம்
விரித்தோம் சிகப்புக் கம்பளங்கள்…
அந்நியரெல்லாம் அதிபர்களா
நாம்
சொந்த தேசத்தில் அகதிகளா’
என்கிற அந்த வரிகளை இப்போது நினைக்கையிலும் சிலிர்க்கிறது. எல்லாத் தளங்களிலும் பொய் மட்டுமே சிலிர்க்கிற உலகில் என்னை மெய்சிலிர்க்க வைத்த வார்த்தைகள் அவை.

இனப்படுகொலைக்குப் பிறகு ஈழ உறவுகள் அனுபவித்து வருகிற அவலங்களைக் குறிப்பிடவும் ”சொந்த தேசத்தில் அகதிகளா” என்கிற இந்த வார்த்தைகள் பொருத்தமானவை. இதை ஜல்லிக்கட்டுக்காகப் போராடி கோக் பெப்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கிற இளைஞர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

2009 இனப்படுகொலைக்கு இங்கேயிருந்த அரசுகள் மட்டுமில்லாமல் அதைத் தடுத்து நிறுத்தத் தவறிய நமது பொறுப்பின்மையும் பெருங்காரணம். அந்தக் குற்ற உணர்வு இல்லாவிட்டால் நாம் தமிழனாக இருக்கத் தகுதியற்றவர்கள். இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய நாம் அதற்கு நீதி கேட்பதற்காகவாவது களத்தில் இறங்க வேண்டும். மெரினாவில் திரண்ட இளைஞர்கள் புரண்டுபடுத்தால் போதும் இலங்கையின் திமிர் நசுங்கிவிடும்.

ராணுவ முற்றுகையிலிருக்கும் யாழ்ப்பாணத்தில் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு ‘எழுக தமிழ்’ என்கிற கம்பீரப் பெயருடன் பல்லாயிரம் இளைஞர்கள் திரள முடிகிறது. மட்டக்களப்பிலும் அடுத்த வாரம் அந்த இளைஞர்களும் மாணவர்களும் மீண்டும் திரள இருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு நீதி கேட்க இருக்கிறார்கள். மூன்றாவது ‘எழுக தமிழ்’ பேரணி தமிழகத்தின் தலைநகரில் நிகழ்வதுதான் பொருத்தமென்று நினைக்கிறேன் நான்.

முத்துக்குமார் என்கிற இளைஞன் 2009ல் தீக்குளிக்காமல் இருந்திருந்தால் மெரினாவில் திரண்ட இளைஞர்களுடன் சேர்ந்து நின்றிருப்பான். அடுத்த போராட்டம் இனப்படுகொலைக்கு நீதி கேட்பதுதான் என்று எடுத்துச் சொல்லியிருப்பான். முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தை மறக்காத தமிழக இளைஞர்கள் முத்துக்குமார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவை இந்த மாதம் கூடுகிறது. இந்தக் கூட்டத்திலும் தான் செய்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டையாக இருக்கப்போகிறது இலங்கை. இலங்கையின் அந்த மோசடிக்கு முட்டுக் கொடுக்கவே மோடி அரசு மீண்டும் முயலும். குற்றவாளி இலங்கையை இவர்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இப்படியொரு இக்கட்டான நிலையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்காகக் குரல் கொடுத்தால் தமிழக இளைஞர்கள் மாணவர்கள் மீதான நம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். ஜல்லிக்கட்டுக்காக உரத்த குரலில் முழங்கியவர்கள் கொல்லப்பட்ட உறவுகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டாமா!