தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது…!
தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.
சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.
சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை.
“அடேல் பாலசிங்கம்”