அனைவரும் உணர வேண்டியது……

தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் மதிக்கப்பட்ட இவர்கள் இன்று யாரால் அவமதிக்கப்படுகிறார்கள்….??

சிந்தியுங்கள் உறவுகளே!!!
யாவரும் உங்கள் பிள்ளைகள்.

தாயகத்தின் நிலை கண்டு தினமும் துயருற்று காலம் கழிக்கின்றோம் புலத்தில்…. எங்களால் இதுவரை என்னதான் செய்தொம் அன்று தம்வாழ்வை அர்ப்பணித்து எம்மினத்தை வாழவைத்து, தேசத்தை – மக்களை காத்த போராளிகளுக்கு…?

“களத்தில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பல நிர்மாண வேலைகளை ஆரம்பித்து அவர்களை எந்த கஸ்ரமும் கொள்ளாதபடி மாவீரர்களின் பெயரில் உலகமே வியக்கும் வாழ்வியல் சோலைகள் திறந்து அரவணைத்து காத்தார். அவர்கள் தான் முக்கியம் முக்கியம் அவர்களை நாம் என்றும் காக்க வேண்டும் என்று பல தளபதிகள் – போராளிகள் ஏன் அன்றைய நேரத்தில் வன்னிமண் நோக்கி விரைந்த பல உணர்வாளர்களும் அந்த புனித வேலைத்திட்டங்களை செய்து மனம் மகிழ்ந்தனர்.”

இது பொய்மை இல்லை நாம் அன்றைய காலஓட்டத்தில் கண்ணால் கண்டவைகள்.

இதில் இணைக்கப்பட்ட படத்தில் பாருங்கள் உறவுகளே!

களத்தில் குண்டுபட்டு – கண் – கை – கால் இழந்து விழுப்புண் அடைந்த போராளிகள் எவ்வளவு சந்தோசமாக உள்ளார்கள். ஒவ்வொரு போராளிகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வைத்திருந்தார் எங்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.

ஆனால், இன்று எங்கள் போராளிகளின் இன்றைய நிலைமையில், இதுவரை என்ன செய்தொம் என எம்மை நாமே கேள்வி கேட்டால் தெரியும்…?

இன்றும் அவர்கள் அங்கே சாக நாம் இங்கே என்ன செய்கின்றோம்.

அன்று புலத்தின் கடமைப்புகளுக்கு ஏற்ற வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் முன்னிலையில் பொறுப்புவகித்தவர்கள் இன்று என்ன செய்தார்கள் இவர்களுக்கு…?

இன்று ஒரு போராளி இறந்தால் அவருக்கு என்ன தகமை மற்றும் யார் அவர்களின் மரணச் செய்தியை வெளியிடுவது அவரின் புத்தகம் அது இது என அவர்களின் இறப்பை வியாபாரம் ஆக்க அனைவரின் அறிவும் வேலைசெய்கிறது.

இந்த நூற்றாண்டில் நாம் பார்த்தது. போராளியின் இறப்பில் சிலர் உருக…., சிலர் அவர்களை வைத்து எப்படி வியாபாரம் செய்தனர் என்பதை அண்மையில் பார்த்தோம்.

எதற்காக இறந்தார்கள்…?
இனிவரும் நாட்களில் எப்படி பாதுகாப்பது என ஏன் எம்மால் சிந்திக்க முடியவில்லை….?

சாவது உங்கள் வீட்டு பிள்ளைகள் இல்லை. ஆனால், புலத்தில் வாழும் உறவுகளை ஒவ்வொரு போராளியின் உள்ளமும் தாயாக, தந்தையாக ஓர் உறவின் பிணைப்பில் தினம் தினம் நினைத்தவர்க்ள்; அவர்களை வஞ்சிக்காதே என் இனமே!

சிங்களமும் – பல வல்லாதிக்க சக்திகளும் இன்றும் எங்கள் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தி பயங்கரவாத முத்திரை கொடுத்து தீண்டப்படாதவர்கள் ஆக்கியது.

அதற்கு செயல் வடிவம் கொடுப்பது போன்று, நிலத்திலும் – புலத்திலும் தங்களுக்கு ஏதாவது விளைவு நேரிடும் என அஞ்சி சில உறவுகளும்….

அன்று தாயகத்திற்காக பல வழிகளில் உதவிகள் பலவற்றை செய்தவர்களும் தொடர்ந்து முன்னெடுக்க அவர்களை பல சூழ்நிலைகளில் முடக்கி, சில தடைகளையும் விதித்து அவர்களும் மனம்தளர்ந்து ஏதேதோ காரணம் கூறி ஒதுங்கிவிட்டார்கள் – ஒதுக்கப்பட்டார்கள்.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் புலத்தில் வாழும் உறவுகளைத் தவிர வேறு எந்த நாடும், எந்த அரசும் போராளிகளுக்கு – மக்களுக்கு உதவுவது முடியாத காரியம். எங்கள் உறவுகளைத் தவிர வேறு யார்தான் ஆதரித்து அணைப்பது.

முள்ளிவாய்க்காலின் பின் ஒவ்வொரு அரசும் போராளிகளை அழிப்பதில் மும்முரம் காண்பித்து வருகிறது. ஆனால் எங்களைத் தவிர வேறுயாரும் போராளிகளின் வாழ்வை உறுதிப்படுத்த முடியாது என்பது உண்மையாகும்.

சில உறவுகள் இன்றும் மௌனமாக தம்மால் இயன்றதை உணர்ந்து செய்தவண்ணம்தான் உள்ளார்கள். சிலர் ஒருமாதம் ஒருவேளை உணவுகளை கொடுத்துவிட்டு பத்திரிகை – சில செய்திகளில் தமக்கு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். உங்களை சேவைகளை தெடர்ந்து செய்யுங்கள் உறவுகளே!!!

இன்றும் உரியதை உரியமுறையில் எங்கள் இனம் அங்கு வாழும் மக்களுக்கும் – போராளிகளுக்கும் எம் வாழ்வை காத்தவர்களுக்கும் செய்யவில்லை. தங்கள் நிலையை தக்கவைத்து பயணிக்கின்றனர்.

அண்மையில் கிடைத்த விபரம்படி 100க்கு மேற்ப்படட போராளிகள் இறந்தனர். இப்படி இருக்கையில் வெளிநாட்டில் இருந்து போகும் சில காட்டு மிராண்டிகள் அங்கு வாழும் பிள்ளைகளின் ஏழ்மை நிலையை (வார்த்தை வரவில்லை…) தங்கள் பணத்தால் அவர்களை……………. இப்படியும் உள்ளார்கள் வெறிபிடித்த மனிதங்கள்.

தாயகத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள காடுகள் அண்டிய மற்றும் ஊர்மனைகளில் உள்ள முன்னாள் போராளிகள் – பெண்களின் வாழ்வுகள் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன….? என்றுமே அவர்களின் வாழ்வு இரவுதானா..?

புலத்தில் உள்ள அந்த நிறுவனம், தான் பொறுப்பு அது இது என கூறும் வாய்கள் என்னதான் செய்கின்றன….? புலத்தில் அவர்களின் வீடுகள் மட்டும் மாட மாளிகை மாதிரி அடுக்குகள், கார்கள், கடைகள் அது என உயர்ந்தவண்ணம் தான் போகின்றன.

தாயகத்தை காத்த போராளிகளை முதலில் காப்பாற்றுங்கள் பின்பு பண்பாட்டை உங்கள் பொறுப்புக்கள் சொத்துக்களை காப்பாற்றுங்கள் வாழும் தேசங்களில்.

என்னை மன்னித்துவிடுங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்குடன் இல்லை இன்றும் நடக்கும் சொல்லணா துயர்களை என் தாயவள் இன்றும் அந்த வன்னிமண்ணில் இருந்து பார்த்து வேதனையுடன் கூறியதை வரைத்துவிட்டேன்.

– மனவேதனையுடன் என்றும் அ.ம.இசைவழுதி.

காட்சியில்:- லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் 11ம் ஆண்டை முன்னிட்டு நவம் அறிவுக்கூடப் போராளிகளால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வின்போது நவம் அறிவுக்கூடப் போராளிகள்……

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”